- ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி வலியுறுத்து !
காரைதீவு நிருபர் சகா-
இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டுமே ஒழிய இதற்காக நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்துவது சுமூகமான தீர்வுகளை ஒருபோதும் பெற்று தரவே மாட்டாது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் போஷாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ர் எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
காரைதீவு முச்சந்தியில் அமைந்து உள்ள காணி சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமானது என்று உரிமை கோரி ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் மூலமாக கடந்த வருடம் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நிந்தவூரில் உள்ள இவரின் இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் இனங்களுக்கு இடையில் மேம்பட்ட நல்லுறவை கட்டி எழுப்புவது தொடர்பாக கருத்து கூறியபோதே ஹசன் அலி இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இது தொடர்பாக இங்கு முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:-
இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும். மாறாக இதற்காக நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்துவது சுமூகமான தீர்வுகளை ஒருபோதும் பெற்று தரவே மாட்டாது.
காரைதீவு முச்சந்தியில் அமைந்து உள்ள காணி உரிமை தொடர்பான பிணக்குக்கு அமைதியான முறையில் சுமூகமான தீர்வை அடைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆகும். இதற்காக நானும், மாவை சேனாதிராசாவும் பல தடவைகள் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி இருந்தோம். அவை நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில் அமைய பெற்று இருந்தன. அதே போல காரைதீவை சேர்ந்த பிரமுகர்கள் பலரையும் சந்தித்து பல சுற்று பேச்சுகள் நடத்தி இருந்தேன்.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் இனங்களை சிறுபான்மைகளாக மாற்றுகின்ற வேலை திட்டத்தை மிக நுட்பமான முறையில் திட்டமிட்ட வகையில் இந்நாட்டின் பெரும்பான்மை சமூகம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கு இடையில் நீயா? நானா? என்கிற போட்டி மன பான்மையில் தமிழ் பேசும் இனங்கள் பிரிந்து பிளவுபட்டு நிற்கின்றன. தமிழ் பேசும் இனங்களுக்கு இடையில் உண்மையான, தூய்மையான, இதய சுத்தியுடன் கூடிய நல்லிணக்கம், ஐக்கியம், சமாதானம் ஆகியன எப்போதும் நின்று நிலவுகின்ற பட்சத்தில் மாத்திரமே பெரும்பான்மை சமூகத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து நாம் ஓரளவுக்கேனும் தப்பி பிழைக்க முடியும். இதற்கு இரு இனங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு, சகிப்பு தன்மை, விட்டு கொடுப்பு ஆகியன அத்தியாவசியமானவையாக உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இரு இனங்களுக்கும் இடையில் ஆங்காங்கு உள்ளன. இவற்றுக்கு பேச்சுவார்த்தைகள் மூலமே சுமூக தீர்வை பெற்று கொள்ள முடியும் எனது அசைக்க முடியாத நம்பிக்கையும், விசுவாசமும் ஆகும். ஆனால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்டுவதற்காக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற முட்டாள்த்தனம் வேறெதுவும் இருக்க மாட்டாது.