ஒலுவில் பிரச்சினை


வை எல் எஸ் ஹமீட்-
லுவில் பிரச்சினை பூதாகாரமாக மாறியிருக்கிறது. மண் மூடியிருப்பதால் துறைமுகத்துள் வெளியில் இருக்கும் படகுகளை உள் கொண்டுசெல்ல முடியாது; உள்ளே மாட்டிய படகுகளை வெளியே கொண்டுவர முடியாது; என்ற நிலையில் மீனவர்கள் தத்தளிக்கிறார்கள். எனவே, மூடியிருக்கும் மண்ணை தோண்டியே ஆகவேண்டும். அது அவர்களின் வாழ்வாதார பிரச்சினை.
ஒலுவில் மக்களுக்கோ வாழையடி வாழையாக தாம் வாழ்ந்த மண், கடல் நீர் காவுகொள்ள தொடர்ந்தும் அனுமதிக்கமுடியுமா? என்கின்ற பிரச்சினை. இத்தோண்டப்பட்ட மண் அகற்றப்பட்டதும் கடல் தன்னைத்தானே சுதாகரிக்க அந்த ஏழை மக்களின் நிலைத்தை அரித்து தனக்கு இரையாக்கிவிடுகிறது.
இவ்வாறு கடலுக்கு பசியாற்ற தம்காணிகளை கன தடவை காணிக்கையாக்கி களைத்த மக்கள் ,இழந்த காணிகள் போதும்; இழப்பதற்கு இனியும் முடியாது; என கண்ணீர் வடிக்கிறார்கள்.
அடிப்படை வாழ்விடப் பிரச்சினை ஒருபுறம்; வயிற்றுப் பசி தீர்க்கும் வாழ்வாதார பிரச்சினை மறுபுறம். இரு தரப்பும் போராட்டம்.

மறைந்த தலைவர் நன்னோக்கில்தான் துறைமுகம் கொண்டுவந்தார். தலைவர் கேட்டபோது தாராளமாக நிலம் தந்துவிய தயாளமக்கள்தான் ஒலுவில் மக்கள். அந்த தயாள குணத்திற்கு பரிசா? அவர்கள் வாழ்விடங்களையே இழந்து வாழ வழியின்றி நிற்பது. இதற்கு தீர்வு என்ன?

ஒலுவில் மக்களுக்கோ தனது எஞ்சியிருக்கும் கரையோரத்தையும் கடலரிப்பைத் தடுப்பதற்கான கற்களை போட்டுவிட்டு தோண்டுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் தோண்டப்பட இடத்தை மூடுவதற்காக கடல் நிந்தவூர் கரையைப் பதம்பார்க்கும். நிந்தவூரில் கல்லைப்போட்டால் காரைதீவுக்கரை காவுகொள்ளப்படும். இது தொடர் சங்கிலியாக நீளும் . மட்டுமல்ல, ஒரு தடவை தோண்டுவதால் இப்பிரச்சினை முடிந்துவிடாது. இது ஒரு தொடர்கதை.
தலைவரின் மறைவின்பின் துறைமுகம் கட்டியவர்கள் தவறுவிட்டிருக்கிறார்கள். ஆனாலும் திருத்தப்பட முடியாத தவறா?

கடலை மூடி காணி செய்து கண்கவர் நகரமைக்கும் நவீன யுகத்தில் தீர்வு இல்லாத திட்டத் தவறுகளா?
இந்தப்பிரச்சினை இன்று நேற்றுத் தோன்றவில்லையே! கலண்டர்கள் பல மாறியும் காட்சிகள் அவ்வாறே இருந்ததேன்? தேர்தல்கள் பல திரும்பியும் தீர்வின்றிப்போனதேன்?

தலைவர்கள் என்பவர்கள் அடிக்கடி அதிகாரிகளைக் கூட்டிவந்து படம் காட்டினார்கள். கடந்த இரண்டு நோன்புகளுக்கு சற்றுமுன்பதாக ஒரு அமைச்சர் துறைமுக அதிகாரிகளை அழைத்து வந்தார். அடுத்த அமைச்சர் தன் இணைப்புச் செயலாளரை அனுப்பிவைத்தார். அடுத்த சில நாட்கள் அதிகாரிகளை அழைத்துவந்தது யார்? என்று உரிமை கோருவதிலேயே கழிந்தது.

தற்போது நடந்ததென்ன?
மீண்டுமொருமுறை துறைமுக அமைச்சர் அழைத்துவரப்பட்டார்? இரு தரப்பினரும் தம் நிலைப்பாட்டை முன்வைத்தனர். முடிவு இல்லை. குழு அமைத்து தோண்டுவதா? இல்லையா? என முடிவைச் சொல்லுங்கள்; என பந்தை அந்த ஏழைகளின் கோட்டிற்குள் எறிந்துவிட்டு நிரந்தரத் தீர்வுகண்ட திருப்தியோடு திரும்பிவிட்டார்கள்.
அந்த ஏழைகள் என்ன முடிவினை எடுப்பார்கள்? தோண்டவேண்டுமென்றா? தோண்டக்கூடாதென்றா? விளைவு போராட்டம். இரு தரப்பும் வீதியில்.

செய்திருக்க வேண்டியதென்ன?
——————————————
பிரச்சினை தோன்றி ஆண்டுகள் பல கடந்துவிட்டன. வெளிநாட்டு நிபுணர்களையோ அல்லது தகுதியான உள்நாட்டு நிபுணர்களையோ எப்போதோ அழைத்துவந்து தீர்வு கேட்டிருக்க வேண்டும். தீர்வு இல்லாமல் இருந்திருக்காது. இருந்தால் அதனைச் வேண்டும். தீர்வே இல்லையெனில் இத்துறைமுகம் மூடப்பட்டு மீனவர்களுக்கு இன்னுமொரு பொருத்தமான இடத்தில் மீன்பிடித்துறைமுகமோ அல்லது படகுத்துறையோ கட்டியிருக்க வேண்டும். அதன்மூலம் ஒலுவிலும் பாதுகாக்கப்பட்டிருக்கும் . மீனவர்களும் பயன்பெற்றிருப்பர். இன்று தீர்வும் இல்லை. மாற்றுத் தீர்வும் இல்லை. I

தற்போது செய்யவேண்டியதென்ன?
———————————————
தற்போது செய்யவேண்டியது, ஒரு தற்காலிக அல்லது இடைக்காலத் தீர்வும் நிரந்தரத் தீர்வும் காணப்பட வேண்டும்.

இடைக்கால தீர்வு
இப்பொழுது ஓக்டோபர் மாதம். அடுத்துவரும் நவம்பர், டிசம்பர் மாதங்கள் கடல் கடும் சீற்றமாக இருக்கும் காலம். படகை கடலில் நங்கூரமிட முடியாது. துறைமுகமோ, படகுத்துறையோ தேவை. ஒன்றில் ஒலுவில் பாதிக்கப்படாத வகையில் தற்காலிகமாக தோண்டி படகுகளை பாதுகாக்க முடியுமா? என பார்க்க வேண்டும்.
முடியாவிட்டால் சாய்ந்தமருது படகுத்துறையை தோண்டி படகுகளைக் கட்டமுடியுமா? எனப்பார்க்க வேண்டும்? அதுவும் முடியாவிட்டால் வேறு என்ன ஏற்பாடுகள் செய்யமுடியுமென ஆராயவேண்டும். இதை நிபுணர்களை அழைத்துவந்து அவசரமாக செய்யவேண்டும்.

