உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவியினால் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
சாய்ந்தமருது கோரிக்கையும் கல்முனையை நான்காக பிரிப்பது என்ற கோரிக்கையும் பல வருடங்களாக இப்பிரதேச மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கையாகும்.
சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை கோரிக்கையை எப்போதோ மிக இலகுவாக பெற்றிருக்க முடியும். ஆனால் அம்மக்கள் பிரதேச ஏமாற்று கட்சி மீது நம்பிக்கை வைத்து ஏமாந்ததன் காரணமாக இப்போது இந்த விடயம் பூதாகரமானதாக ஆகியுள்ளதுடன் கல்முனையை நான்காக பிரிப்பதன் மூலமே இனங்களுக்கிடையில் ஒற்றுமையை தக்க முடியும் என்ற கோரிக்கையிலும் நியாயம் உள்ளது.
இது விடயத்தில் ஜனாதிபதி மைத்ரிபால நேரடியாக தலையிட்டிருப்பதை நாம் பாராட்டுவதுடன் இது விடயத்தில் அர்ப்பணிப்புடன் ஈடுபடும் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் இது விடயத்தில் மிகவும் கரிசணை கொண்ட கட்சி என்ற வகையில் உலமா கட்சியினராகிய நாம் எமது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதே போல் கல்முனையை நான்காக பிரிப்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டமைக்காக நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் நன்றி தெரிவிக்கும் அதேவேளை இப்பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கும் வகையில்
கல்முனை 87ம் ஆண்டு இருந்த எல்லைகளை ஏற்று தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கல்முனையில் பலப்படுத்த உதவுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் முற்றாக கைவிட்ட நிலையிலும் இது விடயத்தில் இரவு பகலாக பாடுபடும் பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்கள் எம்மிடம் மேற்கொண்ட வேண்டுகோளை ஏற்று இது விடயம் வெற்றி பெற உலமா கட்சி அவருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கி உதவுவம் என்பதையும் தெரிவிக்கிறோம்.
அத்துடன் இது விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படும் முன்னாள் அமைச்சர் அதாவுள்ளா, அ. இ. மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களுக்கும் நாம் கல்முனை மக்கள் சார்பாக எமது பாராட்டை தெரிவிப்பதுடன் எதிர் வரும் 22 ந்திகதி நடைபெறும் தமிழ் கூட்டமைப்புடனான சந்திப்பில் 87ம் ஆண்டு இருந்தது போன்று எல்லை வகுக்க உதவும் படியும் நாம் அவர்களை வேண்டுகிறோம்.
இது விடயத்தில் பல தமிழ் கட்சிகள் கொண்ட தமிழ் கூட்டமைப்பு ஆர்வத்துடன் ஒத்துழைப்பது போன்று அமைச்சர் ரிசாத் பதியுதீன், முன்னாள் அமைச்சர் அதாவுள்ளா, பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட்டு பிரச்சினையை சுமுகமாக தீர்க்க உதவும் படி உலமா கட்சி வேண்டிக்கொள்கிறது.