முஸ்லிம் தலைவர்கள் மஹிந்தவை ஆதரிக்கவேண்டும் - அஸ்வர் கோரிக்கை

எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ந்த அரசு முஸ்லிம்களுக்கு புளித்துப் போய்விட்டது. அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை இதற்குச் சான்றாகவுள்ளது. இந்த நிலையில் முஸ்லிம் தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோடு ஓர் உடன்படிக்கையைச் செய்து கொள்வதன் மூலம் எதிர் காலத்தில் அவர் தலைமையிலான ஆட்சியின் கீழ் முஸ்லிம்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி சார்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அதில் அவர் கூறியதாவது,

இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடத்துக்கு கொண்டு வந்த முஸ்லிம் தலைவர்களுக்கு இந்த அரசாங்கம் புளித்துப் போய்விட்டது. இந்தப் பழம் புளிக்கும் என்று வேறுபக்கம் திரும்ப ஆரம்பித்து விட்டார்கள். நவமணியின் நேற்றைய பிரதான செய்தியை சுட்டிக்காட்டிப் பேசிய அஸ்வர், நல்லாட்சி அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது என்று ஹிஸ்புல்லாஹ் அமைச்சரே வாய் திறந்து கூறக்கூடியளவுக்கு அரசாங்கம் முஸ்லிம்களைப் புறக்கணிக்கிறது. இந்த அரசாங்கத்திடம் வக்களாத்து வாங்கிய ஒரு முஸ்லிம் இப்போது இலத்திரனியல் ஊடகத்தில் சொல்கின்றார். 

சுமந்திரன் வரும் போது ஜனாதிபதி எழுந்து நிற்கின்றார். ஆனால் முஸ்லிம் தலைவர்களுக்கு இவர்கள் எந்தவித மரியாதையையும் அளிப்பதில்லை என்று அவர் கூறுகின்றார். ஏன் குட்டக் குட்ட நாம் குனிய வேண்டும். இவர்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தக் கூடிய இரண்டு தலைவர்கள் இங்கு இருக்கின்றார்கள் என்று சொன்னால், அவர்களைவிட்டு எதிர்காலத்தில் தன்மானத்தோடு முஸ்லிம் சமுதாயத்தை நடாத்தக் கூடிய ஒருவரை நாங்கள் தேர்ந்தெடுப்போம் அவர்தான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை கிழக்கு மாகாண முஸ்லிம்களும் ஏராளமான முஸ்லிம் தலைவர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவை எளிமையாகச் சந்திக்கலாம். பேச்சுக்கள் பேசலாம். அவர் குற்றங்குறைகளை காது தாழ்த்தி கேட்கக் கூடியவர். அது மாத்திரமல்ல,உபசரிப்பதில் உச்ச கட்டத்தைத் தொட்டவர். எனவே அவரோடு அனைத்து முஸ்லிம் தலைவர்களும் ஓர் உடன்படிக்கை செய்து ஒன்றாக அவர் தலைமையின் கீழ் நாம் இயங்கினால் நாம் எதிர்காலத்தில் அவர் பதவிக்கு வந்த போது முஸ்லிம்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் எமக்கு ஒரு பெரும் சக்தியாக இருக்கும்.

எனவே ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், அதாஉல்லாஹ், ஹிஸ்புல்லாஹ், பஷீர் சேகுதாவூத், சேகு இஸ்ஸதீன், சவாஹிர் சாலி, ஹஸன் அலி, நௌஸாத் மன்சூர், மஜீத் போன்றோர் ஒன்று சேர்ந்து நிதானமாகச் சிந்தித்து எதிர்காலத்தில் எமக்கு பாதுகாப்பை வழங்கக் கூடிய ஓர் அரணை எழுப்புவதற்கு மஹிந்த ராஜபக்ஷவோடு ஒரு புரிந்துணர்வுக்கு வருமாறு வாஞ்சையோடும் தோழமைப் பாசத்தோடும் அனைத்து முஸ்லிம் தலைமைகளிடத்திலும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன்.

அது மாத்திரமல்ல, அவர் நேற்றுமுன்தினம் கிழக்கில் இருந்து வந்த முஸ்லிம்களைச் சந்தித்து அவர்களிடத்தில் பேசும் போது, ஒரு பெரும் அபாய சமிக்ஞையை விடுத்தார். அதாவது, தன்னை முஸ்லிம் சமூகத்திலிருந்து வேறுபடுத்துவத்துவதற்கு சர்வதேச சக்திகளைக் கொண்டு அன்று எப்படி வியூகம் அமைக்கப்பட்டதோ அதேமாதிரியாக மீண்டும் வெளிநாட்டு சக்திகளையும் ஏகாதிபத்தியவாதிகளையும் கொண்டு மீண்டும் என்னை முஸ்லிம்களிடமிருந்து பிரிப்பதற்காக வேண்டி ஒரு பெரும் சதித்திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டு வருகின்றது. இதனையிட்டு முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை செய்து கொள்ள விரும்புகின்றேன்.

என்னுடைய காலத்தில் முஸ்லிம்களுக்கு எந்த கஷ்டத்தையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை அநியாயாம் செய்யவுமில்லை என்பதை உறுதியாகச் சொல்லுகின்றேன். நான் செய்த பணிகளை ஒவ்வொன்றாக பட்டியல் போட்டுத் தெரிவிக்கலாம். அதாவது, அழகான நவீன நான்கு பள்ளிவாசல்களை அங்குரார்ப்பணம் செய்து வைத்திருக்கிறேன். ஹஜ்ஜுக்கு எந்தவிதமான சிரமமும் இல்லாமல் அனுப்புவதற்கான வசதிகளைச் செய்து கொடுத்தேன். நீதிமன்றம் பாங்கு சொல்வதனை ஒலிபரப்பு மூலமாகத் தடை செய்த போது அதனை செய்யுங்கள் என்று தேசிய வானொலிக்கு உத்தரவு செய்ததும் நான்தான். அது இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும் முஸ்லிம்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் - என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -