அதுபோன்று இன்னுமொரு கல்விசார் விடயம் ஒன்றும் சர்ச்சைக்குரிய விடயமாக முகப் புத்தகத்திலும் நமது ஊரிலும் நிலவி வருகின்றது. அதாவது , அட்டாளைச்சேனையில் முதல் பட்டதாரி யார் என்பதும், முதல் BA யார் என்ற பிரச்சினையும் ஆகும்.
இது அட்டாளைச்சேனையின் வரலாற்றுக் குறிப்பின் முக்கிய ஒரு விடயமாகப் பார்க்கப் படவேண்டியுள்ளது. ஏனெனில் என்றாவது ஒருநாள், அட்டாளைச்சேனையின் வரலாறு ஒரு புத்தக வடிவில் வெளிவரும்போது அவ்வரலாற்றில் உண்மைத்தன்மை பேணப்படல் வேண்டுமே அன்றி , உண்மைக்கு மாறான திரிபு பட்ட விடயம்கள் பதிவில் இடம்பெறக் கூடாது என்பதனால் காலத்தின் தேவையாக ஊரின் நன்மை கருதி இந்தக் கட்டுரையை வரைகின்றேன்.
மேற் கூறப்பட்ட இரு விடயம்களும் அதாவது “முதல் பட்டதாரி” மற்றும் * “முதல் BA” யார் என்பற்கான விடை ஊரில் உள்ள மூத்த தலைமுறையினருக்கு நன்கு தெரிந்ததொன்றாகும். ஆனால் இளம் தலைமுறையினருக்கு அது ஒரு புரியாத புதிராக இருந்து கொண்டு வருகின்றமை ஊரின் நலன் விரும்பிகளால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஏனெனில் சிலர் உண்மைக்கு மாறான விதத்தில் வரலாற்றை மாற்றி அமைக்கும் வண்ணம் நடந்து கொள்கின்றனர். தற்போது கிழக்கு மாகாணத்தில் அதுவும் குறிப்பாக எமது பகுதியில் கல்வித்தராதரம் வளம்பெற்று காணப்படுகிறது.
அதனால் தற்போது வீட்டுக்கு வீடு படித்து பட்டம் பெற்றவர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். டாக்டர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சகலதுறைகளிலும் பட்டம் பெற்றவர்கள், ஒரு படி மேல் சென்று கலாநிதி பட்டம் பெற்றவர்கள் என்று ஏராளமாகக் காணக் கிடைக்கின்றது. அது கல்வியில் ஏற்பட்ட மலர்ச்சியைக் காட்டுகிறது. அதற்கு முஸ்லிம்கள் ஆகிய நாம் முன்னைநாள் கல்வி அமைச்சர் மர்ஹூம் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் அவர்களுக்கு என்றென்றும் நன்றிகூற கடமைப் பட்டவர்களாவோம்.
தற்போதைய காலத்தை விட்டு சில தசாப்தங்கள் பின்னோக்கி சென்று பார்ப்போமாயின், இற்றைக்கு அறுபது, எழுபது வருடம்களுக்கு முன்னர் கல்வியில் சாதாரண தரப் பரீட்சையில் (SSC) சித்தியடைவது என்பதே ஒரு சாதனையாகவும், கனவாகவும், கருதப்பட்டது. ஏனெனில் அன்றைய காலத்தில் கல்வி வசதி, போக்குவரத்து வசதி, மின்சார வசதி, பணவசதி ஆகியவை இல்லாததன் காரணத்தால் அன்றைய பாடசாலைகளின் கல்வித்தரம் மிகவும் குன்றிக் காணப்பட்டது. இருந்த ஒன்றிரண்டு பாடசாலைகளிலும் போதிய ஆசிரியர்கள் இல்லாத காலத்தில் சாதாரண பரீட்சையில் சித்தியடைவதென்பது ஒரு பகல் கனவாக காணப்பட்டது, SSC இல் சித்தி அடைந்தால் அது கல்வியில் உயர்ந்த தராதரமாகக் கருதப்பட்டது. ஆகவே அன்று பட்டப் படிப்பு என்பது இன்றைய கலாநிதி (Doctorate) படிப்புக்கும் மேலாகப் பார்க்கப் பட்டது.
