அஸ்லம் S.மௌலான-
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் ஸ்தாபிக்கப்படா விட்டால் அத்தேர்தலில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாயல் தலைமைத்துவத்தின் கீழ் பொதுச் சுயேட்சைக் குழுவொன்றை களமிறக்குவது தொடர்பில் சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில் முன்வைத்திருந்த ஆலோசனை தொடர்பில் பள்ளிவாயலின் நிலைப்பாட்டை பொது மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையிடம் தம்மால் கையளிக்கப்பட்டதாக ஷூரா கவுன்ஸில் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம்.சாதாத் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
"உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னதாக சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கான மூலோபாயங்களுள் ஒன்றாக சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாயல் பரிபாலன சபையின் தலைமைத்துவத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் ஒரு சுயேச்சை அணியைக் களமிறக்க வேண்டும் என்ற ஆலோசனையை பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையிடம் முன்வைப்பது என கடந்த செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி நடைபெற்ற ஷூரா கவுன்ஸில் பொதுச்சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆலோசனை தொடர்பாக பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக கால அவகாசம் கோரி, மறுநாள் 10 ஆம் திகதி பள்ளிவாயல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபாவை நேரடியாக சந்தித்து கடிதமொன்றை கையளித்ததுடன் குறித்த விடயம் தொடர்பில் அவருக்கு விளக்கமும் அளித்திருந்தோம்.
அதன்போது இவ்வூரின் முக்கியமான பொறுப்புக் கூறக்கூடிய அமைப்பு என்கின்ற ரீதியில் தற்பொழுது பொறுமையாக இருக்குமாறும் தங்களுக்கு ஒரு முக்கிய இடத்தில் இருந்து முக்கியமான முடிவொன்று வரவிருபதாகவும் தற்போதைக்கு சூறா சபையின் இவ்வாறான சந்திப்பை ஒத்திப்போடுமாறும் அவ்வாறு சாதகமான முடிவு வராவிட்டால் சூறா சபையால் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் எனவும் பள்ளிவாசல் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது வேண்டுகோளை மதித்து ஒருமாத காலத்திற்கு மேலாக ஷூரா சபை தனது முன்நகர்வு நடவடிக்கைகளை தாமதப்படுத்தியிருந்தது.
ஆனால் தேர்தலுக்கு முன்னர் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் பிரகடனம் செய்யப்படுவதற்கு எவ்வித நடவடிக்கையும் அரசியல் மட்டத்தில் முன்னெடுக்கப்படாதுள்ள நிலையில் இதுவரை இவ்விடயம் குறித்து பேசுவதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் முன்வரவுமில்லை தனது நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்தவுமில்லை.
ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பான முக்கியமான முடிவு ஏதும் வந்ததா? அவ்வாறாயின் அம்முடிவு என்ன? இக்கோரிக்கை தொடர்பாக பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையினால் எடுக்கப்பட்டுள்ள முடிவு என்ன? சூறா சபையினால் வழங்கப்பட்ட ஆலோசனை தொடர்பாகவும் எமக்கு தங்களால் வழங்கப்பட்ட உறுதிமொழி தொடர்பான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாகவும் சாய்ந்தமருது பொது மக்களுக்கு பகிரங்கமாக அறியத்தருமாறு தற்போது பள்ளிவாசல் சபையிடம் கையளித்துள்ள கடிதத்தில் கேட்டிருக்கின்றோம்.
பள்ளிவாயலினால் எடுக்கப்படுகின்ற முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததென்பதையும் காலம் தாழ்த்துதல் என்பது ஆபத்தானதென்பதையும் அக்கடிதத்தில் பள்ளிவாசல் தலைமைக்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.
உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் முழுக்க முழுக்க அரசியல் தலைமைகளை மாத்திரம் நம்பிக்கொண்டு காலம் வீணடிக்கப்படுகிறது. இது விடயத்தில் அரசியல் தலைமைகளுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கப்படாமல் வெறுமனே சந்திப்புகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை வென்றெடுப்பதற்கு மூலோபாய நடவடிக்கைகள் அவசியம் என்பதே ஷூரா கவுன்சிலின் நிலைப்பாடாகும். அதில் ஒன்றே உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனையாகும்" என்று ஷூரா கவுன்ஸில் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம்.சாதாத் குறிப்பிட்டார்.