"நான் ஹிட்லர் போன்று செயற்படவில்லை; பொம்மை முதல்வராக இருக்கவும் தயாரில்லை"

கல்முனை முதல்வர் றகீப் சூளுரை..! 

அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்-
"மாநகர சபை கட்டளைகள் சட்டத்தில் முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையே நான் பயன்படுத்தி வருகின்றேன். எதிரணியினர் கூறுவது போன்று ஹிட்லர் போன்று செயற்படவுமில்லை, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடவுமில்லை. எதிரணியினர் எதிர்பார்ப்பது போன்று பொம்மை முதல்வராக இருக்கவும் நான் தயாரில்லை" என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு முதல்வர் றகீப் மேலும் தெரிவிக்கையில்;

"கல்முனை மாநகர சபையில் நிதி மோசடிகள் இடம்பெறுவதாகவும் மாநகர முதல்வராகிய நான், ஹிட்லர் போன்று செயற்பட்டு, வரம்பு மீறி தன்னிச்சையாக அதிகாரங்களை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டு எமது மாநகர சபையின் எதிரணி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கையெழுத்திட்டு, சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் கையளித்திருப்பதுடன் என்னை பதவியில் இருந்து அகற்றுமாறும் கோரியுள்ளனர்.
அத்துடன் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். பாவம் அவர்கள், சட்டம் தெரியாமல், சும்மா வரிந்து கட்டிக் கொண்டு திரிகின்றனர்.

முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்றே எதிரணியினர் செயற்படுகின்றனர். உண்மையில் கல்முனை மாநகர சபையில் என்ன நடைபெறுகிறது என்பதில் எல்லோரும் தெளிவு பெற வேண்டும். எதிராணியினரின் குற்றச்சாட்டுகளில் ஒன்று மாதாந்த கணக்கறிக்கை வெளிப்படுவதில்லை என்பதாகும்.
மாநகர சபையின் வரலாற்றில் எந்தவொரு முதல்வரின் காலத்திலும் மாதாந்த கணக்கறிக்கை பொதுச் சபையில் சமர்ப்பித்த சரித்திரமே கிடையாது. முன்னைய ஐந்து முதல்வர்களின் காலத்தில் நானும் ஓர் உறுப்பினராக தொடர்ச்சியாக பணியாற்றியுள்ளேன். அவ்வேளையில் மாதாந்த கணக்கறிக்கை கணக்காளரினால் தயாரிக்கப்பட்டு, நிதிக்குழுவில்தான் சமர்ப்பிக்கப்படும். ஆகவே வழமையாக இருந்து வருகின்ற ஒரு நடைமுறையையே நான் பின்பற்றி வருகின்றேன்.

எமது பெக்கோ வாகனத்திற்கான டயர் மஞ்சந்தொடுவாயில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அப்படியென்றால் ஏன் கல்முனையில் வாங்கவில்லை என்று எதிரணி உறுப்பினர்கள் கேட்கிறார்கள். கொட்டேஷன் கோரப்பட்டு, குறைந்த விலை சொல்லப்படுகின்ற இடத்தில்தான் பொருள் கொள்வனவு செய்யப்படுவது வழமை. அதே நடைமுறையே பெக்கோ டயர் கொள்வனவிலும் கைக்கொள்ளப்பட்டுள்ளது.
முதல்வரின் உத்தியோகபூர்வ வாகனம் திருத்தப்பட்டதிலும் பிரச்சினை எழுப்பப்படுகிறது. இதற்கு நிதிக்குழுவின் அங்கீகாரம் பெறப்படவில்லையாம். கடந்த ஆறு வருட காலமாக பாவிக்கப்பட்டு வருகின்ற இந்த வாகனம் இதுவரை பாரிய திருத்த வேலை செய்யப்பட்டு, பராமரிக்கப்படவில்லை. இதனால் வாகனத்தின் கண்டிஷன் சரியாக இல்லை என சாரதியினால் கூறப்பட்டதற்கமைவாக கொழும்பிலுள்ள நிஸாம் கம்பெனிக்கு அனுப்பி பரீட்சித்தபோது, இன்னும் 250 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வாகனத்தின் இன்ஜின் இறுகிவிடும் என்ற அறிக்கை கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து உரிய கொட்டேஷன் கோரப்பட்டு, ஒப்பந்தம் எல்லாம் செய்யப்பட்டு, இந்த வாகனம் திருத்தப்பட்டுள்ளது. இதற்கு நிதிக்குழுவின் அங்கீகாரம் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் இந்த வாகனத்தை திருத்தம் செய்யாமல் அப்படியே கைவிட வேண்டுமென்றா எதிர்பார்க்கிறார்கள்?
அது போன்றே, பல வருடங்களுக்கு முன்னர் பொருத்தப்பட்டு, பழுதடைந்த நிலையில் இருந்த சி.சி.ரி.வி. பாதுகாப்பு கமரா System மீளமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவும் முறைப்படி கொட்டேஷன் கோரப்பட்டு, சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இதற்கும் நிதிக்குழுவின் அனுமதி பெறப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நிறைய சொத்துக்களும் வாகனங்களும் உள்ள கல்முனை மாநகர சபையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு முதல்வராகிய எனக்கும் நிர்வாகத்திற்கும் உள்ளது. அவசரமாக செய்யப்பட வேண்டிய இவ்வேலைக்கு நிதிக்குழுவினரின் அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்க முடியுமா?

