ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைவாக போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்கான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அனுஷ்டிக்கப்படும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பொலிஸ் நிலையம் என்பன இணைந்து ஒழுங்கு செய்திருந்த போதைக்கெதிரான நடைபவனியும் சத்தியப்பிரமாண நிகழ்வும் இன்று திங்கட்கிழமை (01) கல்முனை நகரில் இடம்பெற்றன.
கல்முனைப் பிராந்திய உளநல வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷத் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.அலாவுதீன், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.ரிஸ்வின், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.கணேஸ்வரன், கல்முனை பொலிஸ் நிலைய பரிசோதகர் அப்துல் வாஹித், கல்முனை மாநகர சபை சுகாதாரப் பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.ஏ.எம்.அஹ்சன், மாவட்ட சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் பி.பேரம்பலம் உட்பட திணைக்களத் தலைவர்களும் அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்றலில் அனைவரும் போதைக்கெதிராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து முன்றலில் இருந்து ஆரம்பித்த இந்த நடைபவனி பொலிஸ் நிலைய வீதி, ரெஸ்ட் ஹவுஸ் வீதி, சந்தை வீதி மற்றும் மட்டக்களப்பு- அக்கரைப்பற்று நெடுஞ்சாலை ஊடாக சென்று மீண்டும் சுகாதார சேவைகள் பணிமனையை வந்தடைந்தது.
இதன்போது போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.