முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் முஸ்லிம்கள் அனைவரும் இறை நம்பிக்கையுடன் பொறுமை, சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பதற்கு திடசங்கற்பம் பூணுவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் வெளியிட்டுள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று அரசியல், பொருளாதார, சமய ரீதியாக நிந்திக்கப்பட்டு, பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளோம். எமது பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. இதனால் முஸ்லிம்கள் பெரும் பீதியுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் முஸ்லிம்களையும் புனித இஸ்லாம் மார்க்கத்தையும் இறைவன் நிச்சயம் பாதுகாத்து, ஸ்திரப்படுத்துவான் என்று நாம் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம். அதற்கான முயற்சிகளை பக்குவமாக முன்னெடுப்பதே இன்றைய தேவையாகும்.
ஏனைய சமூகத்தினர் எம்மை விரல் நீட்டி குற்றம் சுமத்துகின்ற அளவுக்கு இனியும் எமது செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது. புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று நமது ஈமான் பலப்பட்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இறை நம்பிக்கையுடன் வெற்றியின்பால் செல்வதற்கு திடசங்கற்பம் பூணுவோம்.
அதேவேளை அநியாயமாக கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாத எமது அப்பாவி முஸ்லிம் சகோதரர்களின் விடுதலைக்காக இப்புனிதமிகு நாளில் இறைவனை பிரார்த்திப்போம். ஈத்முபாரக்.