தென்கிழக்குபல்கலைக்கழக தமிழ்த்துறைப்பேராசிரியர் றமீஸ்அப்துல்லா!
காரைதீவு நிருபர் சகா-கடந்த ஒருமாதகாலம் குரலற்ற ஒரு சமுகமாக அல்லல்பட்டிருக்கிறோம். எமது கண்களை நாமே குத்தியிருக்கிறோம்.பல்வகைமையுள்ள ஒரு நாட்டில் வாழ்வதற்கான தகைமைகள் இழக்கச்செய்யப்படிருக்கின்றன .எம்மை நாம் மீள்வாசிப்புச்செய்யத்தவறியிருக்கிறோம். ஒரு தீவிரவாதக் குழுவால் உயிரற்ற சட சமுகமாக மாற்றப்பட்டுள்ளோம். பல தவறுகள் விடப்பட்டிருக்கின்றன. அவற்றைநாம் ஒத்துக்கொண்டேயாக வேண்டும்.
இவ்வாறு சம்மாந்துறையில் நடைபெற்ற நூல் வெளியீட்டுவிழாவொன்றில் உரையாற்றிய தென்கிழக்குபல்கலைக்கழக தமிழ்த்துறைப்பேராசிரியர் றமீஸ்அப்துல்லா கவலையோடு தெரிவித்தார்.
சம்மாந்துறையைச்சேர்ந்த சபரகமுவ பல்கலைக்கழக தமிழ் சிறப்புக்கலைiமாணி விசேட பட்டப்படிப்பை பூர்த்திசெய்த மாணவி ஏ.ஆர்.பாத்திமா றுமைசா தனது ஆய்வுக்காக ஆக்கிய 'மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் இலக்கியங்களில் கவிதைகள் - ஓர் ஆய்வு' என்ற நூல் வெளியீட்டுவிழா நேற்று(26) ஞாயிற்றுக்கிழமை மாலை சம்மாந்துறையில் நடைபெற்றது.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் அதிபர் முத்து இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேசசபைத் தவிசாளர் எ.எம்;.எம்.நௌசாட் சிறப்பதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
பேராசிரியர் றமீஸ் அப்துல்லா மேலும் பேசுகையில்:
வாழ்க்கையை செப்பனிட சமயம் உதவும்.இலக்கியம் எம்மைச் சரியாக வழிநடாத்தியிருந்தது. அது வாழ்வின் ஓரங்கம். சமயம் சடங்குகள் இலக்கியங்கள் எமது வாழ்வியலை உயிரோட்டமுள்ளதாக மாற்றுகின்றன. 72கன்னியர்களுடன் சொர்க்கத்தில் வாழும் கேலிக்கிடமான சமயதீவீரவாதம் பற்றி இன்று பேசப்படுகின்றது. எமது மனைவிமார்பற்றி கவலைப்படவேண்டும்.
எமது கலை கலாசாரம் பண்பாடுகளை மறந்துள்ளோம். மததீவிர சிந்தனையில் மாற்றப்பட்டுள்ளோம். எந்தவொரு சமயமும் சமயதீவீரவாதத்தை அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்டவர்களை உலகம் புறந்தள்ளும். நல்லவழிமுறைகளை மறுமைநெறிகளை காட்டும் புனிதசமயத்தில் வாழ்ந்த நாம் தீவீரவாதசமயத்தின் பின்னால் ஈர்க்கபட்டுள்ளோமா? என்ற சிந்தனை எழுகின்றது.
சில இளைஞர்களின் தீவீரவாதத்தால் முழு சமுகமும் அடித்து நொறுக்கப்பட்டு மண்ணோடு மண்ணாய்ப்போன நிலை எழுந்துள்ளது. பல்வகைமைநாட்டில் வாழும் தகுதியை இழந்துள்ளோம்? ஓரு குழுவால் உயிரற்ற சடசமுகமாக மாற்றப்பட்டுள்ளோம்.
எமது சுயநிர்யணஉரிமையை மனிதஉரிமைகளை மதஅடையாளத்தை நாமே தொலைத்துள்ளோம்.
கத்னா வைபவத்தின்பின்னர் களிகம்பாட்டம் ஆடியதை எந்த இஸ்லாம் தடைசெய்தது? வழமையான பண்பாட்டு அமிசங்களை நாம் ஏன் புறக்கணித்தோம்? புகாரி கிரந்தம் படித்தோமா? நெய்ச்சோறு வரலாற்றைப்படித்தோமா? சமயநூல்களை இலக்கியநூல்களை வாசிக்கத்தவறியிருக்கிறோம்.
சில பள்ளிவாசல் குத்பாக்களில் திவீரசிந்தனை மதவாதிகளை பேசவைத்ததும் தவறுதான். சடங்ககளிலிருந்து தேவையில்லாமல் வெளியேறியிருக்கிறோம்.
எமது பாரம்பரிய கலாசாரங்களை திரும்பிப்பார்க்கவேண்டும். அவற்றை எதிர்காலசந்ததிக்கு எத்திவைக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.
எமது இனம் ஏனைய இனங்களோடு சகவாழ்வுடன் வாழ்வதற்கு கற்றுக்கொள்ளவேண்டும். அவர்களது கலாசாரங்களை மதிக்கவேண்டும். ஏனைய இனத்தவர்க்கு மதத்தவர்க்கு மதிப்பளிக்கவேண்டும். என்றார்.
மணிப்புலவர் மருதூர் எ மஜீத் பிரதேசசெயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா முன்னாள் அதிபர் எம்.ஏ.சலாம் ஆகியோர் உரையாற்ற நூலாசிரியை பாத்திமா றுமைசா ஏற்புரையாற்றினார்;.
முதல் பிரதியை புரவலர் அல்ஹாஜ் இசட்.ஏ.பஸீர் பெற்றுக்கொண்டார்.
இறுதியில் நோன்புதுறக்கும் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.