திருகோணமலை ஆண்டாங்குளம் பகுதியில் விடொன்றிற்கு கைகுண்டு தாக்குதல் நடாத்தியதாக சந்தேகிக்கப்படும் பிரதான பௌத்த பிக்குவை இம்மாதம் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (13) திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்,எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை- 04ம் கட்டை சிறி வஜிரா ராமய விகாராதிபதி ஆண்டாங்குளமே சோமரத்ன ஹிமி (28வயது) எனவும் உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
2016 பெப்ரவரி மாதம் 14ம் திகதி இரவு 04ம் கட்டை விகாரைக்கு அருகிலுள்ள வீடொன்றிற்கு கைக்குண்டு தாக்குதல் நடாத்தியதாக உப்புவௌி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அதே நேரம் விகாரைக்குள் மறைந்திருந்த இரண்டு பேரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது பிரதான சந்தேக நபர் பௌத்த பிக்குவென இணங்காணப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை மேல் நீதிமன்றம் பினணயில் செல்வதற்கு அனுமதி வழங்கியது.
இதேவேளை கைக்குண்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பௌத்த பிக்கு சம்பவம் நடைபெற்ற நாள் முதல் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் உப்புவௌி பொலிஸ் நிலையத்தில் சரணமடைந்தார்.
இதணையடுத்து கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எம்.எம்.ஹம்ஸா முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