கடந்த மாத நிதிக்குழு கூட்டத்திற்கு அதன் உறுப்பினர்கள் ஐவரும் வரவில்லை. அக்கூட்டத்தில் மாதாந்த கணக்கறிக்கையும் முதல்வர் வாகன திருத்தத்திற்கான செலவு விபரங்கள் மற்றும் சி.சி.ரி.வி. பாதுகாப்பு கமராக்கள் மீளமைப்பு செய்தமைக்கான செலவு விபரங்கள் எல்லாம் சமர்ப்பிக்கப்படவிருந்தன. அனால் இவர்கள் இக்கூட்டத்திற்கு சமூகமளிக்காமல் இருந்து விட்டு நிதிக்குழுவின் அனுமதி பெறப்படாமல் குறித்த செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

நிதிக்குழு கூட்டத்திற்கு இவர்கள் வரவில்லை என்பதற்காக அவசியமானதும் அவசரமானதுமான வேலைகளை செய்யாமல் இருக்க முடியுமா? மக்களுக்கான சேவைகளை முடக்க முடியுமா? அவ்வாறானால் மாநகர சபையில் முதல்வரின் வகிபாகம் என்ன? சட்டப்படி முதல்வருக்கு உரித்தான அதிகாரங்களை பயன்படுத்தி, மாநகர சபையின் அன்றாட செயற்பாடுகளை கொண்டு நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

ஒரு மாநகர சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி முதல்வர்தான் என்பது சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. அதன்படியே எனது கடமைகளையும் பொறுப்புகளையும் ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வருகின்றேன்.

நிதிக்குழுவிலோ பொதுச் சபை அமர்வுகளிலோ எதிரணி உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதற்காக நான் மாநகர சபையை இழுத்து மூடி விட்டு செல்ல வேண்டும் என்றா இவர்கள் எதிர்பார்க்கின்றனர். நிதிக்குழுவின் அதிகாரம் என்ன? பயன்பாடு என்ன என்பது நிதிக்குழு உறுப்பினர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. அவர்கள் அங்கீகாரம் தந்தால்தான் எதனையும் செயற்படுத்த முடியும் என்று அவர்கள் நினைப்பது தவறாகும். அது அவர்களது அறியாமையாகும்.
அவர்கள் கணக்குகளை பரிசீலிக்க முடியும். ஆலோசனைகளை முன்வைக்க முடியும். நிதிக்குழு என்பது வெளிப்படைத்தன்மைக்கானதே தவிர அதுதான் அடிப்படையானது என்றில்லை. எல்லா நிலையியல் குழுக்களும் இவ்வாறுதான். ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் முன்வைக்கலாம். அவற்றை பொதுச் சபைக்கு சமர்ப்பித்து அதன் அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதென்பது முதல்வரின் பொறுப்பாகும்.

