ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள் அனைவரும், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கே வாக்களிக்க வேண்டும். எமது கட்சியைப் பாதுகாக்கும் வகையில் நாம் எடுக்கும் இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும் என்று, மினுவாங்கொடை தொகுதி ஸ்ரீல.சு.க. பிரதான அமைப்பாளர் ருவன் ரணதுங்க, மினுவாங்கொடை தொகுதி ஸ்ரீல.சு.க. பிரதான காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது,
நான் இம்முறை சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதெனத் தீர்மானித்துவிட்டேன். இந்தத் தீர்மானம், என்னால் மிக நீண்ட காலமாக இருந்தே எடுக்கப்பட்டது. எமது கட்சி ஆதரவாளர்கள் இன்று அநாதரவாளரான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எமது கட்சியை இன்னொரு கட்சிக்கு தாரை வார்த்துக் கொடுப்பதனால், கட்சியை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது.
ஒரு கட்சியை கொள்கை, நோக்கம் மற்றும் நம்பிக்கை என்ற அடிப்படையிலேயே கட்டியெழுப்ப முடியும். இதனால்தான், கட்சியையும் ஆதரவாளர்களையும் காப்பாற்றும் நோக்கில் இவ்வாறான தீர்மானமொன்றை என்னால் எடுக்க வேண்டிய நிலையேற்பட்டது.
இந்தத் தேர்தலில், நாம் சஜித் பிரேமதாஸவை அமோக வெற்றிபெறச் செய்தபின், அவர் சிறந்த வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வாரேயானால், அவருக்கு எமது ஆதரவை தொடர்ந்தும் வழங்குவோம். எனவே, எமது கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் சளைக்காமல் இம்முறை மிக உற்சாகத்தோடு ஆர்வமாக சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, அவருக்கே கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றார்.