அக்காலத்தில் உயர்தரம் (HSC) படிக்கவேண்டுமாயின் ஓரளவு வசதி படைத்த பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி, மத்தியகல்லூரி போன்ற தமிழ் / இந்து பாடசாலைகளை நோக்கி கல்விகற்க அனுப்பி வைத்தனர். அந்த வகையில் இற்றைக்கு எழுபத்தைந்து வருடம்களுக்கு முன்னர் 1940 ம் ஆண்டளவில் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர்தான் அட்டாளைச்சேனையின் கல்வியின் சிரேஸ்டர் எனப் போற்றப்பட்ட மர்ஹூம் சம்சுதீன் BSC அவர்களாகும்.
பின்னர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் கல்வி கற்ற அவர் ஆங்கில மொழிமூலத்தில் SSC பரீட்சையில் சித்தியடைந்து , அதன் பின்னர் கொழும்பு சென்று அலெக்ஸ்சான்ரா கல்லூரியில கல்வி கற்று HSC பரீட்சையிலும் சித்தியடைந்தார். அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் பல்கலைக்கழகமாக UNIVERSITY OF CEYLON மட்டுமே இருந்தது.
அப் பல்கலைக்கழகம் இரண்டு பிரிவாகப் பிரிந்து COLOMBO CAMPUS, PERADENIYA CAMPUS என கொழும்பிலும், பேராதனையிலும் இயங்கிவந்தது. அன்று விஞ்ஞான பீடம் (SCIENCE FACULTY) , COLOMBO CAMPUS இல் மட்டுமே காணப்பட்ட நிலையில், அன்று விஞ்ஞான கற்கைநெறியில் பட்டம் பெறவிரும்பிய மாணவர்கள், சிறந்த கல்வியைப் பெறுவதற்காக இந்தியாவிற்கு சென்று படிக்கவேண்டிய நிலைமை காணப்பட்டது. அன்று இந்திய பல்கலைக்கழகம்கள் சிறந்ததாகக் காணப்பட்டமையினால் வசதி படைத்த கனவான்களின் பிள்ளைகள் கப்பல் மார்க்கமாக இந்தியாவிற்கு (மெட்ராஸ்) சென்று கல்விகற்றனர்.
அந்தவகையில், அட்டாளைச்சேனையில் அக்கிராசரின் சிரேஸ்ட புதல்வரான மர்ஹூம் சம்சுதீன் (BSC) அவர்களும், அக்கரைப்பற்றில் ஹாசிம் (BSC / ADVOCATE) அவர்களும், சம்மாந்துறையில் மரைக்கார் தம்பி ஆகியோரும் கல்வி கற்று அந்த அந்த ஊருக்கு முதல் விஞ்ஞான பட்டதாரிகளாக 1960 ம் ஆண்டுக்கு முன்னரே பெருமை சேர்த்தனர். யாழில் பிரபல விலங்கியல் ஆசிரியராக இருந்த அதிபர் பொ. கனகசபாபதி (மகாஜனாக் கல்லூரி முன்னாள் அதிபர்), திரு சந்திரசேகரி செல்லையா விலங்கியல் ஆசிரியர் ஆகியோர் இவர்களின் கூடப் படித்த ஏனைய இந்து சக நண்பர்கள் ஆகும். இவர்களெல்லாம் முதல் பட்டதாரிகள் என்ற காரணத்தினால்தான் அந்தந்த ஊர்களில் BSC என செல்லமாக அழைக்கப் பட்டனர்.