எதிராணியினரின் மற்றொரு கோரிக்கை இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்க வேண்டும் என்பதாகும். எமது மாநகர சபைக்கு அரசியல் சபை வருவதற்கு முன்னர் 2018-01-01 ஆம் திகதி இந்த ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் ஆணையாளர் தலைமையிலான முகாமைத்துவக் குழுவினரால் தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை செல்லுபடியாகும். எதிரணியினர் கோருவது போன்று இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

நடைமுறையிலுள்ள பட்ஜெட்டை பயன்படுத்தியே ஐயாயிரம் ரூபா தொலைபேசி கொடுப்பனவை மக்களின் வரிப்பணத்தில் இருந்து சண்டை பிடித்து இந்த உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இதற்காக மாதாந்தம் இரண்டு இலட்சத்து ஐயாயிரம் ரூபா மாநகர சபையின் வருமானத்தில் இருந்து ஒதுக்க வேண்டியுள்ளது. பாரிய நிதி நெருக்கடிக்கு மத்தியில் இத்தனையும் ஒரு சுமையாக மாநகர சபை பொறுப்பேற்றுள்ளது. இருக்கின்ற பட்ஜெட்டை நிராகரிக்கின்ற இவர்கள் தமக்கான ஐயாயிரம் ரூபாவை பெறுவதற்கு அந்த பட்ஜெட்டை பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றால் இவர்களது மனநிலை எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம்.
எமது மாநகர சபையில் எதிரணி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் தாம் சொல்கின்றபடியே முதல்வர் செயற்பட வேண்டும் எனவும் மாநகர சபையின் நிர்வாகத்தை தமது பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் எனவும் முதல்வர் பொம்மையாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு காரணம் மாநகர சபை கட்டளைகள் சட்டம் தொடர்பில் அவர்கள் அறியாதிருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

ஆளுநரிடம் மகஜர் கொடுத்து விட்டார்கள் என்பதற்காக, ஆர்ப்பாட்டம் செய்து விட்டார்கள் என்பதற்காக என்னை முதல்வர் பதவியில் இருந்து விலக்கி விட முடியாது. எதிராணியினரின் முறைப்பாட்டில் ஆளுநர் திருப்தி கண்டால், ஓர் ஆணைக்குழுவை நியமித்து, என் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து, அவை நிரூபிக்கப்பட்டு, பரிந்துரை செய்யப்பட வேண்டும்.

நான் எல்லா உறுப்பினர்களையும் அனுசரித்தே நடக்கிறேன். அவர்களால் முன்வைக்கப்படுகின்ற மக்கள் நலன்சார்ந்த கோரிக்கைகளை முடியுமானவரை, மாநகர சபையின் வசத்திற்கேற்ப நிறைவேற்றிக் கொடுக்கின்றேன். ஆனால் ஒவ்வொரு உறுப்பினரதும் அரசியலுக்கு நான் முண்டுகொடுக்க முடியாது. மக்களுக்கான சேவைகளையே எம்மால் நிறைவேற்ற முடியும்.
அண்மையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து வந்த கோரிக்கைக்கமைவாக ஒரு பள்ளிவாசல் உள்ளிட்ட சில இடங்களில் தெரு விளக்கு போடுவதற்காக என்னால் அதற்குரிய ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களை அப்பிரதேசத்தை சேர்ந்த மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் வழி மறித்து, திருப்பி அனுப்பியிருந்தனர். மின்குமிழ் போடுவதாக இருந்தால் அவர்களது அனுமதியுடன்தான் செய்ய வேண்டும் என்பது அவர்களது பிடிவாதமாக இருக்கிறது.

ஏற்கனவே 500 மின்குமிழ்கள் மாநகர சபையினால் கொள்வனவு செய்யப்பட்டு, 24 வட்டாரங்களுக்கும் என 25 ஆக பிரித்து, ஒரு வட்டாரத்திற்கு தலா 21 மின்குமிழ்கள் வீதம் உறுப்பினர்களின் பட்டியலுக்கமைவாக அவர்களது பிரசன்னத்துடன்தான் பழுதடைந்த மின்குமிழ்களுக்கு பதிலாக போடப்பட்டன. மேலும் சில இடங்களில் பழுதடைந்தமைக்காகவும் புதிதாக சில இடங்களில் மின் விளக்கு போட வேண்டும் எனவும் எம்மிடம் நேரடியாக முறைப்பாடு செய்யப்பட்ட இடங்களுக்கு தனி நபர்களினால் வாங்கித்தரப்படுகின்ற மின்குமிழ்களை போட நடவடிக்கை எடுக்கின்றபோது தம்மை சம்மந்தப்படுத்தித்தான் போட வேண்டும் என்று அந்த உறுப்பினர்கள் தடுக்கிறார்கள் என்றால் இது என்ன அரசியல்?

