காரைதீவு சகா-
காரைதீவுக்குள் அத்துமீறிப்பிரவேசித்து முகத்துவாரத்தை வெட்டிய விசமிகள் நால்வரைத்தேடி பொலிசார் வலைவிரித்துள்ளனர்.
இன்று (26) செவ்வாய்க்கிழமை அடைமழை பொழிந்துகொண்டிருக்கையில் காரைதீவு நிந்தவூர் எல்லையிலுள்ள வெட்டுவாய்க்காலில் கரைபுரண்டோடிய வெள்ளநீரை கடலுக்குள் சட்டவிரோதமாக வழமைக்குமாறாக பிழையான இடத்தில் வெட்டிவிட்ட விசமிகள் நால்வரே இவ்விதம்தேடப்படுகிறார்கள்.
இச்சம்பவம் இன்று(26) செவ்வாய்க்கிழமை பகல் இடம்பெற்றது.
வெட்டி ஒரு சில நிமிடங்களில் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறிலிடம் தகவல்கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து பிரதேச செயலகம் கரையோரப்பாதுகாப்பு அதிகாரி மற்றும்சக உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு ஸ்தலத்திற்கு விரைந்தார்.
அங்கு சென்றதும் வழமைக்கு மாறாக ஊரைப்பாதிக்கும்வண்ணம் ஊர்ப்பக்கமாக முகத்துவாரம் விசமிகளால் வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே வெட்டிய பாகத்தை மூடுமாறு உத்தரவிட்டார்.அதனையடுத்துநிலைமைகட்டுப்பாட்டிற்குள்கொண்டுவரப்பட்டது. இல்லாவிட்டால் ஊர் தாண்டிருக்கும் நிலை ஏற்படவாய்ப்பிருந்தது.
அவ்வமயம் கரையோரப்பாதுகாப்பு அதிகாரி பிரதேச சபை உறுப்பினர்களான மு.காண்டீபன் திருமதி எஸ்.ஜெயராணி த.மோகனதாஸ் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர்.
தவிசாளர் கே.ஜெயசிறில் சம்மாந்துறைப்பொலிஸ் பொறுப்பதிகாரி இப்னு அசாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார். பதில்வரவில்லை.அதனால் 119க்கு அழைப்பைஏற்படுத்திமுறையிட்டனர்.
அப்பகுதிக்குரிய பிரதேசசபை உறுப்பினர் சி.ஜெயராணி சம்மாந்துறைப்பொலிசில் நேரடியாக முறைப்பாடு செய்யச்சென்றிருந்தார்.
வழமையாக பிரதேசசபையானது பிரதேசசெயலகம் கரையோரப்பாதுகாப்பு அதிகாரி சகிதம் முகத்துவாரம் வெட்டுவது வழமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

