பாடசாலை மாணவியொருவரின் பெயரில் போலி பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்கி அதில் தேவையற்ற புகைப்படங்கள், தகவல்களை பதிவிட்டவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனையைச் சேர்ந்த மாணவி ஒருவரின் பெயரில் இவ்வாறு பேஸ்புக் கணக்கு இயக்கப்பட்டு அதில் அம் மாணவி மற்றும் அவருடைய பெற்றோர்களின் புகைப்படங்களுடன் வேறு தேவையற்ற புகைப்படங்களும் பதிவிடப்பட்டு வருகின்றதோடு அம் மாணவியின் பெற்றோரின் தொலைபேசி இலக்கமும் பதிவிடப்பட்டுள்ளது.
அத் தொலைபேசி இலக்கத்துக்கு பலரும் தொடர்பினை ஏற்படுத்தி உங்களது புகைப்படங்களோடு சேர்த்து அசிங்கமான புகைப்படங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதைக் கண்டு கொண்ட மாணவியின் பெற்றோர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட முரன்பாடு ஒன்றின் காரணமாக இவ்வாறு வேண்டத்தகாத காரியத்தை நபரொருவர் மேற்கொண்டுள்ளதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர்.
குறித்த பேஸ்புக் பக்கத்தில் அந்த நபர் வேண்டத்தகாத விடயங்களை பதிவிடுவதினால் எங்களது பிள்ளை மனம் நொந்து காணப்படுவதாகவும் பெற்றோர் மேலும் தெரிவித்தனர்.
இம் முறைப்பாடு தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
