சீன அரசாங்கத்தின் 33,000 மில்லியன் நிதியுதவியில் கண்டி வடக்கு நீர் வழங்கல் திட்டமொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். இதன்மூலம் பாத்ததும்பறை, ஹரிஸ்பத்துவ, யட்டிநுவர தொகுதிகள் உட்பட 4 இலட்சம் பாவனையாளர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கமுடியும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 43 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பூஜாபிட்டிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஹல்கொல்ல – ரம்புகெல வீதி திறந்துவைக்கப்பட்ட பின்னர், ஹல்கொல்ல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;
படகொள்ளதெனிய பிரதேசத்தில் நீண்டகாலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்காக நிலத்தடி நீரை கண்டறியும் தொழில்நுட்பவியலாளர்களின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்பிரகாம் இப்பிரதேசத்தில் ஆழ்கிணறுகளை அமைத்து, அதன்மூலம் தற்போது குடிநீரை வழங்குவதற்கு தீரமானித்துள்ளோம்.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைமூலம் இந்த வருடத்தில் மாத்திரம் 300,000
மில்லியன் ரூபா செலவில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றது. கண்டி -கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான வேலைகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இவ்வீதி அமைக்கப்படும். இதன்மூலம் 45 நிமிடத்தில் கொழும்புக்கு செல்லமுடியும்.
இப்பாதை திறந்துவைக்கப்பட்டதால் அங்கும்புர, பூஜாபிட்டிய, கண்டி, அலவதுகொட, மாத்தளை, அக்குறணை உள்ளிட்ட பல பிரதேசங்களை சேர்ந்த பிரயாணிகள் பயனடையவுள்ளனர். ஹல்கொல்ல பிரதேசத்துக்கு பஸ் சேவையை விஸ்தரிக்கும் நோக்கில் அடுத்த வருட நிதியொதுக்கீட்டில் மேலதிகமாகவுள்ள 1.5 கிலோமீற்றர் நீளமான வீதியை அமைத்து தருவோம் என்றார்.
பூஜாபிட்டிய பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எல்.எம். ரஸானின் வேண்டுகோளுக்கிணங்க நிர்மாணிக்கப்பட்ட இவ்வீதி திறப்புவிழா நிகழ்வில், மத்திய மகாணசபையின் முன்னாள் உறுப்பினர் நயீமுல்லாஹ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அம்ஜத் முத்தலிப், கட்சி அமைப்பாளர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.