அதேபோல்தான் சம்மாந்துறையில் அப்துல் மஜீது MP யை BA என அழைத்தனர். ஆகவே அட்டாளைச்சேனையின் முதல் பட்டதாரி சம்சுதீன் BSC என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. மர்ஹூம் சம்சுதீன் BSC அவர்கள் கல்வியையே மூச்சாக நினைத்து வாழ்ந்தவர். BSC அவர்கள் ஆரம்பத்தில் ஒரு ஆங்கில ஆசிரியராக இருந்து, அதில் திருப்தி காணாது பின்னர் இந்தியா சென்று விஞ்ஞான பட்டதாரியாகிய பின்னர் வேறு எந்த தொழிலுக்கும் செல்லாது மீண்டும் கல்விச் சேவையிலேயே இணைந்து கல்விக்காகவே வாழ்ந்தவர்.
ஒரு விஞ்ஞான பட்டதாரி ஆசிரியராக, அதிபராக, விரிவுரையாளராக,பிரதம கல்வி அதிகாரியாக, ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் அதிபராக மிளிர்ந்து மாவட்ட கல்விப் பணிப்பாளராக 1986 ம் ஆண்டு தனது ஐம்பத்தைந்தாவது வயதில் ஒய்வு பெற்றார். ஒய்வு பெறும்போது மட்டக்களப்பில் கல்விப் பணிப்பாளராக இருந்தார். ஆனால் அங்கு பயங்கரவாத சூழல் நிலவியதால் ஓய்வுபெற இன்னும் இருவருடம்கள் இருந்தபோதும் கட்டாயமாக ஓய்வுபெறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அல்லாதுவிடில் அமைச்சின் செயலாளராகவே ஒய்வு பெற்றிருப்பார் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. [அவர் பட்டதாரி என்ற காரணத்தினாலும், சிறந்த விளையாட்டு வீரர் என்ற காரணத்தினாலும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) பதவி அன்று (1970 ல்) அவரை தேடிவந்தது. அவர் அன்று பொலிஸ் சேவையில் இணைந்திருந்தால் ஒய்வு பெரும்போது நிச்சயமாக ஒரு உதவி பொலிஸ்மா அதிபராக (DIGP) ஒய்வு பெற்றிருப்பார்.
ஆனால் அவரின் கல்வித்தாகம் அவரை அப்பதவியை ஏற்க விடவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்]. அடுத்த விடயமான, முதல் BA பட்டதாரி யார் என்று பார்க்குமுன்பு , விஞ்ஞான கற்கைநெறியும் கிழக்கு மாகாணத்தின் கல்வியின் தரமும் எவ்வாறு இருந்தது என்று சிறுது கூற விளைகிறேன். அட்டாளைச்சேனையின் முதலாவது விஞ்ஞானப் பட்டதாரிக்கும் இரண்டாவது விஞ்ஞானப் பட்டதாரிக்கும் உள்ள இடைவெளி கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாகும். (அட்டாளைச்சேனையின் இரண்டாவது BSC பட்டதாரி அமீர்தீன் மௌலானா என்பது குறிப்பிடத்தக்கது).
எமது பகுதியில் அந்த அளவுக்கு உயிரியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் கற்பிக்க விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறை காணப்பட்டது. அக்காலத்தில் (சுமார் மூன்று, நான்கு தசாப்தம்களுக்கு முன்பு) தென் கிழக்கிலங்கையின் முக்கிய பாடசாலைகளான கல்முனை சாகிராக் கல்லூரியிலும் , அக்கரைப்பற்று, சம்மாந்துறை , அட்டாளைச்சேனை , மருதமுனை, நிந்தவூர் ஆகிய ஊர்களிலும் இருந்த மத்திய மகாவித்தியாலயம்களிலும் இந்நிலைமையே காணப்பட்டது. இருந்த ஒன்றிரண்டு விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாக காணப்பட்டனர்.
