பிறவ்ஸ்-
மாயக்கல்லிமலை விவகாரம் தொடர்பில், அதனை உரிய முறையில் ஆராய்ந்து அதற்கான பரிகாரம் காணும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரிடம் தெரிவித்தார்.
இறக்காமம், மாணிக்கடு பிரதேசத்திலுள்ள மாயக்கல்லிமலை பிரதேசத்தில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை தொடர்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை (28) பாராளுமன்றத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்து பேசியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாணிக்கமடு பிரதேசத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதுபோல முஸ்லிம்களின் காணிகளும் அங்கு இருக்கின்;றன. இவ்வாறு இரண்டு சிறுபான்மை சமூகமும் ஒற்றுமையாக வாழ்கின்ற இடத்தில், சில தேரர்களினதும் சில இனவாதிகளினதும் செயற்பாடுகளால் கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றது.
தற்போது அந்த இடத்திலுள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான காணியை பலவந்தமாக கைப்பற்றி அங்கு பௌத்த மடாலயம் அமைப்பதற்கான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த செயற்பாடானது பெரும்பான்மை மக்கள் மீதான சிறுபான்மை மக்களின் நல்லபிப்பிராயத்தை குழைக்கும் வகையில் அமைந்துள்ளது. இது இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு செயற்பாடாகும்.
தொல்பொருள் தடயங்கள் இருப்பதாக கூறப்பட்டு, அங்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான் தற்போது மாயக்கல்லி மலையிலும் பௌத்த மடாலயம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் அதிருப்தி தெரிவிப்பதாக ரவூப் ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்கள்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தொல்பொருள் தடயங்கள் உள்ள இடங்களில் புதிய கட்டிடங்களை அமைப்பதற்கு எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது என்றார். அத்துடன் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி. வணிகசேகரவிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அவரது கருத்துகளையும் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் மேலும் கூறும்போது, மாயக்கல்லிமலை விவகாரம் தொடர்பில் நான் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவுடன் பேசியுள்ளேன். அத்துடன் கிழக்கு மாகாண சபையிலும் இதற்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.
இறக்காமம் மக்கள் மிகுந்த பதற்றத்துடன் அங்கு வாழ்ந்து வருகின்றனர். கலகொட அத்தே ஞானசார தேரர் சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கு பௌத்த மடாலயம் அமைக்குமாறு உத்தரவிட்டு வந்துள்ளார். இனவாதத்தை பரப்புகின்ற பொதுபல சேனா அமைப்பின் அமைப்பின் செயலாளர் இவ்வாறு அங்கு சென்று வந்துள்ளது, பதற்றநிலையை மேலும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். ஞானசார தேரர் சென்றமை தொடர்பில் ஜனாதிபதியும் தனது அதிருப்தியை தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்திலிருந்து கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டபோது, அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, என்னுடைய பிரத்தியேக செயலாளரினால் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றபோதும், அதுபற்றி தான் அறிந்திருக்கவில்லை என்று கூறினார்.
இன நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் மாயக்கல்லி மலையில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறித்து சிறுபான்மை தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, விரைவில் அதற்கான பரிகாரத்தை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி இரு தரப்பினரிடமும் தெரிவித்தார்.