முஸ்லிம் கவுன்சில் ஏற்பாட்டில் (24) பொரளை செற்றக் மண்டபத்தில் தற்கால அரசியல் சீர்திருத்தமும் எதிா்காலத்திலான தோ்தல்முறைமையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் சட்டமுதுமானி வை.எல்.எஸ்.ஹமீீட் ஆற்றிய உரையிலிருந்து,
கலப்புத் தேர்தல் என்பது விகிதாசாரத் தேர்தல் அல்ல. ஆனால் விகிதாசார முறையில் கணக்கிடுகின்ற தேர்தல். விகிதாசாரத் தேர்தல் என்பது, ஒவ்வொரு கட்சிகளும் பெறுகின்ற வாக்குகளின் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்களைப் பங்கிடுகின்ற தேர்தலாகும். கலப்புத் தேர்தலில் தொகுதியில் போட்டியிடுகின்ற ஒருவருக்கு வாக்குகள் அளிக்கப்படுவதுடன், அதே வாக்குகள் கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளாக கருதப்படுகின்றன. ஆனால் விகிதாசாரத் தேர்தல் நடைமுறையிலுள்ள நாடுகளில் கட்சிக்கு ஒரு வாக்கும், வேட்பாளருக்கு ஒருவாக்கும் அளிக்கப்படுகின்ற இரட்டை வாக்கு முறைமை காணப்படுகின்றது. ஆனால் இங்கு அளிக்கப்படுகின்ற வாக்கு கட்சியின் வாக்காகவும் கருதப்படுவதே பிரச்சினையாக இருக்கிறது. சிறிய கட்சிகள் இதில் பாதிக்கப்படுகின்றன.
எமக்கு கிழக்கில் பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் கிழக்கிற்கு வெளியில் நாம் மிகவும் சிதறி வாழுகிறோம். குருநாகல் மாவட்டத்தில் சுமார் 120 000 அளவில் முஸ்லிம்கள் வாழுகிறார்கள். ஆனால் ஒரு தொகுதியில் கூட பெரும்பான்மை இல்லை. இதனால் ஒரு முஸ்லிம் வேட்பாளரை பெரும்பான்மைக் கட்சிகள் நிறுத்துவது சந்தேகம். முஸ்லிம் கட்சிகள் நிறுத்தினாலும் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு என்பதால் முஸ்லிம்கள் அதிகம் வாக்களிக்கவும் மாட்டார்கள். இதனால் 50 : 50 முறையில் தொகுதி அடிப்படையில் முஸ்லிம்கள் யாரும் குருநாகல் மாவட்டத்தில் தெரிவாக மாட்டார்கள் (விதிவிலக்குகள் நடந்தால் தவிர
மற்றைய 50 வீதமான பட்டியல் முறையை எடுத்துக் கொண்டால், ஒரு உதாரணத்திற்கு குருநாகல் மாவட்டத்தை எடுத்துக் கொள்வோம். அந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி அதிக தொகுதிகளை வென்றால், பட்டியலில் குறைந்த ஆசனங்களே கிடைக்கும். தொகுதிகளில் வென்றவர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருப்பார்கள் என்பதால் அந்த ஆசனங்களைப் பெண்களுக்கே வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதனால் அவர்கள் எமக்கு ஆசனங்களைத் தருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. கிழக்கில் இரண்டு வகையிலும் 50 : 50 ஆசனங்களைப் பெறலாம்.
கிழக்கில் சிறிய வித்தியாசங்கள் ஏற்பட்டாலும், பெரிய பாதிப்பு இல்லை. மட்டக்களப்பில் ஒரு தொகுதி கூட எமக்கு இல்லை. என்றாலும் அங்கு தொகுதிகளை வெல்லாமல் விகிதாசார முறையில் ஆசனங்களைப் பெற முடியும். தீர்வு என்ன? விகிதாசார முறைமை திரும்ப நடைபெறுமாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் கலப்புத் தேர்தல் முறைமையில் தேர்தல் நடைபெறுமாக இருந்தால்? இந்தத் தேர்தல் முறைமை Mixed Member Proportional Representation System என்றாலே கட்சிகளுக்குக் கிடைக்கின்ற வாக்குகளுக்கு ஏற்ப உறுப்பினர்கள் பகிரப்படும் முறைமையாகும். ஆனால் இங்கு நடப்பது என்ன? வேட்பாளருக்குக் கிடைக்கும் வாக்குகள் கட்சிகளின் வாக்குகளாகக் கருதப்பட்டு ஆசனங்கள் பகிரப்படுகின்றன. இதற்கு Mixed Member Proportional Representation System பெயர் வைத்திருப்பதே பிழையாகும்.
இதற்கான தீர்வு இரட்டை வாக்காகும். ஆனால் அதனைக் கையாள்வதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. உதாரணமாக கொழும்பு மாவட்டத்தில் 100 உறுப்பினர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அளிக்கப்படும் வாக்குகள் கிட்டத்தட்ட 10 இலட்சம். X எனும் கட்சி தனது தொகுதி வேட்பாளர் பட்டியலில் 50 வேட்பாளர்களை இடுகிறது. பட்டியலில் 50 டம்மிகளை இடுகிறது. அல்லது இயக்கம் இல்லாத Y கட்சியின் தொகுதிகளின் பட்டியலில் 50 டம்மிகளையும், பட்டியலில் உண்மையான வேட்பாளர்களையும் இடுகிறது. இட்ட பின் மக்களிடம் சென்று, "நீங்கள் தொகுதிக்கான வாக்கினை எமக்கு அளித்து விட்டு, வேட்பாளருக்கான வாக்கினை Y கட்சிக்கு அளியுங்கள்" என்று கூறுவார்கள் (நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும்). இதன் போது மோசடிகளும், பாரிய Over Hanging ஆசனங்களும் வரும் நிலை ஏற்படும்.
இதனை தடுப்பதற்கு அரசாங்கம் பெரியதொரு வெட்டுப்புள்ளியை கொண்டு வர யோசிக்கலாம். உதாரணமாக 25 வீதம் அளவில் வாக்குகளைப் பெற்றாலே ஆசனம் ஒதுக்கப்படும் என்று யோசனை. ஆனால் இதற்கும் மேலாக மாற்றுத் தீர்வு பற்றி கலப்புத் தேர்தல் நடைமுறையிலுள்ள நாடுகளிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நாம் கலந்துரையாடப்படுவதே சிறந்த வழி. பழைய முறையில் நடாத்துங்கள் என்று வெறுமனே கூறிக் கொண்டிருக்காமல் அதற்கான மாற்று வழிகளையும் பார்க்க வேண்டும். ஆனால் பழைய முறையில் நடாத்துவது நல்லதுதான்.
இன்று SLFP தவிர ஏனையோர் பழைய முறைமையை விரும்புகிறார்கள். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகளைப் பார்த்து ஆகும். ஆனால் மாகாண சபைத் தேர்தல் அதே போன்ற முறையில் இருந்தாலும் வித்தியாசமானது. உதாரணமாக, முன்பு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அதிக வாக்குகளை வென்ற கட்சி தவிசாளரை நியமிக்கலாம். 50 வீதம் தேவையில்லை. ஆனால் புதிய உள்ளுராட்சித் தேர்தலில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் புதிய தேர்தல் முறையிலும் பிழையில்லை. பிரச்சினை என்னவென்றால் மேயர்/தவிசாளரை தெரிவு செய்வதில் உள்ள சிக்கலாகும். ஏனென்றால் 50% ஆசனங்களை வெல்வது மிகவும் கடினமாகும். பாராளுமன்ற தேர்தல் வரலாற்றிலும் இரு தடவைகளே விகிதாசார முறையில் 50% ஆசனங்கள் வெல்லப்பட்டுள்ளன.
