மினுவாங்கொடை நிருபர்-
புத்தாண்டு காலப் பகுதியில் கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக, கம்பஹா மாவட்ட நுகர்வோர் அதிகார சபை வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அரிசி வகைகளான சம்பா, நாடு, வெள்ளைப் பச்சை மற்றும் சிவப்பரிசி ஆகியவற்றை சில்லறை விலைக்கு அப்பால், கூடுதலான விலைக்கு விற்ற 30 வர்த்தகர்கள், மினுவாங்கொடை பிரதேசத்தில் இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு எதிராகவே வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் அரிசி தொடர்பாக அதிக பட்ச விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தும், கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்னும் அதிக பட்ச விலைக்கும் அதிகமாக அரிசி விற்கப்பட்டு வருவதாக, பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், கட்டுப்பாட்டு விலையையும் மீறி அரிசியை விற்பனை செய்து வந்த இவ்வாறான வர்த்தக நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
புத்தாண்டு காலப் பகுதிக்குள், கட்டுப்பாட்டு விலைக்கும் மேலதிகமாக அரிசி விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் பற்றி முறைப்பாடுகளைச் செய்ய, பொது மக்களுக்கு 1977 என்ற உடனடி தொலைபேசி அழைப்பு இலக்கம் விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பொது மக்கள் அவசர வேளைகளில் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகளான நாட்டரிசி ஒரு கிலோ கிறாம் - 72 ரூபா, பச்சை அரிசி ( கெக்குலு ) மற்றும் சிவப்பரிசி ஒரு கிலோ கிறாம் - 70 ரூபா, சம்பா அரிசி ( கீரி மற்றும் சூதுரு சம்பா தவிர்ந்தவை ) ஒரு கிலோ கிறாம் 80 ரூபா ஆகிய விலைகளில் விற்கப்படல் வேண்டும்.
உள் நாட்டு உற்பத்தி அரிசி வகைகளான நாட்டரிசி ஒரு கிலோ கிறாம் - 80 ரூபா, பச்சை அரிசி மற்றும் சிவப்பரிசி ஒரு கிலோ கிறாம் - 78 ரூபா, சம்பா அரிசி ( கீரி, சூதுரு சம்பா தவிர்ந்தவை ) ஒரு கிலோ கிலோ கிறாம் - 90 ரூபா ஆகிய விலைகளில் விற்கப்படல் வேண்டும் என்று, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.