லண்டன் பின்ஸ்பெரி பார்க் என்னுமிடத்தில் ( Finsbury Park ) முஸ்லிம் நலன்புரி நிலைய பள்ளிவாசலில் இரவுத் தொழுகை முடிந்து வெளியேறிய மக்கள் மீது வேண்டுமென்றே வேன் ஒன்றை வேகமாக ஓட்டி வந்து மோதிய வெள்ளையினத்தைச் சேர்ந்த நபர் ''எனக்கு முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும்!'' (I want to kill Muslims!'') என்று திரும்பத் திரும்பச் சத்தமிட்டதாக அங்கு சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர். மேலும் 45 வயதான அந்த நபரைப் பொலிஸார் கைது செய்யும் போது, ''நான் இதனை மீண்டும் செய்வேன்!'' ( I will do it again ) என்று சத்தமாக மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்ததையும் தாம் கேட்டதாகக் கண்ணால் கண்ட சாட்சிகள் கூறியுள்ளனர்.
மேற்கண்ட தாக்குதலை 'அநேகமாக பயங்கரவாதத் தாக்குதல்' என வர்ணித்துள்ள பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்துள்ளதோடு அப்பகுதியின் பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமர் தெரேசா மே அதியுயர் பாதுகாப்புக்கு கூட்டமான கோப்ரா (Cobra Meeting) கூட்டத்தை இன்று கூட்டி, ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
மேற்படி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுமார் எட்டுப் பேர் ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