ஆனால், அக்காலத்தில்(1945-1980) யாழ்ப்பாணத்தின் கல்வித்தராதரம் மிகச்சிறப்பாகக் காணப்பட்டது. அதற்கான முக்கிய காரணம் அங்குள்ள தலை சிறந்த கல்லூரிகளில் இந்திய விஞ்ஞானப் பட்டதாரிகளும், இந்தியாவில் இருந்து வரவழைக்கப் பட்ட
விஞ்ஞான முதுமாணிப் பட்டதாரிளும் (MSC) கல்வி கற்பித்ததனாலேயே யாகும். யாழ்ப்பாணத்தின் கல்வி சிறப்பாகக் காணப்பட்டதால் அன்று மருத்துவம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளுக்கு பெருவாரியாக யாழ் மாணவர்களே பல்கலைக்கழகம்களுக்கு தெரிவாகினர். ஆகவே அன்று, எப்பாடு பட்டாவது யாழில் கல்வி கற்றே ஆகவேண்டும் என்ற நிலைமைக்கு எமது சிறார்கள் தள்ளப்பட்டனர். வசதி படைத்த பெற்றோர்களின் பிள்ளைகள் யாழ்பாண கல்லூரிகளில் கல்விகற்க படை எடுத்தனர்.
அன்று (யுத்தத்திற்கு முன்பு) குறிப்பாக இலங்கையின் ஒவ்வொரு பின்தங்கிய மாவட்டம்களிலும் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம், தமிழ் மாணவர்கள் யாழில் கல்வி கற்றார்கள் என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். ஆனால், இலங்கையில் மாவட்ட ரீதியாக தரப்படுத்தல் முறை அறிமுகப் படுத்தப் பட்டபின்பே ,முஸ்லிம்களின் கல்வியில் மாற்றம் ஏற்பட்டது. 3S, 4S எடுத்து சித்தியடைந்தவர்கள் எல்லாம் மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளுக்கு எடுபட்டனர். அதற்கு மாறாக யாழிலோ, மிகச்சிறந்த முறையில் (2A,2B, A,3B) என்று சித்தியடைந்தவர்களுக்கும் பல்கலைக் கழகம் ஒரு கனவாக மாறியது.
மர்கூம் பதியுதீன் மகுமூத் அவர்கள் முஸ்லிம்களின் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார் என்றால் அது மிகையாகாது. ஆனால் யாழ்பாண மக்களுக்கோ அது ஒரு சாபக்கேடாக அமைந்தது. இதன் விளைவு தான் இயக்கம்கள் தோன்றக் காரணமாகவும், பிற்காலத்தில் யுத்தம் உருவாகவும் காரணமாக அமைந்தது. இனி நமது கட்டுரைக்கு வருவோம். அட்டாளைச்சேனையின் இரண்டாவது பட்டதாரி அக்கிராசரின் மூன்றாவது புத்திரன் ஜனாப் சாபிடீன் ஆகும்.
இவர் டாக்டர் ஜலால்தீனுக்கு இளையவர் ஆகும். ஆரம்பத்தில் சாபிடீன் அவர்களும் ஒரு ஆசிரியராகவே இருந்தார். ஆசிரியராக இருக்கும்போதே உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தி பேராதனை பல்கலைக்கழகத்திற்கு கலைபீடத்திற்கு தெரிவானார். 1966 ம் ஆண்டிலிருந்து 1968 ம் ஆண்டுவரை கல்வி பயின்று 1969 ம் ஆண்டு ஒரு BA பட்டதாரியாக பட்டம் பெற்றார்.
அவருடன் கூடப் படித்தவருள் உயிருடன் இருப்பவர் சம்மாந்துறையை சேர்ந்த சீனித்தம்பி விதானையின் மகன் பாரூக் அதிபர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. சாபிடீன் BA அவர்களும் தனது மூத்த சகோதரர் சம்சுதீன் BSC இன் வழியைப் பின்பற்றி மீண்டும் கல்விச்சேவையில் தனது பணியை கலைப்பட்டதாரி ஆசிரியராகத் தொடர்ந்தார்.
