இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் விஜயமாக ஸ்ரீலங்கா பயணமாகியுள்ளதாக இந்திய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்காவின் அரச தலைவர்களை தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சித் தலைவர்களையும் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார். அத்துடன் மலையகத்திற்கு விஜயம் செய்யவுள்ள நரேந்திர மோடி,ஸ்ரீலங்காவில் நடைபெறும் சர்வதேச வெசாக் விழாவிலும் கலந்துகொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாஙகம் அறிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக வலியுறுத்தவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவுக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நான்கு கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர்.
ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைவார்.
அங்கிருந்து வாகனம் மூலம் கங்காராமய விகாரைக்குச் சென்று ஸ்ரீலங்கா பிரதமருடன் இணைந்து அலங்கார விளக்குகளை திறந்து வைப்பார். அதன் பின்னர் தாஜ்சமுத்ரா விடுதிக்குச் சென்று ஓய்வெடுத்து விட்டு, இரவு 8.20 அளவில் ஸ்ரீலங்கா அதிபர் மாளிகைக்குச் செல்வார்.
அங்கு இந்தியப்பிரதமருக்கு ஸ்ரீலங்கா அதிபர் இராப்போசன விருந்து அளிப்பார். இரவு 10 மணிக்கு மேல் தாஜ்சமுத்ரா விடுதிக்குத் திரும்பும் இந்தியப் பிரதமர், நாளை காலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடக்கும் வெசாக் நிகழ்வில் பங்கேற்பார்.
அதன் பின்னர் ஹற்றன் மற்றும் கண்டிக்கான பயணங்களை மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர், நாளை பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக நாடு திரும்பவுள்ளார்.