நிரந்தரத் தீர்வு
——————-
வெளிநாட்டு நிபுணர்களையாவது அழைத்துவந்து ஒலுவில் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமா? என ஆராயவேண்டும். முடியாவிட்டால் சாய்ந்தமருது படகுத்துறையை மீன்பிடித் துறைமுகமாக்க முடியாது; breakwater கட்டுவதில் பிரச்சினை இருக்கிறது; என தலைவரின் காலத்தில் செய்த feasibility study கூறுகின்றது. எனவே அதனை முழுமையான படகுத்துறையாக மாற்றவேண்டும்.
அதுவும் சாத்தியமில்லை; எனில் கல்முனையில் யுத்தகாலத்திற்குமுன் படகுகட்டிய ‘முனை’ எனும் இடமிருக்கிறது. அது சற்று அமைதியான கடல். அங்கு ஒரு மீனவ துறைமுகமோ, படகுத்துறையோ கட்டுவது தொடர்பாக ஆராயவேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்கள் எனது மக்கள். எனது பொறுப்பற்றதனத்தினால்தான் இன்று இந்த மக்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே, இதனை எப்படியாவது தீர்க்கவேண்டும்; என்கின்ற உள்ளத்துடிப்பு இருக்கவேண்டும்.

இன்றைய ஒலுவிலின் நிலைக்கு காரணம் யார்?

—————————————————————
இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கவேண்டிய பெரும்பொறுப்பு அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைத் தொடர்ந்தும் பெற்றுவருகின்ற தாய்க்கட்சிக்குரியதாகும். அந்தவகையில் இன்றைய நிலைமைக்கான முதல்குற்றவாளி அவர்களாகும். ஆனால் இன்று சிலர் தலைமைத்துவத்தையும் கட்சியையும் குற்றவாளிக் கூட்டிலிருந்து காப்பாற்ற பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள்.

இந்த விடயத்தில் மாத்திரமல்ல, பொதுவாக தலைமைத்துவத்தினதும் கட்சியினதும் இயலாமையை மூடிமறைக்க இரண்டு காரணங்களைக் கூறுகின்றார்கள்.

ஒன்று: கட்சியை உடைத்து கட்சியை அழிக்க முயற்சி செய்தார்களாம். எனவே, கட்சியைப் பாதுகாப்பதிலேயே தலைமைத்துவத்தினதும் கட்சியினதும் கவனமும் நேரமும் செலவாகிறதாம். அதனால் இந்த பிரச்சினைகளை தீர்க்காததற்கு அவர்கள் குற்றவாளிகள் இல்லையாம். கட்சியை உடைத்து அதிகாரம் பெற்றவர்கள்தான் தீர்த்திருக்க வேண்டுமாம். எனவே அவர்கள்தான் குற்றவாளியாம்.

பதினெட்டு வருடங்களாக கட்சியைப் பாதுகாத்தும் இன்னும் பாதுகாத்து முடியவில்லை. கட்சியைப்பாதுகாக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவை; என்றாவது சொன்னால் அதுவரை வேறு ஏதாவது கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்தாவது தமது பிரச்சினைகளைத் தீர்க்கமுடியுமா? எனப் பார்க்கலாம்.

அக்கட்சியின் தலைமையும் எப்போதும் மாநாடுகளிலோ; பொதுக்கூட்டங்களிலோ பேசும்போது ‘ கட்சியை காப்பாற்றுவது பற்றித்தான் பேசுவார்.’ ஏதோ முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் வாழ்வதே அக்கட்சியைப் பாதுகாப்பதற்காகத்தான் என்பதுபோலவும் கட்சிக்கு சமூகத்தைப் பாதுகாக்க, சமூகத்தின் பிரச்சினையைத் தீர்க்க எந்தவித கடப்பாடும் இல்லை; என்பதுபோல்தான் அப்பேச்சுக்கள் இருக்கும்.

அதைத்தான் ஆதரவாளர்களும் எழுதுகிறார்கள். கட்சியைப் பாதுகாப்பதில் ‘ தலைவர் busy யாக இருந்ததனால் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை. எனவே, அவர் குற்றவாளியில்லை. பிரிந்தவர்கள்தான் குற்றவாளிகள் என்று. “ சமூகத்திற்கு பிரயோசனம் இல்லையென்றால் இக்கட்சியையே அழித்துவிடு” என்ற மறைந்த தலைவரின் துஆவுடன் வளர்ந்த கட்சி இது.

இரண்டாவது அவர்கள் கூறுவது: கட்சி பலகூறுகளாகப் பிரிந்து பல கட்சிகளாகி இருப்பதால் அரசிடம் எதையும் சாதிக்க முடியாமல் இருக்கின்றது; என்பதாகும். இந்தக் கருத்தை இன்று பரவலாக முன்கொண்டுசெல்ல முயற்சிக்கிறார்கள்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமையே பலம்; என்பது எல்லோருக்கும் எப்போதும் பொருந்தக்கூடிய கூற்று. குறிப்பாக முஸ்லிம் சமூகம் தற்போது ஒன்றுபட வேண்டியது காலத்தின் தேவையாகும். அது எவ்வகையான ஒற்றுமை? எதற்காக ஒற்றுமை? போன்றவிடயங்கள் எதிர்காலத்தில் விரிவாகப் பேசப்படவேண்டும்.

அதேநேரம் ஒன்றாக இருந்த கட்சி உடைந்தற்குக் காரணம் உடைத்தவர்களா? அல்லது கட்சிக்கு சுக்கான் பிடிக்க வந்தவரா? அல்லது இருதரப்புமா? என்பது தொடர்பாகவும் வேறான ஒரு தலைப்பின்கீழ் ஆராயப்பட வேண்டும். கட்சி உடைந்ததனால் எதுவும் செய்யமுடியாமல் இருக்கின்றது; என்றால் நேர்மையாக மக்களிடம் சொல்லவேண்டும், “ கட்சியை உடைத்துவிட்டார்கள். கட்சிகள் பெருகிவிட்டன. எங்களால் எதையும் சாதிக்கமுடியாது. எனவே, நாங்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள்கின்றோம்”; என்று.

தேர்தல் மேடைகளில் வந்து சாதிப்போம், வாக்களியுங்கள்; என்று வாக்குப்பெற்றுவிட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் கையறுநிலையில் இருந்துகொண்டு கட்சியை உடைத்துவிட்டார்கள். அரசு கணக்கெடுப்பதில்லை. எதையும் செய்யமுடியவில்லை; என்பதை “ பழம் பொலிசிலும் சொல்லமுடியாதே”.

எனவே, இந்த ஏமாற்றுப் பேச்சுக்கள், எழுத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும். கடந்தகாலத் தவறுகளை ஒப்புக்கொண்டு எதிர்காலத்தில் முடிந்தத்தைச் சாதிக்க முன்வரவேண்டும்.

எனது முன்னைய பதிவில் குறிப்பிட்டதுபோல் தற்போது சாதிப்பதற்கு பொன்னான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கேட்கின்ற முறையில் கேட்டால் தன் பிரதமர் பதவியைத்தவிர அனைத்தையும் தரக்கூடிய, தரவேண்டிய இக்கட்டான நிலையில் ரணில் இருக்கின்றார்.

ஜனாதிபதி தலைமையிலான ஶ்ரீ சு கட்சி மகிந்தவுடன் இணைந்தால் தனித்து ஆட்சியமைப்போம் என மார்தட்டுகிறது, ஐ தே க. நீங்களெல்லாம் தங்களுடனேயே இருப்பீர்கள் என்ற அதீத நம்பிக்கையில்தான் இந்த இறுமாப்பு. ஆனால் நீங்களோ கட்சி உடைந்துவிட்டது; எதுவும் செய்யமுடியவில்லை; என கதையளக்கிறீர்கள்.

பலம் கூடுதலாக இருந்தால் கூடுதலாக சாதிக்கலாம்; என்பது பொதுவானதாகும். அது இருக்கின்ற பலத்தை வைத்து ஓரளவாவது சாதித்துவிட்டு முழுப்பலத்தையும் தந்தால் முழுமையாக சாதிப்போம்; என்றால் அது நியாயமாக இருக்கும். எதையும் சாதிக்காமல் முழுப்பலத்தையும் தந்தால் சாதிப்போம்; என்பதை என்னவென்பது?

பலத்தைக் கணிப்பிடுவதெப்படி
—————————————
பலம் என்பது ஒரு relative term. ஐந்து வயதுக்குழந்தையின் முன்னால் பத்து வயது சிறுவன் பலசாலி. பத்துவயது சிறுவனின் முன்னால் இருபது வயது இளைஞன் பலசாலி. நமது பலம் என்பது அடுத்தவனின் பலயீனத்தில் தங்கியிருக்கின்றது.

மகிந்தவின் ஆட்சியில் ஒரு முஸ்லிம் கட்சியிடம் 15 ஆசனங்கள் இருந்திருந்தாலும் அதனைப் பெரிய பலம் என்று கூறமுடியாது. ஏனெனில் முழுமையான அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி ஒரு புறம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை மறுபுறம் அன்று.

இன்று ஜனாதிபதி ஒரு புறம், பெரும்பான்மையில்லாத அரசு மறுபுறம். கயிறிழுப்பு இடையில். இன்று இருக்கின்ற ஏழோ அல்லது ஐந்தோ அன்றைய பதினைந்தைவிட பலமானது.இதிலும் சாதிக்காதவர்கள் என்றுமே சாதிக்க மாட்டார்கள். இவர்களுக்குப் பின்னால் ஒற்றுமைப்பட்டும் பிரயோசனமில்லை. ஒற்றுமைப்படாவிட்டாலும் பிரயோசனமில்லை. சொத்திப்பிள்ளை என்றும் சொத்திப்பிள்ளைதான்.

முடிந்தால் சொத்திப்பிள்ளையில்லை. நல்லபிள்ளைதான் என்று இந்த அரசின் எஞ்சிய காலப்பகுதிக்குள் நிரூபித்துக்காட்டுங்கள். அதன்பின் வாருங்கள் ஒற்றுமைபற்றிப்பேச. மாவைக் காற்றில் வீசுவதால் ஆவது ஒன்றுமில்லை.

எல்லாவற்றையும் செய்யவேண்டிய பொறுப்பு கட்சித்தலைவருடையதா?
———————————————————-
நமது மக்களிடையே இருக்கும் எண்ணம் அனைத்துப் பிரச்சினைகளையும் தேவைகளையும் கட்சித்தலைவரே தீர்க்கவேண்டும் என்பது. அவ்வாறாயின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதற்கு? மறைந்த தலைவர், கட்சித்தலைவராக இருந்த அதேவேளை அம்பாறை மாவட்டத்தின் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவும் இருந்தார். எனவே, அவர் எல்லாவற்றையும் செய்தார்.

மக்களுடைய தற்போதைய மனோநிலையும் அவ்வாறே இருக்கின்றது. இதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு எந்தப்பொறுப்புமில்லை. எல்லாம் தலைவருடைய பொறுப்பு; என நினைத்து சோம்பேறிகளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

தலைவருக்கு பொறுப்பு இல்லை; எனக் கூறவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புதாரிகள். தங்களால் செய்யமுடியாததை தலைவரைக்கொண்டு செய்விக்க வேண்டியது அவர்களது கடமை.

கல்முனை புதிய நகர் வாக்குறுதிக்கு வயது 18. புதுப்பித்த வாக்குறுதிக்கு வயது 4. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. அதற்குரிய அமைச்சும் பணமும் இருந்தும் படம் கீறுவதும், படம் காட்டுவதும் என்பதைத்தவிர எதுவும் நடக்கவில்லை.

