முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் மு.கா சின் முன்னாள் தேசியப்பட்டியல் எம்பியுமான நிந்தவூர் ஹசனலி தனக்கு எப்போதெல்லாம் தேசியப்பட்டியல் எம்பியும் பாதி அமைச்சர் என்கின்ற தேவை வருகின்றதோ அப்போதெல்லாம் அவர் கையில் எடுக்கும் கருப்பொருள் அம்பாரை கரையோர மாவட்டம்.
ஆனால் ஒரு போதும் சாணக்கியம் றஊப் ஹக்கீம் அம்பாரை கரையோர மாவட்டம் பற்றி வாய்திறக்கவில்லை.காரணம் ஹசன் அலியின் கருப்பொருள் ஒரு போதும் நிறைவேறும் விடயல்ல என்பது நன்கு தெரியும்.
ஹசன் அலியின் ஊடக கருத்து
அப்போது ஊடகப் பேட்டியொன்றில் ஹசன் அலி கருத்துத் தெரிவிக்கும் போது என்னைப் பொறுத்தமட்டில் முதலமைச்சர் பதவி என்பதை விடவும் கரையோர மாவட்ட விடயமே முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.தற்போதைய அரசியல் சூழலில் முதலமைச்சர் பதவியைப் பெற்று எவ்வித சாதனையையும் சாதித்து விட முடியாது.வெறும் பதவியாகவே அது இருக்கும்.சமூகத்திற்குக் கிடைத்த கௌரவமான பதவியாக அது இருக்கலாம்.
அது தனிமனிதனுக்கு முடிசூட்டும் விடயமாகவேயிருக்கும். இதைவிடக் கரையோர மாவட்டம் கிடைத்தால் அது அம்பாரை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களுக்கு முடிசூட்டும் விடயமாகவே மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவு செய்யத்தக்கதாகவும் அமையும் என்றார். இது எம்மிடம் ஆதாரமாகவுள்ளது.
கரையோர மாவட்டக் கோரிக்கை
கிழக்கு மாகாண சபைத் தோதல் முடிந்த பின்பு நிந்தவூரில் இந்த ஹசனலி அம்பாரை மாவட்ட மு.கா. செயற்க்குழு என்கின்ற கூடிக்கலையும் கூட்டமொன்றை 2012 ஆம் ஆண்டு கூட்டினார். அப்போது இந்த கரையோர மாவட்டம் என்கின்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதுவரை காலமும் கரையோர மாவட்டம் என்று சொல்லிவந்த மு.கா. அப்போது முஸ்லிம் கரையோர மாவட்டம் என்ற புதிய உசுப்பேற்றலை அப்போது ஹசன் அலி ஆரம்பித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவி
கடந்த இரண்டு மாகாண சபைத் தேர்தல்களிலும் மு. கா. தலைவர் ஹக்கீம் முதலமைச்சர் பதவிக்காக பல வகையான முயற்சிகளை மேற்க்கொண்டார். அப்போது இந்த ஹசனலிக்கு அந்த முதலமைச்சர் பதவி என்பது தனிநபரை திருப்திப்படுத்தும் பதவி என்று தெரியவில்லையா?
முதலமைச்சர் பதவி என்பது எதுவும் சாதிக்க முடியாது என்று அப்போது ஹசனலிக்குத் தெரியவில்லையா. கிழக்கில் மு.கா முதலமைச்சர் என்னும்; பொம்மை முதல்வர் ஆட்சியை ஒளிப்போம் என்றுதானே கிழக்கு மாகாணம் முழுவதும் பிரச்சாரம் செய்தீர்கள்.அஷ்ரப்பின் கனவு என்றெல்லாம் மக்களை ஏமாற்றினீர்கள்.தமிழ் கூட்டமைப்பு முதல்வர் பதவியைத் தருகின்றோம் என்று பகிரங்க அழைப்பு வந்த போதும் அதை நிராகரிக்கும் போது அது வெறும் பொம்மை முதல்வர் என்று தெரியவில்லையா?
மஹிந்த காலத்தில் மத்தியில் எம்பியாக இருந்த ஹக்கீம் ஹசன் அலி அகிய இருவரும் ( 2002) தங்களது எம்பி பதவியை இராஜினாமா செய்துவிட்டு கிழக்கு மாகாண தேர்தலில் கிழக்கு முதல்வர் பதவியை நோக்கி படையெடுக்கவில்லையா? ஹக்கீமுக்கு முதலமைச்சர் கிடைக்கவில்லை என்பதனால் மீண்டும் எம்பியாக நாடாளுமன்றம் செல்லவில்லையா? அமெரிக்க தூதுவரிடம் ஹக்கீம் முதலமைச்சர் பதவி வேண்டிக் கோரிக்கைகள் பல வைக்கவில்லையா? இவைகள் எதுவுமே பச்சைப்பிள்ளை ஹசன் அலிக்குத் தெரியாதா?
2.12முடிந்த பின்பு மு.கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண முதலமைச்சரைப் பெறும் என்று அரசிடம் ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளதாக அன்று ஊடகங்களில் ஹசன் அலி பொய் சொல்லிக் கொண்டு திரியவில்லையா? ஆனால் அப்படியொரு ஒப்பந்தம் இல்லவே இல்லையென்று அப்போது பசில் ராஜபக்ச சொல்லியிருந்தார்.
அப்போது ஹஸனலி இலவச எம்பியைப் பெற்றுக் கொண்டு பாதி அமைச்சு ஒன்று பெறும் நோக்கில் முஸ்லிம் கரையோர மாவட்டம் வேண்டுமாம். அதற்கு முன்னோடியாக கல்முனையில் மேலதிக அரச அதிபர் பணிமனையாம்.அப்போது புதிய புரளியொன்றாக இந்த முஸ்லிம் கரையோரக் கச்சேரி என்ற வித்தையை எடுத்து விட்டார்.
மஹிந்த ஆட்சிக் காலத்தில் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த போது 2 அரை அமைச்சு பெற்றுக் கொள்ளும்படி மஹிந்தர் முன்வந்த போதும் ஹரீஸ் மற்றும் பைசல் காசிமுக்கும் அந்த அரை அமைச்சு பெற்றுக் கொள்ளும் நிலை வந்த போது தனக்குக் கிடைக்காத அரை அமைச்சு வேறு யாருக்கும் கிடைக்;கக் கூடாது என்று ஹக்கீமிடம் ஹசன் அலி அடம் பிடிக்கவில்லையா?
ஏற்கனவே இயங்கிய மேலதிக அரசாங்க அதிபர் பணிமனை
ஏற்கனவே சுனாமி நிவாரணப் பணிகளுக்காக 2005 ஆம் ஆண்டு கல்முனையில் தனியார் கட்டிடமொன்றில் இயங்கி வந்த மேலதிக கரையோர கச்சேரியை மூடிவிடும்படி கடந்த 2009 ஆம் ஆண்டில் அரச உத்தரவொன்று கிடைத்ததனால் கல்முனை கரையோர மேலதிக கச்சேரி மூடப்பட்டு விட்டது.சுனாமி பாதிப்புக்களைக் கவனிப்பதற்க்காக பொத்துவில் தொட்டு பெரிய நீலாவணை பகுதிகளிலுள்ள சுனாமி பாதிப்புக்களை மேற்பார்வை செய்வதற்காகவே கல்முனை மேலதிக அரசாங்க அதிபர் ஏற்படுத்தப்பட்டது.
கல்முனையில் இந்தப் பணிமனை இயங்கியது.அப்போது இந்த மேலதிக கச்சேரி அம்பாறைக் கச்சேரியுடன் மீண்டும் இணைக்கப்பட்டுவிட்டது. அதனால் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய அதிகாரி இன்று கிழக்கு மாகாண சபைக்குள் சென்றுவிட்டார்.
அதிகாரமில்லாத மேலதிக அரச அதிபர்
மேலதிக அரசாங்க அதிபர் பதவி என்பது ஒரு பிரதேச செயலாளருக்கு இருக்கின்ற அதிகாரம் கூட இல்லை. அப்படிப்பட்ட மேலதிக அரசாங்க அதிபர் என்பது அதில் ஒன்றுமே இல்லை என்பது பச்சைப்பிள்ளை ஹசன் அலிக்குத் தெரியாதா?
ஆனால் அப்போது ஹசன் அலிக்கு தில் இருந்திருக்குhனால்; அம்பாறை மாவட்ட கரையோரக் கச்சேரியை விட மஹிந்த அரசில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபராக தமிழ் பேசுபவரை பெற்று ஜெயித்துக் காட்டியிருக்க வேண்டும்.
இந்த டிமாண்டை கிழக்கு மாகாண ஆட்சி அமைப்பின் போது காட்டியிருக்க வேண்டும்.அதைவிட்டு மக்களை ஏமாற்றும் மாயாhலங்கள் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். முஸ்லிம்களுக்கு துரோகம் செய்கின்றார்கள் என்பதையும் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.உள்நோக்கம் கொண்டு மு.கா 3 எம்பிக்களைப் பெறும் எண்ணத்தில்தான்; இந்த முஸ்லிம் மாவட்டம் அப்போது முன்வைக்கப்பட்டது.
கல்முனையில் சிங்கள பிரதேசச் செயலாளர்
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு முதன் முதலாக மஹிந்த ஆட்சியில் கல்முனை முஸ்லிம் பகுதி பிரதேச செயலாளராக சிங்களவர் நியமிக்கப்பட்டார். மகாஓயா பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய மொகான் விக்கிரம ஆராச்சியை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அப்போது நியமித்தது.அப்போது இதை தட்டிக் கேட்க வக்கில்லாமல் போயிற்று.தொகுதிவாரித் தேர்தல் வரும் போது இந்தக் கரையோர மாவட்டம் விடயத்தை ஹக்கீம் கையில் எடுப்பார்.
நாம் முன்வைக்கும் கேள்வி
அட்டானைச்சேனை பிரதேசத்தின் ஒலுவில் ஏழை விவசாய மக்களின் பறிக்கப்பட்ட விவசாயக் காணிகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்ததா? அண்மையில் இராணுவத்தால் பறிக்கப்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் மக்களின் குடியிருப்புக் காணிகளை மீட்டுத்தர முடிந்ததா?
ஹக்கீமை விடுவோம்.ஹக்கீம் வெளிமாவட்டம் நமது மக்களின் பிரச்சினை பற்றித் தெரியாது. அம்பாரை எம்பிக்கள் என்ற வகையில் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஏதாவது ஒன்றில் இந்த ஹசன்அலி ஹரீஸ்.பைசல் காசீம் ஆகியோர் இணைந்து தீர்வு கண்டதுண்டா? அல்லது இவைகள் குறித்து பேசியதுண்டர்?
தமிழ் மக்களை கடலில் கொண்டு தள்ளி விடுவதா
தமிழ் மக்களின் போராட்டங்களிலும் குருதியிலும் கிடைக்கப்பெற்ற சுகபோகங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் அனுபவித்துக் கொண்டு நோகாமல் நொங்கு சாப்பிட்டுக் கொண்டு அம்பாரையில் முஸ்லிம் இராஜ்ஜியம் அமைத்தால் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களை கடலில் கொண்டு தள்ளிவிடுவதா.
ஏற்கனவே அம்பாரையில் மட்டுமல்ல நாடு முழுவதும் தமிழ் மக்களையும் தமிழ் அரசியலையும் ஒரங்கட்டி ஒதுக்கி வருகின்ற மு.கா முஸ்லிம் மாவட்டம் அமைத்தால் தமிழ் மக்களின் கெதி அதோ கதிதான் என்ற பயம் தமிழ் மக்களிடம் நிறைந்து காணப்படுகின்றது. அம்பாரையில் மு.கா 3 எம்பிக்களைப் பெறுவதற்காக முஸ்லிம் மாவட்டம் என்ற பூச்சாண்டியை அப்போது கிளப்பினீர்கள்.
இது எட்டாக் கனிக்கு கொட்டாவி விட்ட நிலைதான்.முஸ்லிம் மாவட்டம் என்ற கோரிக்கை வந்தாலும் தமிழ் மக்களின் ஆசீர்வாதத்துடன் பெறலாமேயொழிய சும்மா புதுப் புது வித்தைகளை எடுத்து விடக் கூடாது.கனவிலும் நடக்காத விடயம் இது. அதிபர் மைத்திரி அரசில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்ல உறவோடும் நெருக்கமாகவும் உள்ளது.கூட்டமைப்பு விரும்பாத எந்தவொரு முஸ்லிம் மாவட்டமும் கிடைக்கப் போவதில்லை.
தனக்கு எம்பி கிடைக்காத விரக்தியில் ஹசன் அலி
ஹசன் அலியின் இந்த முஸ்லிம் மாவட்டம் நடக்கின்ற விடயமல்ல.ஆனால் எதிர் வருகின்ற தேர்தல்களில் அந்தப் புரளியை பயன்படுத்துவார்கள்.தற்போது மு.கா அம்பாரையில் களை இழந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ஏதாவது ஒரு புரளியை எடுத்து விட வேண்டிய தேவை மு.கா வுக்கு உள்ளது.
இந்த வித்தையினால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையுள்ளது. அதனால் இந்த வித்தையை தமிழ் மக்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.இன்னும் இன்னும் தமிழ் மக்களின் அடிமடியில்தான் இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் கைவைக்கின்றார்கள்.மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாக தமிழ் மக்களின் நிலையுள்ளது.வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அம்பாரையில் தமிழ் மக்களை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டு முஸ்லிம் இராஜ்ஜியம் அமைக்கப் போகின்றார்களா அல்லது முஸ்லிம் ஈழம் அமைக்கப் போகின்றார்களா.என்ன வேசம் இது. என்ன கோசம் இது.
ஹக்கீமை நம்பி ஏமாந்த பின்னர்தான் ஹசன் அலி போர்க்கொடி தூக்கியுள்ளார்.
ஆண்டாண்டுகள் புரண்டாலும் அழுது புரண்டாலும் மாண்டோர்கள் வரவதில்லை.ஹசன் அலி இனிமேல் ஹக்கீம் அணியால் எம்பி கிடைக்கப் போவதில்லை.அதனால் மாவட்டம் எங்கும் தனது மனக்குமுறலை விரக்தியை சொல்லி ஒப்பாரி வைக்கின்றார்.
சும்மா கதை கேட்க கூட்டம் கூடுகின்றன.இதை வைத்து தனக்கு ஆதரவு இருக்கு ஹக்கீம் அணியை தோற்கடிப்போம் காற்றில் பறப்போம்,மின்னலைப் பிடிப்போம்,கடலில் நடப்போம் என்ற ஹசன் அலியின் பரப்புரை என்பது அம்பாரையில் எடுடாது. என்கின்றார்கள் அம்பாரை ஹக்கீம் வாலாக்கள்.காரணம் ஹசன் அலி ஹக்கீமுக்கு எதிராக வந்துள்ள நேரம் பிளை. மற்றது தனக்கு எம்பி தரவில்லை என்ற கோதாவில்தான் இப்படி நொந்து தவிக்கின்றார் என்பதும் மக்களுக்குத் தெரியும்.ஹசன் அலி ஹக்கீமுக்கு எதிராக வரவேண்டிய நேரம் எப்போதே கடந்து விட்டது. பாவம் அப்பாவி ஹசன் அலி.
அம்பாரை மக்கள் நலனில் ஹசன் அபிமானம் வைத்திருந்தால் இந்த புரட்சியை எப்போதோ செய்திருக்க வேண்டும். ஆனால் தனக்கு இலவச எம்பி ஹக்கீமால் ஒரு போதும் கிடைக்க மாட்டாது என்ற முடிவில் வந்த பின்புதான் இப்படித் தெருத் தெருவாக ஓலமிட்டு வருகின்றார். கடைசி வரையும் ஹக்கீம் இலவச எம்பி தருவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் ஹசன் அலி இருந்தார். நாம் கடந்த 7 வருடமாக பல ஆய்வுக் கட்டுரையில் ஹக்கீம் காங்கிரஸ் பற்றி எழுதியுள்ள அத்தனையும் இப்போதுதான் ஹசன் அலிக்கு புரிந்து தெரிந்து தூக்கத்தில் இருந்து விழித்துள்ளார்.
ஹக்கீம் வகையறாக்கள் வரும் போது நாரே தக்பீர் என்பார்கள் முஸ்லிம் மாவட்டம் கிடைத்து விடும். ஹசன் அலியின் பரப்புரைகளும் மறைந்து விடும்.
விரைவில் நடக்கவுள்ள கிழக்குத் தேர்தலில் ஹசன் அலி வகையறாக்கள் மக்களிடம் வரும் போது வெறும் செல்லாக் காசுதான். இன்னும் நிறையவுள்ளது. தொடர்ந்து வரும்
-ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன்-