NFGG ஊடகப் பிரிவு=
ஜெனிவாவுக்கான விசேட விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்ணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் நேற்று (16.11.2017) சர்வதேச இராஜதந்திரிகளுடனான பிரத்தியோ சந்திப்புக்களை மேற்கொண்டார். ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள்சபையின் வளாகத்தில் நேற்று பிற்பகல் 03.00 மணி முதல் 05.00 மணி வரை இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றன.
ஜெனிவாவில் பிரித்தானியவின் வதிவிடப் பிரதி நிதியாக படமையாற்றும் மனித உரிமைகளுக்கான சிரேஸ்ட ஆலோசகர் பொப் லாஸ்ட் அவர்களுடனானவிரிவான கலந்துரையாடலை பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேற்கொண்டார். அத்தோடு , ஐ.நாவின் முன்னாள் சிரேஸ்ட இராஜ தந்திரியும் 2002 யுத்தநிறுத்த கால பேச்சுவார்த்தைகளின் போது இலங்கைப் பிரதமரின் ஆலோசகராக செயற்பட்ட இராஜ தந்திர செயற்பாட்டாளருடனும் சந்தித்து அப்துர்ரஹ்மான் பல்வேறு விடயங்களை கலந்துரையாடினார்.
குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள், புதிய தேர்தல் முறையானது சிறுபான்மைமக்களின் பிரதிநிதித்துவத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகள் மற்றும் மீள் குடியேற்றப் பிரச்சினைகள், புதியயாப்புருவாக்கம் தொடர்பிலான அவதானங்கள் போன்ற விடயங்களை மிக விரிவாக எடுத்துக்கூறினார்.
அத்தோடு அரசியல் தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களும் ஒரு சம் தரப்பு என்ற முக்கியத்துவம் கொடுபடுவதில்லை என்ற விடயங்களையும் அது கடந்தகாலங்களில் ஏற்படுத்திய விழைவுகளையும் எடுத்துரைத்தார்.
இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் போதுமான சர்வதேச கவனம் கொடுபடவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட இந்த இராஜ தந்திரிகள் அது தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஏற்றுக்கொண்டனர்.
அத்தோடு எதிர் காலத்தில் சர்வதேச கவனத்தை இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் எவ்வாறு ஈர்க்க முடியும் என்ற ஆலோசனைகளையும் வழங்கினர். இதுதொடர்பான கலந்துரையாடல்களை தொடர்வது முக்கியம் எனவும் பரஸ்பரம் வலியுறுத்தப்பட்டது.
நாளை (18.11.2017) சனிக்கிழமை வரை ஜெனிவாவில் தங்கியிருக்கும் NFGG தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இன்னும் பல இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.