மின்குமிழ், மின் காப்பத்திற்கேயன்றி உறுப்பினர்களுக்கல்ல. இருளான இடத்தை வெளிச்சமூட்டுமாறு எவராவது மின்குமிழ் வாங்கித்தந்தால், அதனை நிறைவேற்றிக் கொடுப்பது எமது பொறுப்பாகும். அதனை செயற்படுத்த உறுப்பினர்களிடம் கேட்க வேண்டும் என்ற தேவை எமக்கில்லை. உறுப்பினர்கள் பல்ப் அரசியல் செய்ய முயன்றால் அதற்கு நான் உடந்தையாக முடியாது.
எந்தவொரு விடயத்தையும் மத்திய மற்றும் மாகாண கணக்காய்வுக் குழுவினர் வந்து பரிசோதனை மேற்கொள்வது வழமை. அதற்கேற்பவே எல்லாவற்றையும் செய்ய வேண்டியுள்ளது. நாம் நினைப்பது போன்று எதனையும் செய்ய முடியாது. மாநகர சபையில் ஏதும் நிதி மோசடிகள் இடம்பெற்றால் அதனை இந்த கணக்காய்வுக் குழுவினர் பார்த்துக் கொள்வார்கள்.
கல்முனை மாநகர சபையை முடக்க வேண்டும் என்பதற்காக அரசியல் பின்புலத்துடன் எதிரணியினர் முன்னெடுக்கின்ற சதிகள் அனைத்தையும் முறியடித்து, மாநகர சபையை மிகவும் சிறப்பாக முன்னோக்கி கொண்டு செல்கிறோம் என்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாதிருக்கிறது.

அதனால் என் மீதும் கட்சி மீதும் சேறுபூச வேண்டும் என்பதற்காக- மக்கள் மத்தியில் தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சில தனி நபர்களின் அரசியலுக்கு நான் துணை போகவில்லை என்பதற்காக, அவர்களது தனிப்பட்ட அபிலாஷைகளை நான் நிறைவேற்றி கொடுக்கவில்லை என்பதற்காக என் மீது அபாண்டங்களை சுமத்தியுள்ளனர். நான் இதற்ககெல்லாம் அஞ்சி, அடிபணிய மாட்டேன். மக்களுக்கான எனது பணியை தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுப்பேன்.

எந்த நியாயமான காரணமுமின்றி தாமே பெரும்பான்மையினர் என்பதற்காக மாநகர சபை அமர்வுகளை குழப்பும் செயற்பாடுகளில் எதிரணி உறுப்பினர்கள் ஈடுபடுகின்றனர். சபையில் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். எதிர்காலங்களில் சபை அமர்வுகளின்போது குழப்பம் விளைவிக்க முற்படுகின்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை சபையில் இருந்து வெளியேற்றுவதற்கும் அவர்களை ஒரு மாத காலம் இடைநிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

அதேவேளை கல்முனை மாநகர சபை எதிர்நோக்கி வருகின்ற நிதி நெருக்கடி, வருமான பற்றாக்குறை, திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுப்பதில் எதிர்நோக்குகின்ற சவால்கள், பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் முதல்வர் றகீப், ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்.
அத்துடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரின் அனுசரணையுடன் நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள கல்முனை மாநகர சபை கட்டிடத் தொகுதி மற்றும் பொதுச் சந்தை கட்டிடத் தொகுதி நிர்மாணம் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விபரித்து கூறினார்.
மேலும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அயராத முயற்சியினால் கனடாவின் 34667 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் கல்முனையில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள கழிவுநீர் முகாமைத்துவ செயற்றிட்டம் தொடர்பிலும் அதற்கு ஐந்து ஏக்கர் காணியை வழங்குவதில் எழுந்துள்ள முரண்பாடான கருத்துக்கள் குறித்தும் பிரஸ்தாபித்த முதல்வர், இந்த இழுபறியினால் எமது பகுதிக்கு அவசியம் தேவையான இப்பாரிய செயற்றிட்டம் கைநழுவிப்போகும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த ஊடக மாநாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.எம்.சத்தார், எம்.எஸ்.அலி, எம்.எம்.நிசார் ஆகியோரும் பங்கேற்று, கருத்துக்களை முன்வைத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -