பிறவ்ஸ்-
இறக்காமம் மாயக்கல்லி மலையில் பெளத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியை தடுப்பது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனை இன்றிரவு (புதன்) 8 மணியளவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள வில்பத்து நிகழ்வுக்கு செல்லும் வழியில், எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு விஜயம்செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் இரா. சம்பந்தனுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மாயக்கல்லி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய உயர்மட்ட நடவடிக்கைளை இருதரப்பும் கூட்டாக முன்னெடுப்பதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதுதொடர்பாக ஜனாதிபதி மட்டத்தில் மிக விரைவாக பேசுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய மலையை அண்டியுள்ள காணியை அதன் உரிமையாளர்களிடமிருந்து அடாத்தாக ஆக்கிரமித்து, அவ்விடத்தில் பெளத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முஸ்தீபுக்கு ஆதரவளிப்பது நல்லாட்சி அரசாங்கத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒரு செயல் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தடையுத்தரவு தீர்மானத்தை அமுல்படுத்துவதில், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் எவரும் இடைஞ்சலாக செயற்படக்கூடாது என்பதை இருவரும் அழுத்தமாக வலியுறுத்தவுள்ளனர்.
இத்தீர்மானங்களோடு, இறக்காமம் மக்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இவ்வார இறுதிக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மாயக்கல்லி மலைக்கு நேரடி விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.