அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் மலசலகூடம் இல்லாது வாழும் 120 குடும்பங்களுக்கான மலசலகூடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடன் முன்னெடுப்பேன் என சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு அதிகார சபையின் பணிப்பாளர் சி.பத்மநாதன் உறுதியளித்தார்.
புனர்வாழ்வு அதிகார சபையின் ஆட்களையும், ஆதனங்களையும், கைத்தொழில்களையும் புனரமைப்பு செய்யும் கிராமிய புனரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்; 5 மில்லியன் ரூபாய் செலவில் கண்ணகிகிராமத்தில் அமைக்கப்பட்ட வீதி, மதகு மற்றும் பல்தேவைக் கட்டடம் என்பவற்றை இன்று (20) திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கண்ணகிகிராமத்தின் இன்றைய நிலை தொடர்பிலும், உட்கட்டமைப்பு மற்றும் மலசலகூட வசதியின்மை தொடர்பிலும் பிரதேச செயலாளர் பணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக்குட்பட்ட இக்கிராமத்தின் நிலை தொடர்பில் விடுக்கப்பட்ட பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கு அமைவாக அமெரிக்க சர்வதேசத் தொண்டு நிறுவனமொன்றின் உதவியுடன் இத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அவர் புதிய வீதியினை திறந்து வைத்ததுடன், அமைக்கப்பட்ட மதகினையும் பார்வையிட்டார். தொடர்ந்து கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கான கட்டடத்தினையும் திறந்து வைத்தததுடன் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுமக்களுடனான சந்திப்பில் இணைந்து கொண்டார்.
கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியினூடாக குறித்த அபிவிருத்தி திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டதாகவும், இவ்வருடம் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை எனவும் கூறிய அவர், தனது முயற்சியின் பயனாக சர்வதேச நிதி நிறுவனங்களைக் கொண்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்வின் இறுதியில் அமைக்கப்பட்ட கட்டடங்களுக்கான திறப்புக்களையும் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.