அரசின் வேலைத்திட்டங்களை தமது அரசியல் கட்சியின் வேலைத் திட்டங்களாக சிலர் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர் .

மன்னார் ஸ்ரீ.ல.சு.காரியாலய திறப்பு விழாவில் பிரதியமைச்சர் 
காதர் மஸ்தான்
ரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற அல்லது மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்களை தமது அரசியல் கட்சியினுடைய வேலைத்திட்டங்களாக மக்களிடம் கொண்டு சென்று தொடர்ந்தும் ஏமாற்று வேலைகளைச் சிலர் செய்து வருவதாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக கட்சியின் மன்னார் மாவட்டத்துக்கான கட்சி காரியாலயத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் பிரதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மன்னார் மாவட்டத்தில் அரசாங்கத்தினூடாக பல்வேறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனினும் அவ் வேலைத்திட்டங்களை தமது அரசியல் கட்சிகளின் வேலைத் திட்டங்களாக காட்டி மக்களை சிலர் ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றனர்.

அவ்வாறெனில் இந்த அரசியல் கட்சிகளுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கப் பெறுகின்றது என்ற கேள்வியும் எழுகின்றது.
அத்துடன் அந்த வேலைத் திட்டங்களை தமது அரசியல் கட்சி சார்ந்தவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகின்றது
ஏனெனில் மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட பலரது கேள்வியாக இதுவே இருக்கின்றது.
பெயருக்காகவும் புகழுக்காகவும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருபவர்கள் தயவுசெய்து இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
இந்த ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் எந்தக் கட்சியை ஆதரிக்க முடியும் அல்லது வாக்களிக்க முடியும் அது அவர்களது உரிமை.
ஆனால் ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகள் தமக்கு வாக்களித்த அல்லது தாம் விரும்புகின்ற மக்களுக்கு மாத்திரமே தங்களுடைய சேவைகளை வழங்கி விட முடியாது.
முதலில் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என நான் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
என்னைப் பொறுத்தவரையில் என்னால் முடியுமான வரை எனக்கு கிடைக்கப் பெறுகின்றவற்றை இன மத மொழி கட்சி பேதங்களுக்கு அப்பால் தேவையுடைய அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதையே எனது தலையாய பொறுப்பாகக் கருதி செயற்பட்டு வருகின்றேன்.

இங்கு வருகை தந்து இருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடம் நான் ஒன்றை மட்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். இது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உடைய மன்னார் மாவட்டத்துக்கான காரியாலயமாக எக்காலத்திலும் செயற்படக் கூடாது.

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மையமாகச் செயற்பட வேண்டும்.
இந்த காரியாலயம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற ஒரு இடமாக இருக்க வேண்டும்.

நாட்டின் பல பகுதிகளிலும் அரசியல் கட்சிகளால் காரியாலயங்கள் அமைக்கப்பட்டு வேலை வாங்கித் தருவதாகவும் சிலர் உதவிகளைக் கேட்டு செல்கின்ற பொழுது லஞ்சம் பெறும் ஒரு இடங்களாகவும் செயற்படுகின்றன.

எனினும் இந்த காரியாலயம் அவ்வாறானது அல்ல அவ்வாறு இருக்க முடியாது. என் மீது நம்பிக்கை வைத்து என்னைப் பாராளுமன்றம் அனுப்பிய அந்த மக்களது நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியது எனது பொறுப்பாகும்.

மேலும் இங்கு மத்திரமல்ல வன்னி மாவட்டத்தில் யாராவது என்னுடைய பெயரை கூறி யாரிடமாவது அரசாங்க வேலைகள் வாங்கித் தருவதாக அல்லது ஏனைய உதவிகளைப் பெற்று தருவதாக கூறி யாரேனும் மோசடியில் ஈடுபட்டால் என்னிடம் நேரடியாக முறையிட முடியும் என்பதுடன் அவ்வாறு செயற்படுகின்ற நபர்களுக்கு எதிராக நாம் எடுக்கும் நடவடிக்கைகள் மிகக் கடுமையாக இருக்கும் என்பதையும் நான் இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

இந்தக் காரியாலயம் மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் இருக்கின்ற மக்களுக்கு உதவிகளை வழங்கும் ஒரு நிலையமாகவும் காணப்படும்.
அதுமாத்திரமல்லாமல் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் எனக்கு வன்னி மாவட்டத்தினுடைய அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியைக் கொண்டு எமது ஆட்சிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர் பல்வேறான நீண்ட பயன்தரக்கூடிய பல வேலைத்திட்டங்களை இம் மூன்று மாவட்டங்களிலும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.
அத்துடன் இந்த நிதியின் மூலம் செய்யப்படுகின்ற வேலைத்திட்டங்கள் யாவும் பகிரங்கப்படுத்தப்படும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த நிதி மாத்திரமல்ல எனக்கு எந்த நிதி கிடைத்தாலும் அதை மக்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பதை இனிவரும் காலங்களிலும் நான் சரியாக செய்வேன் என்று என்னை நம்புகின்ற உங்களது நம்பிக்கையை என்றும் நான் காப்பாற்றுவேன் எனத் தெரிவித்து விடைபெறுகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் உப்புக்குளம் இல.100 முகவரியில் திறந்து வைக்கப்பட்ட இந்த அலுவலக திறப்பு விழாவிற்குக் கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் தொண்டர்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -