கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை ஆகியவற்றிட்கு வரும் வறிய மற்றும் தூரப் பிரதேச மக்களுக்கு மனிதாபிமான நோக்குடன் இலவசமாக உணவுகளை விநியோகம் செய்துவந்த எக்ஸ்போ லங்கா "ஜனபோஷ (முஸ்லிம்) பெளண்டேஷன்", அதன் வைத்தியசாலை இலவச உணவு வேலைத்திட்டத்தை, (26) செவ்வாய்க்கிழமை முதல் கை விடுவதாக அறிவித்துள்ளது.
ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, இதற்கு எதிராக நடைபெற்ற இனவாதப் பிரச்சாரங்களை அடுத்தே, தற்போது இவ் இலவசச் சேவை நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்து்ளது.
கொழும்பு மற்றும் மஹரகம பிரதான வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் அமைந்த, மிகப் பெறுமதியான காணிகளை விலை கொடுத்து வாங்கி, இந்த வைத்தியசாலைகளுக்கு வரும் ஏழைகளுக்கு இலவசமாக காலை மற்றும் மதிய உணவுகளை ஒரு முஸ்லிம் வள்ளல் வழங்கி வந்தது அறிந்ததே.
ஒரு நாளைக்கு சுமார் மூவாயிரம் (3000) உணவுப் பார்சல்கள் இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
கடந்த நான்கு வருடங்களாக இந்த மகத்தான பணி நடைபெற்று வருகிறது.
கிளினிக் மற்றும் வார்ட் தொகுதிகளில் உள்ள தாதிமார்களிடம் இதற்கான டோக்கன் கார்ட்டுக்கள் (ரிக்கட்டுக்கள்) வழங்கப்பட்டு, அவர்கள் ஊடாக அங்கு வரும் ஏழை நோயாளர்களுக்கு இதனைப் பகிர்ந்தளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
எனினும், அண்மைக்காலமாக (பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த) செல்வாக்குள்ள அரசியல் வாதி ஒருவரினால் கிளப்பிவிடப்பட்டிருக்கும் இனவாதப் புரளி காரணமாகவே, மேற்படி இலவச உணவு வழங்கும் திட்டத்தை "ஜனபோஷ பெளண்டேஷன்" நிறுவனம்", (26) செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
குறித்த "ஜனபோஷ பெளண்டேஷன்", பிரபல "எக்ஸ்போ லங்கா" நிறுவனத்தின் உரிமையாளருக்கு (ஹாஜியாருக்கு) சொந்தமானதென்பது குறிப்பிடத்தக்கது.