துபாய் போக ஆசைப்பட்ட பலர் துபாய் இங்கே வரப்போகிறது; பார்த்துக்கொள்ளலாம்; என ஆசையோடு இருக்கிறார்கள். ஏன் இந்த உள்ளூர்ப் பிரதிநிகள் தன் தலைவரிடம் சண்டைபிடித்தாவது அவரது அமைச்சில் இருக்கும் பணத்தைக் கொண்டுவர முடியவில்லை.

நான் சில நேரங்கள் நினைப்பதுண்டு. தேர்தல் சட்டத்தை மாற்றி கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். கட்சித்தலைவர் பட்டியலிலிருந்தே அனைத்துப்பாராளுமன்ற உறுப்பினர்களையும் நியமிக்கும் முறையைக் கொண்டுவந்தால் அம்பாறை மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் கட்சித் தலைவர் நியமிக்கத் தேவையில்லை. வெளியிடங்களில் நியமிக்கலாம். ஏனெனில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் எந்த வேலையோ, பொறுப்போ இல்லையே! அனைத்தும் தலைவருடைய பொறுப்புத்தானே!

எனவே, தவறு மக்களிலும் இருக்கின்றது; என்பதை மக்கள் உணரவேண்டும்.

கிழக்குக் கட்சி
———————-
இந்த ஒலுவில் பிரச்சினையைத் தீர்ப்பதில் தாய்க்கட்சிக்கு பிரதான பொறுப்பிருக்கிறது. அதற்காக கிழக்குக்கட்சிக்கு பொறுப்பில்லையா? ஒலுவில், பாலமுனை மக்கள் கிழக்குக் கட்சிக்கும் கணிசமாக வாக்களித்துத்தானே வருகிறார்கள்.

மகிந்த ஆட்சியில் அதன் தலைவர் மிகப்பலம் பொருந்திய நிலையில்தானே இருந்தார். ஏன் இந்தப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவில்லை . தாய்க்கட்சித் தலைவரை கிழக்கில் இருந்தே துரத்த முயல்பவர்கள் அதிஉச்ச அதிகாரத்தில் இருந்தபோது ஏன் இந்தப்பிரச்சினையைத் தீர்க்கவில்லை. ஏன் ஒலுவில் கிழக்கு இல்லையா?

பெருந்தேசியத்தலைவர்
———————————
பெருந்தேசியத்தலைவருக்கு 2015 ம் ஆண்டிற்கு முதல் அம்பாறையில் அங்கீகாரம் இருக்கவில்லை. 2015இல் 33000 வாக்கு என்பது 1/6 ற்கும் அதிகமாகும் . உறுப்பினர் கிடைக்காவிட்டாலும் பெரும் அங்கீகாரம் கிடைத்ததே! ஏன் தீர்க்கவில்லை. எத்தனை தடவைகள் ஒலுவிலுக்கு விஜயம்செய்து முகநூலில் படம் காட்டினார்கள். ஏன் இதற்கு நிரந்தர தீர்வுகாண முயற்சிக்கவில்லை.

இன்று எல்லோரும் பழியை ஒரு கட்சியில் போட்டுவிட்டு நல்லவர் வேசமிடுகின்றனர். இதன்மூலம் ஒலுவில் மக்களைக் குறிப்பாகவும் அம்பாறை மாவட்ட மக்களை பொதுவாகவும் கொச்சைப்படுத்துகிறார்கள்.

போதும் உங்கள் சித்துவிளையாட்டு. அவசரமாக இடைக்காலத் தீர்வைக்கண்டு ஒலுவில் மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அம்மீனவர்களுக்கு உதவுங்கள்.

ஒலுவில் மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தக்கூடிய, மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய நிரந்தரத்தீர்வுக்கு வகைசெய்யுங்கள்.

ஏழை மக்களுடன் விளையாடாதீர்கள். இம்மக்களின் கண்ணீர் உங்களை சும்மாவிடாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -