கல்முனையின் அபிவிருத்தியின் நாயகனான அமைச்சர் மன்சூரின் மகன், தனக்கென தனியான அரசியலை, அல்லது தேசிய கட்சியொன்றின் மூலமான அரசியலை மேற்கொண்டிருந்தால் அவரால் எதிர் காலத்தில் அதிகாரமுள்ள அரசியல்வாதியாக வந்திருக்க முடியும்.
ஆனால் உள்ளூராட்சி சபையில் போட்டியிடுவதன் மூலம், அதுவும் கல்முனையை கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மூலம் போட்டியிடுவதன் மூலம் எதிர் காலத்தில் மு. காவை கொண்ட ஐ தே க கல்முனையின் ஆட்சியை பொறுப்பெடுத்தாலும்,சில வேளை மேயராக பதவியேற்றாலும் ரஹ்மத் மன்சூரால் திறம்பட செயற்பட முடியாது.
காரணம் வரலாற்றை பார்க்கும் போது கல்முனையின் மேயர்களாக இருந்த முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த அனைவருமே அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு தலை சாய்ப்பவர்களாகவே இருந்து வந்துள்ளனர். கல்முனை மேயர்கள் சிறப்பாக சேவை செய்து நல்ல பெயர் எடுத்துவிடக்கூடாது என்பதில் ஹக்கீமும் மு. காவின் பிரதேச தலைவர்களும் மிகக்கவனமாக இருந்து வந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் சேவை செய்தால் மக்கள் அபிமானம் பெற்றால் எங்கே தமது தலைமைக்கு சவாலாக ஆகிவிடுவார்களோ என்ற அச்சம் ஹக்கீமுக்கு உண்டு. இதனை சிராஸ் மீராசாஹிப் விடயத்தில் கண்டுள்ளோம்.
கல்முனையின் மேயர்களில் ஓரளவு நல்ல சேவைகளை செய்தவர் சிராஸ் அவர்கள். அவருடைய சேவைகளால் பிரதேசத்தில் பாரிய வளர்ச்சியை அடைவதை பொறுக்க முடியாமல் அவரை மேயர் பதவியிலிருந்து நிறுத்த கல்முனை பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகளும் ஹக்கீமும் நடவடிக்கை எடுத்ததை கண்டோம்.
இதன்பின் கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிசாம் காரியப்பர் கல்முனையின் மேயர் பதவியை ஏற்று கல்முனைக்கு எதையும் செய்யாமல் ஹக்கீமிடம் நல்ல பெயரை பெற்றார். இதன் காரணமாக கட்சியின் செயலாளர் பதவியும் அவருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
அவரும் கல்முனையின் பொது பஸ் நிலையத்தை தனியாருக்கு விற்று கல்முனையை அசிங்கப்படுத்தி விட்டு மீண்டும் கொழும்புக்கு ஓடி விட்டார்.
தற்போது கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரஹ்மத் மன்சூரும் மேயரானால் கல்முனைக்கு சேவை செய்யாமல் இருந்தால் மட்டுமே ரவூப் ஹக்கீமிடம் அவருக்கு நல்ல பெயர் இருக்கும். அதையும் மீறி அவர் சேவை செய்ய முற்பட்டால் நிச்சயம் சிராஸ் மீராசாஹிபுக்கு நடந்த கதியே நடக்கும்.
இந்த நிலையில் கல்முனையின் கர்மவீரனான அமைச்சர் மன்சூரின் மகன் ரஹ்மத் ப்பூ இவ்வளவுதானா என்ற நிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டு பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து ஓரம் கட்டப்படுவார். இத்தகைய திட்டத்தின் அடிப்படையிலேயே இவர் கக்முனை உள்ளூராட்சி தேர்தலில் இறக்கப்பட்டுள்ளார்.
ஆகவே இந்த உண்மைகளை புரிந்து கொண்டு இத்தேர்தலில் இருந்து வாபஸ் வாங்கிக்கொள்ள ரஹ்மத் மன்சூர் வருவதே அவரது எதிர்கால அரசியலுக்கு சிறந்ததாகும். இல்லாவிட்டால் தானும் இந்த சமூகத்தின் வாக்குகளை கோடிகளுக்கு விற்ற ரவூஃப் ஹக்கீமை பின் பற்றி கல்முனையின் சொத்துக்களை விற்று சுருட்டிக்கொண்டு நிசாம் காரியப்பர் போன்று கொழும்புக்கு மீண்டும் ஓட வேண்டியிருக்கும்.
- மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சித்தலைவர்
