

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மணப்பெண் அலங்காரம், திருமணம், பிறந்தநாள், மற்றும் பண்டிகைகளுக்கான அலங்காரக் கேக் செய்யும் பயிற்சிகளைப் பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு பயனியர் வீதியிலுள்ள 'கபே சில்' நிலையத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு பாடும்மீன் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் ஷியானி அழகுக் கலை நிலையத்தினால் அதிக பொருளாதாரத்தைத் தேடித்தரும் அழகுபடுத்தும் தொழில் நுட்பக் கலைப் பயிற்சிகளைப் பூர்த்தி செய்த 20 யுவதிகள் இந்நிகழ்வில் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
அரச தொழிலில் அதிக மோகம் கொண்ட தற்கால யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கோடு குறித்த தொழில்சார் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக ஷியானி அழகுக் கலை நியைத்தின் ஸ்தாபகர் ஷியானி தெரிவித்தார்.
இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மறை மாவட்டக் குருமுதல்வர் அடிகளார் ஏ. தேவதாசன், மட்டக்களப்பு பாடும்மீன் லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் ஜி. ஜெயநாதன், வந்தாறுமூலை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் விரிவுரையாளர் எஸ்.கே. சபேஸன், லயன்ஸ் கழக வலயத் தலைவர் எஸ். சடாச்சரராஜா ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.