அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர்
பாறுக் ஷிஹான்- திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான பொறிமுறைத் திட்டங்கள் இல்லாமையினால் காட்டு யானைகளின் தொல்லை தினமும் அதிகரித்து வருவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்துள்ளார்.
குப்பைகளினால் மின்சார உற்பத்தியை முன்னெடுப்பது குறித்து அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை(26) அன்று கொரிய தூதுக்குழுவுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளக்காட்டுப் பிரதேசத்திற்கு சென்று பார்வையிட்டுட்ட பின்னர் மேற்கண்டவாறு கூறினார்.
எமது பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றோம்.குறித்த குப்பைகளை மீள்சுழற்சி செய்யவோ அவற்றை உடனடியாக அகற்றவோ வாகன வசதிகள் இல்லை.இந்த குறைபாடு தொடருமானால் இக்குப்பைகளை தினமும் உண்ண வரும் யானைகளை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.
இப்பகுதிக்கு தினமும் 50 முதல் 60 வரையான யானைகள் டன் கணக்கில் குப்பைகளை உண்ண வருகின்றன.இவைகள் எமது ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்களை மேற்கொள்கின்றன.இதனால் குப்பைகளை அகற்றுவதில் அவ்ஊழியர்கள் அச்சப்படுகின்றனர் என்றார்.
அத்துடன் கொட்டப்படும் குப்பைகளை காட்டு யானைகள் உண்ண பழகியுள்ள அதே வேளை குப்பைகளுடன் கொட்டப்படும் பொலிதீன் போன்ற உக்காத பொருட்களை அக்காட்டு யானைகள் உட்கொள்வதால் அவை உயிராபத்தை எதிர்நோக்கி வருவதை காண முடிகிறது.
இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களம் உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தப்பட்ட போதிலும் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என மேலும் குறிப்பிட்டார்.