அம்பாறை மாவட்டத்தின் #காரைதீவு
பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் ,அழிவடைந்த ஒரு ஆன்மீகத் தளத்தினதும், சியாறங்களினதும் பதிவே இதுவாகும்.
#அமைவிடம்
காரைதீவு பிரதான வீதியின் முச்சந்தியில் இருந்து, நிந்தவூர் நோக்கிச் செல்லும் வழியில், கிட்டத்தட்ட 500 M பயணம் செய்த பின்னர் எமது வலது புறத்தே வயல் பகுதியை நோக்கிச் செல்லும் குறுக்கு வீதியை எல்லையாக்க் கொண்டு பிரதான வீதியில் அமைந்துள்ள " #பக்கீர்ச்சேனை" காணியில் ஒரு சிறிய பற்றைக் காடாக காட்சி தரும் மேட்டு நிலப் பிரதேசத்தில் அழிவடைந்த கட்டிட இடிபாடுகளையும் , சியாறங்களினையும் காண முடியும்,
#வரலாறு,
இங்கு அமைந்திருந்த 6
அறைகளைக் கொண்ட தைக்காப்பள்ளியும், அதிலுள்ள 2 சியாறங்களும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களினது மட்டுமல்ல அகில இலங்கை முஸ்லிம்களினதும், இருப்பியல் வரலாற்றிலும் ,இன உறவிலும், ஆன்மீக செயற்பாடுகளிலும் நீண்ட காலமாக முக்கியமான செல்வாக்கைப் பெற்றிருந்த ஒரு பிரதேசமாகும்,
இங்கு அமைந்துள்ள #நூர்கலிபா(வலி), #மலங்கு(வலி) ஆகியோர் இந்தியாவில் இருந்து வந்த பக்கீர்களாகவும், உயர் அற்புதம் நிறைந்தவர்களாகவும், கருதப்படுகின்றனர், இவர்கள் இப்பிரதேசத்திற்கு மட்டுமல்ல சர்வதேச மற்றும் ,நாடளாவிய ரீதியிலும் ஆன்மீகப் பணி புரிந்து விட்டு இவ் இடத்தில் தங்கி இருந்து ,குறித்த தைக்காப் பள்ளியை தமது மைய இடமாக்க் கொண்டு, அற்புதங்களையும் நிகழ்த்தி பலநூறு சீடர்களுக்கு, ஆசி வழங்கிய இடமாகவும், தொழுகை இடம் பெற்ற இடமாகவும் இது உள்ளது, இங்கு பக்கீர்கள் நீண்ட காலமாக வாழ்ந்தனாலேயே இக் காணிக்கு இன்றும் #பக்கீர்சேனை எனப்படுகின்றது,
#முக்கியத்துவம்
இந்தப் பிரதேசம் இன்று பற்றைக்காடாக மறைக்கப்பட்டிருந்தாலும், இலங்கை முஸ்லிம் அடையாளங்களிலும், வரலாற்றிலும் மிக முக்கியமான #அகிலஇலங்கை #முஸ்லிம் #பக்கீர் #ஜமாஅத்தின்தலைமைக் காரியாலயமாகச் செயற்பட்டிருந்த அதே வேளை, 1960 ம் ஆண்டு ,நாடளாவிய ரீதியில் வாழ்ந்த பக்கீர்மார் ஒன்றிணைந்து தமது #தேசிய மட்டத்திலான #மாநாட்டை (National Conference) சர் கலீபா மெஹத்தப் அலிஷா..அவர்களின் தலைமையில் .. நடாத்திய இடமாகவும் இவ்விடம் விளங்கிறது,,
இலங்கை முஸ்லிம்களின் புராதன அடையாளத்தினதும், சர்வதேசத் தொடர்பினதும் ,குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களின் இந்தியத் தொடர்பினை உறுதிப்படுத்த எஞ்சி இருந்த்தும் , #சூபித்துவபண்பாட்டினது சின்னமாகவும் கருதப்பட்ட இச்சியாறங்களுடன் கூடியதும் . பக்கீர்மாரின் ஒரே ஒரு தலைமைக் காரியாலயமாகவும்,அவர்கள் ஆன்மீகத் தீட்சை பெறும் இடமாகவும் 1988 இனக்கலவரம் வரை இவ்விடம் காணப்பட்டிருக்கின்றது,
#இனஉறவின் அடையாளம்,
குறித்த காணியும், அதனைச் சுற்றியுள்ள பிரதேசமும் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசமாக இருந்தாலும், இங்கு பல்வேறு பட்ட திக்ர், கொடியேற்றல், பக்கீர் பைத், தியான நிகழ்வுகளும், கந்தூரி அன்னதானங்களும், மார்க்க உபதேசங்களும் இடம்பெற்றிருக்கின்ற அதே வேளை அதில் ,முஸ்லிம்களுடன் இணைந்து அதிகளவான தமிழ் மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் இடமாகவும் இன உறவுக்கான முக்கிய மையமாகவும் இருந்திருப்பதுடன்,சுற்றி உள்ள ஊர்களை இணைக்கும் ஓர் சந்தோசமான இடமாகவும் இருந்திருக்கின்றது, இதனை இன்றும் இப்பிரதேச முதியோர்கள் தமது இனிய அனுபவமாக நினைவு கூருகின்றனர்,
#இன்றையநிலை
குறித்த இடம் , மாவடிப்பள்ளியில் வாழ்ந்த செயின் மௌலானா அவர்களினால் சாய்ந்தமருது- மாளிகைக்காடு நம்பிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்பட் பின்னர், குறித்த காணி வருடா வருடம் பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருமானம் பெறப்படுகின்ற அதே வேளை ,குறித்த காணிக்குச் சொந்தக்காரர் களாகவும் , இப்பிரசேசத்தின் இருப்பிற்கும் சமய வளர்ச்சிக்கும், இன உறவுக்கும் ,பாடுபட்ட பெரியார்களின் இடங்கள் கவனிப்பாரற்று பராமரிப்பின்றியும், வீதி, கால்வாய் அபிவிருத்தி போன்ற வேலைத் திட்டங்களினால் முற்றாக அழிந்து விடக்கூடிய அச்ச நிலையிலும் காணப்படுவது மிகவும் கவலைக்குரியது,
#செய்யவேண்டியது #என்ன?
#சாய்ந்தமருது - #மாளிகைக்காடு பள்ளிவாசலுக்கு சொந்தமாகக் காணப்படும் இவ் இடத்தை அதன் ,நிர்வாகத்தினரோ, ஆர்வமுள்ளவர்களோ அவசரமாக இவ்விடயத்தில் தமிழ் சகோதரர்களுடன் பேசி, பல தலைமுறையினரின் இன உறவினதும், ஆன்மீக நம்பிக்கையினதும் வரலாற்று இடமான இவ் இடத்தைத செப்பனிட்டு ,பராமரித்து பாதுகாக்கவும், பொது மக்கள் தமது வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் இடமாகவும் கட்டமைக்க முன்வர வேண்டும். இது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று இருப்பிற்கு செய்யும் பணி மட்டுமல்ல, இது இப்பிரதேச தமிழ்- முஸ்லிம் இன உறவின் இன்னொரு அத்தியாயமாகவும் அமையும்,
சிறந்த உதாரணம் ,
உரிய முறையில் அணுகும் போது இந்த இடத்தை பாதுகாப்பதில் தமிழ் சகோதரர்களின் ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு, ஏனெனில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள #புளியம்போக்கர்,சியாறம் உட்பட பல சியாறங்கள் தனியாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் இன்றும் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது,
எனவேதான், இப்பிரதேசத்தின் இருப்பிலும், வரலாற்றிலும், இன உறவிலும், முக்கியமான இடம் வகித்த பல நூறு வருட பாரம்பரியமிக்க சியாறங்களும், பக்கீர் சமூகத்தின் இடமும் , பாதுகாக்கப்படாமல் பொறுப்பு வாய்ந்தவர்களால் தொடர்ந்தும் #அசிரத்தையாகவிடப்படுமாயின் எம் முன்னோரின் வரலாற்றை நாமே அழித்தது மட்டுமல்ல ,எதிர்கால சந்த்தியினரை வரலாற்றின் இருண்ட இடை வெளிக்குள் விட்டுச் சென்ற பழிச் சொல்லுக்கும் ஆளாக வேண்டி வரும், இதற்கு நல்ல. உதாரணம் ..
சியாறங்களை பராமரிக்காது விடப்பட்டிருந்த காரைதீவு முச்சந்தி சியாறத்திற்கும் ,அதன் காணிக்கும் நடந்த நிலைமையே எதிர்காலத்தில் பக்கீர்ச் சேனைக்கும் இடம் பெறலாம்,
எனவேதான் உரிய நிர்வாகிகள் இதுவிடயத்தில் அவசரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், எம் சமூகத்தினதும், பண்பாட்டினதும் பாரம்பரியத்தையும், இன ஒற்றுமையினையும் பாதுகாக்க முன்வருவதும், அதனை வலியுறுத்துவது புத்திஜீவிகளினதும், பொதுமக்களதும் கட்டாய கடமையாகும், ,
MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA




