இன்று முன்னாள் ஜனாதிபதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்..
நேற்று அமைச்சர் ராஜித சேனாரத்ன நடாத்திய அமைச்சரவை முடிவுகளை அறிவுக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அளுத்கமை தொடர்பான விடயங்கள் பேசப்பட்டிருந்தன. இவ்வாட்சிக் காலத்தில் அக் கலவரம் தொடர்பில் சரியோ பிழையோ பேசுவது வரவேற்கத் தக்கதாகும். ஒரு விடயம் தொடர்பான கலந்துரையாடல்களே அதன் தீர்வுக்கான முதற் படியாகும்.
குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் அளுத்கமை தொடர்பில் எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என கூறியிருந்தார். இதன் போது தலையிட்ட ஊடகவியலாளர் ஒருவர் “நாங்கள் ராஜபக்ஸ நீங்கள் எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டுகிறாரே! நீங்கள் என்ன செய்தீர்கள்” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜித இதற்கான பதிலை விசாரித்து சொல்லுவதாக பதில் அளித்திருந்தார்.
அமைச்சர் ராஜித சேனாரத்தன இவ்வாட்சியின் பலமிக்க அமைச்சர்களில் ஒருவர். அமைச்சரவை பேச்சாளர்களிலும் ஒருவர். இப்படியான ஒருவர் விசாரித்து சொல்லுவதாக கூறுவதானது இவ்வாட்சிக் காலத்தில் அளுத்கமை கலவரம் தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதையும் இனியும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை குறை கூறி ஆட்சி செய்ய முடியாது என்பதையும் அறிந்து கொள்ளச் செய்கிறது.
இவ்வாட்சி காலத்தில் அளுத்கமை கலவரம் தொடர்பான எந்த விதமான பேச்சுக்களையும் இவ்வாட்சியாளர்களின் வாய்களில் இருந்து அவதானிக்க முடியவில்லை. முன்னாள் ஜனாதிபதி அணியினரே அவ் விடயம் தொடர்பில் அடிக்கடி நியாபகப்படுத்துகின்றனர். இருப்பினும் இவ்வாட்சி அளுத்கமை கலவரம் தொடர்பில் ஏதோ செய்கிறது என்றே வைத்துக்கொள்வோம்.
அமைச்சர் ராஜித களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். இவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் பங்களிப்பு செய்திருந்தன. அளுத்கமை கலவரம் தொடர்பில் தனக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய மக்கள் என்ற அடிப்படையில் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டிய இவர் விசாரித்து சொல்லுவதாக கூறுவது அந்த மக்களை இவர் தனது கவனத்திலேயே கொள்ளவில்லை என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.
இவ்வாட்சி ஆட்சியை நம்பி முஸ்லிம்கள் சென்றுள்ளதானது மண் குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்கிய கதையாகவே உள்ளது.
