ஊடகப்பிரிவு-
முஸ்லிம்களுக்கென தனியான, ஒரு பலமான ஊடகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் தனவந்தர்கள் இதற்கு உதவ முன் வர வேண்டும் எனவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.
வெலிவிட்ட ஜரீனா முஸ்தபா எழுதிய ’சமூகமே பதில் சொல்', 'இருதீபங்கள்' ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா கொழும்பு அல் ஹிதாயா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
முஸ்லிம் நாடுகள் செல்வச் செழிப்பில் உள்ள போதும் நிம்மதியிழந்து தவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் புனரமைப்பு, நிவாரண ,நலனோம்பு நடவடிக்கைகளுக்கு கூட இந்த நாடுகள் வாரி வழங்கும் அளவுக்கு செல்வம் கொழிக்கின்றது. எனினும் அமைதியிழந்து அந்த நாடுகள் தவிக்கின்றன.
அதே போன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் அவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு அச்சத்துடனும் பீதியுடனும் சீவிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
நல்லாட்சியை உருவாக்குவதில் நமது பங்களிப்பு அபரிமிதமானது.
மிம்பர்களையும் சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி நம்மவர்கள் ஆட்சி மாற்றத்துக்கு உதவினர்.தனவந்தர்கள் தமது செல்வங்களை வாரி இறைத்தனர்.
அரசியல் தலைமைகள் அந்த அரசுடன் இருந்த போதே மக்கள் தாமாகவே இவ்வாறன மாற்றத்தை விரும்பியதை எவரும் இலகுவில் மறந்துவிடமுடியாது. எனினும் அரசியல் மாற்றம் நமக்கு நிம்மதி தந்ததா?
ஆட்சியிலும், ஆட்சியின் பங்காளிகளிலும் முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர்.
நடு வீதியிலே நின்றுகொண்டு உரிமைக்காக போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதற்காக இன்னுமொரு ஆட்சியை புதிதாக கொண்டு வரவேண்டும் என்று நான் பேசுவதாக அர்த்தம் கொள்ளக்கூடாது.
தடம்புரண்டு செல்லும் தற்போதைய ஆட்சியை சரியான தடத்தில், நேரிய பாதையில் பயணிக்கச் செய்வதற்கு நாம் ஒன்றுபட வேண்டும். அரசியல் தலைமைகள் தொடக்கம் அனைத்து சாரார்களின் பங்களிப்பு இதற்கு இன்றியமையாதது.
ஒரு சிறு அளவினரான கூட்டம் இன்று அரசை ஆட்டுவிக்கும் நிலை உருவாகியிருக்கின்றது. இனவாத தனியார் ஊடகங்கள் இதற்கு தீனி போடுகின்றன.
இலங்கை ஜனாதிபதி ரஷ்யாவில் வைத்து வில்பத்து வர்த்தமானி பிரகடனத்தை மேற்கொண்டமை நமக்கு சிறந்த படிப்பினையாகும்.
எழுத்தாளர்கள் சமூகத்தை வழிநடாத்த வேண்டிய தார்மீக பொறுப்பை கொண்டவர்கள்.
பிரபல பெண் எழுத்தாளர் ஜரீனா முஸ்தபா பத்து நூல்களை எழுதியுள்ளார். இத்தனை படைப்புக்களை வெளியிடுவது என்பது இலேசான காரியம் அல்ல. அவரது எழுத்துப்பணி தொடர வேண்டும், நிலைக்க வேண்டும்.
தாய்மார்களின் பழக்கவழக்கங்களே பிள்ளைகளில் பிரதிபலிக்கின்றன. கர்ப்பிணித்தாய்மார்கள் பேறுகாலத்தில் குர்ஆன் ஒதுவது, நல்ல சிந்தனையில் செயற்படுவது, சிறந்த உணவு பழக்கங்களை கையாள்வது பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது. எழுத்தாளர்கள் இவற்றை மையப்படுத்தி எழுதுவது சிறந்தது.
முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு முஸ்லிம் பெயர்களை தாங்கிய சில பெண்கள் எதிர்ப்பு தெரிவிப்பது வேதனையானது. பெரும் தலைவர்களான சேர். ராசிக் பரீத், டாக்டர் டீ.பி ஜாயா போன்றவர்களின் அதீத உழைப்பினால் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய விழுமியங்களை கட்டிக்காக்கும் விசேட சட்டங்களை இல்லாது ஒழிப்பதற்கும் விமர்சிப்பதற்கும் நாம் இடமளிக்க முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த விழாவில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என் எம் அமீன், முன்னாள் அமைச்சர் ஏ எச் எம் அஸ்வர், கவிஞர் அஸ்ரப் சிஹாப்தீன், கலைவாதி கலீல், அக்பர் அலி, பத்திகையாளர் ஜம்சித் ஆகியோரும் உரையாற்றினர்.