அவர் பூமி சாஸ்த்திரம் (GOEGRAPHY ) படிப்பிப்பதில் பெயர் பெற்று விளங்கியதாக அவரின் மாணவர்கள் சொல்வார்கள். அவரும் வட்டாரக் கல்வி அதிகாரியாக (CEO), கல்வியதிகாரியாக(EO), பிரதம கல்வியதிகாரியாக (ChEO), கல்விப் பணிப்பாளராக (DE) சேவையாற்றி, மாகாண கல்விப் பணிப்பாளராக ஒய்வு பெற்றார்.
இவர் 1970 ம் ஆண்டில் சாய்ந்த மருது இப்ராஹிம் டாக்டரின் மகளை திருமணம் முடித்தார் (S.H.M JAMEEL அவர்களின் மதினியை ). தனது மூத்த சகோதரர் சம்சுதீன் BSC யைப்போல் சொந்த ஊரில் திருமணம் முடித்திருந்தால் ஊர்மக்களால் BA என அழைக்கப் பட்டிருப்பார். அவர் வெளியூரில் திருமணம் முடித்து ஊரில் இல்லாததால் அவரை ஊர் மக்கள் மறந்து விட்டனர். (இதன்காரணமாக சாபிடீன் அவர்களுக்கு ஆறு வருடம்களுக்குப் பின் வந்த எஸ்.எல்.எம் பளீல் BA அவர்கள் மக்கள் முன் பிரபலமானார்).
மூன்றாவது பட்டதாரியாக பின்னர் எஸ்.எல்.எம்/ பளீல் அவர்கள் 1972 ம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்திற்கு கலைபீடத்திற்கு தெரிவானார். பின்னர் 1975 ம் ஆண்டு கற்கைநெறியை முடித்து ஒரு BA பட்டதாரியாக பட்டம் பெற்றார். ஆனால் பளீல் BA, ஊரில் திருமணமுடித்த ஒரே காரணத்தினால் சாபிடீன் BA வை மறந்த மக்கள் , பளீல் BA வை மனதில் வைத்துள்ளனர்.
அதன் பின்னர் செய்யது மௌலானா மற்றும் உஸைர் ஆகியோரும் BA பட்டதாரியாக பட்டம் பெற்றனர் என்பதுதான் அட்டாளைச்சேனையின் கல்வியின் வரலாறு. இது பலபேருக்கு தெரியாத விடயமாகும். செய்யது மௌலானா யார் என்றால் , ஆலையடி மௌலானாவின் மூன்றவது மகனும் ஹக் மௌலானா. ஹசரத் மௌலானா ஆகியோரின் உடன் பிறந்த சகோதரரும் ஆவார். இவரின் மகளைத்தான் பாரூக் மௌலானாவின் மகன் டாக்டர் திருமணம் முடித்துள்ளார்.
செய்யது மௌலானா அவர்களும் ஊரை விட்டு வெளியே சென்று குருநாகலில் திருமணம் முடித்ததால் அவரையும் ஊர் மக்கள் மறந்து விட்டனர். உஸைர் அவர்கள் ஒஸ்தாதுவின் மகன் ஆவார். இவர் கொழும்பு சாகிராக் கல்லூரியின் அதிபராக இருந்தார். இவர் B.M கமால்தீன் அவர்களின் (பதுருதீன் மௌலானாவின் மகன்) மைத்துனர் ஆவார். அவரும் வெளியூரில் திருமணம் முடித்ததால் அவரையும் ஊர் மக்கள் மறந்து விட்டனர்.
அடுத்ததாக கட்டாயம் குறிப்பிடப் படவேண்டிய ஒரு பிரமுகர் உள்ளார். அவர்தான் முன்னைநாள் பொத்துவில் முதல்வர் மர்கூம் டாக்டர் M.A.M ஜலால்தீன் அவர்களாகும். இவர் அக்கிராசரின் இரண்டாவது புத்திரன் ஆவார். ஜலால்தீன் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை சாதனா பாடசாலையில் (தற்போதைய அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி) கல்விகற்று, ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சையில் முதன்மையாக சித்தியடந்தமையால் 1945 ம் ஆண்டில் காத்தான் குடி மத்திய கல்லூரிக்கு மேற்படிப்பு படிக்கச் சென்றார். ஆங்கில மொழி மூலம் HSC வரை கல்விபயின்ற அவர், பின்னர் ஆங்கில ஆசிரியராக சிறிது காலம் சேவை செய்தார். அதில் திருப்தி காணாத ஜலால்தீனின் தந்தை அக்கிராசனார், அவரை ராஜகிரிய ஆயள்வேத மருத்துவக் கல்லூரியில் கல்விபயில கொழும்புக்கு அனுப்பினார்.
அங்கு திறம்படப் படித்த அவர் இறுதிப் பரீட்சையில் FIRST CLASS HONOURS இல் சித்தியடைந்து அகில இலங்கைரீதியில் இரண்டாவதாகவும், கிழக்கு மாகாணத்தின் முதலாவது தரத்திலும் வந்து சாதனை படைத்தார். அன்னார் டாக்டராக இருக்கும்போதே அதே மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், பீடாதிபதியாகவும் பதவி வகித்தார். அவரின் அயராத முயற்சியினால் அன்றைய கல்வி அமைச்சர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மூலம் அம்மருத்துவக் கல்லூரிக்கு பல்கலைக் கழக அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தார்.
ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசியலில் பிரவேசித்து 1977 ம் ஆண்டு தேர்தலில் அபார வெற்றியீட்டி, பொத்துவில் இரட்டைத்தொகுதிக்கு முதல்வரானார். இன்றைய தலைமுறையினர் அவரை அட்டாளைச்சேனையின் முதல் MP என்ற மட்டிலேயே நினைவில் வைத்துள்ளனர். ஆனால் அவர்தான் அட்டாளைச்சேனையின் முதல் டாக்டர் (1960ல்) என்பது மக்களால் மறக்கப் பட்ட உண்மையாகும்.
[இங்கு குறிப்பிடப்பட்ட அனைவரும் உள்வாரியாக பட்டம் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் வெளிவாரி, தொலைநோக்கு, ONLINE என்று எதுவும் இருக்கவில்லை என்பது முக்கிய விடயமாகும். அவையெல்லாம் 1978 ம் ஆண்டிற்கு பின்னரே உருவானது. ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் நடுவில் பட்டம் பெற்ற ஒருவர், தான் உள்வாரி எனவும் மற்றவர்கள் எல்லாம் வெளிவாரி எனவும் பிழையாக இளம் தலைமுறையினரை திசை திருப்புகின்றார் என கேள்விப் படுகின்றோம்].
இவையெல்லாம் அட்டாளைச்சேனையின் வரலாற்றுச் சான்றாகும். இவையெல்லாம் ஆவணமாக பாதுகாக்கப் படவேண்டும். இல்லையேல் இனிவரும் காலத்தில் வயது வந்தவர்கள் மறைந்த பின்பு வரலாற்றுச் சான்றுகள் திரிபு படுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. ஏனெனில் அண்மையில் ஒருவர் முகப்புத்தகத்தில் ஆதாரம் கேட்டு எழுதியிருந்தார். ஆனால் அவர் ஒரு SENIOR CITIZEN. அவரைப் போன்றவர்களையும், தப்புத் தப்பா கூறி ஊரின் இளம் தலைமுறையினரை வழி கெடுப்பவர்களையும் திருப்திப் படுத்தும் வண்ணமும், இனிமேலும் வரலாற்றை யாரும் திரிபு படுத்தக் கூடாது என்பதற்காகவும் இத்தால் அத்தாட்சிகளை பார்வைக்கு இணைத்துள்ளேன்.
இவற்றின் உண்மை பிரதிகளை பார்க்க விரும்பினால் தொ .பே. இல .0777281201.
(முக்கிய குறிப்பு: இக்கட்டுரையின் பிரதியும், கல்விச் சான்றுதல்களின் பிரதிகளும் , அட்டாளைச்சேனையின் பெரிய பள்ளிவாசல் தலைவரிடம் ஒரு ஆவணமாக ஒப்படைக்கப் பட்டுள்ளது).