இதனால்தான் பழைய முறையில் கூடுதலான ஆசனம் பெற்ற கட்சிக்கு தவிசாளர்/மேயர் நியமிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் புதிய முறையில் தவிசாளர்/மேயர் நியமிக்கப்படும் போது பகிரங்கமாகவோ அல்லது இரகசியமாகவோ வாக்கெடுப்பு நடாத்தப்படுகிறதுடன், திரை மறைவில் விளையாட்டுக்களும் நடைபெறுகின்றன. இதனால் அதிக ஆசனங்களை வென்ற கட்சி
தோல்வியடைவதுடன், தோல்வியடைந்த கட்சி ஆட்சியமைக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
ஆனால் புதிய மாகாண சபைத் தேர்தல் முறையில் யாருக்கு அதிக ஆசனங்கள் இருக்கிறதோ அவருக்கு ஆட்சியமைக்கும் சந்தர்ப்பத்தினை ஆளுனர் வழங்கலாம். 100 பேர் உள்ள சபையில் (கூடுதலான ஆசனங்கள்) 50 அல்லது 40 ஆசனங்களை பெற்றாலும் ஆட்சியமைக்கலாம். அதாவது 13ஆவது திருத்த சட்டத்தில் உள்ள முதலமைச்சரை நியமிக்கும் முறையில் மாற்றம் இல்லை.
தற்போது கலப்புத் தேர்தலுக்காக மீளாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம் குறித்த குழு இரு மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் அறிக்கையை வர்த்தமானியில் ஜனாதிபதி பிரசுரிப்பார். அதனை ஏற்பது அல்லது நிராகரிக்கும் வேலையை அவர் செய்ய மாட்டார். அத்துடன் இரு மாதங்கள் என்று கூறிவிட்டு மேலும் சில காலங்கள் அவர்கள் இழுத்தடிப்பு செய்யலாம்.
சில வேளை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டு உச்சநீதிமன்றம் வரை செல்லலாம். அவ்வாறு சென்றால், இழுத்தடிக்கப்பட்டு தற்போது இருக்கும் திருத்தப்பட்ட தேர்தல் முறை நீக்கப்பட்டு பழைய முறைமையில் தேர்தல் நடாத்துமாறு அறிவிக்கப்படலாம். ஆனால் இவ்வாறு நடக்காமல் அது வெற்றி பெற்று புதிய முறையில் ஒருமுறை தேர்தல் நடந்தால், பெரிய கட்சிகள் அதனையே தொடர விரும்பும். அதில் ஆளுனரே முதலமைச்சரே தெரிவு செய்வார்.
இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலானது பழைய முறையில் நடைபெற்றால் எமக்கு சந்தோசம். இங்கு பொதுத் தேர்தலில் இரட்டை வாக்குச் சீட்டு முறையினை கொண்டு வரப்போகிறார்கள். அதிலும் ஆபத்து இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் அந்த முறை செயற்பாட்டில் உள்ள நாடுகளுக்கு ஒரு குழுவை அனுப்ப வேண்டும். அங்கு போய் நாங்கள் படிக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் இன்னும் அனுபவிக்கவில்லை. அரசாங்கத்திடம் சென்று நீங்கள் விகிதார ரீதியில் தேர்தலை வையுங்கள், கலப்பு என்றால் இரட்டை வாக்கு முறையில் வையுங்கள் என்று கோரிக்கை விடுங்கள். இல்லாமல் காலம் தாழ்த்தினால் எங்களுடைய நிலைமை ஆபத்தானது.
முஸ்லிம் அரசியல் பலத்தை உடைப்பதில் பேரினவாதம் ஒருமித்த கருத்தில் இருக்கிறது. எனவே புதிய தேர்தல் முறையில் இரட்டை வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்துவதில் உள்ள சாதக, பாதகங்களை அறிய அது தொடர்பான நிபுணர்களை அணுகி, அதனைக் கற்பதற்காக ஒரு குழுவை தயாரித்து அந்த நாடுகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.
