திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கும்புருபிட்டி பகுதியில் போலி நாணயத் தாள் அச்சிட்ட நபர் ஒருவரை இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் நேற்று(10) உத்தரவிட்டார். கும்புறுப்பிட்டி,குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் குச்சவெளி,கும்புறுப்பிட்டி பகுதியில் போலி நாணயத் தாள் அச்சிட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றி வளைப்புகளை மேற்கொண்ட நிலையிலே போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரம்,பிரதி எடுக்கும் இயந்திரம்,மற்றும் கணனி, ஆயிரம் ரூபாய் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் போலி நாணயத் தாள்களுடன் சந்தேக நபர் ஓருவரையும் சனிக்கிழமை (9) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.