காரைதீவு நிருபர் சகா-
அம்பாரை மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரச்சினைகள், தேவைப்பாடுகளை தினகரன் பத்திரிகை மூலம் எவ்வாறு நிவர்த்தி செய்வது? தொடர்பான கருத்தரங்கும், தினகரன் பத்திரிகையின் வர்த்தக மேம்பாடு தொடர்பான செயலமர்வும் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இச்செயலமர்வில் அம்பாரை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் தினகரன் செய்தியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, கருத்துக்களை வழங்கி சிறப்பித்தனர்.
இதில் தினகரன் பிரதம ஆசிரியர் கே.குணராசா, செய்தி ஆசிரியர்களான கே.அசோக்குமார், மர்லின் மரிக்கார், வண்ணவானவில் பொறுப்பாசிரியர் அருள் சத்தியநாதன், தினகரன் வாரமஞ்சரி செய்தியாசிரியர் விசு கருணாநிதி உள்ளிட்ட ஆசிரியர் பீட உயரதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இச்செயலமர்வில் அம்பாரை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டு, அவற்றை எவ்வாறு தினகரன் பத்திரிகை வாயிலாக உரிய அதிகாரிகளுக்கும், பொறுப்புள்ளவர்களுக்கும் எடுத்துக் கூறித் தீர்த்து வைப்பதென ஆராயப்பட்டதோடு, தினகரன் பத்திரிகையின் வாசிப்புத் திறனை மக்கள் மத்தியில் மேம்பாடடையச் செய்வது தொடர்பாகவும் சிறப்பான முடிவுகள் எட்டப்பட்டன.
தினகரன் பிரதம ஆசிரியர் குணராசா இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-
'தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையாக வாழும் இந்த மாவட்டத்திலுள்ள மக்களின் பிரச்சினைகளை ஜனரஞ்சகப்படுத்தி, அவற்றைத் தீர்த்து வைப்பதில் தினகரன் என்றும் பின்னிற்கப் போவதில்லை. எனவே, இப்பகுதி மக்கள் எமது தினகரன் வர்த்தக மேம்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும். ஊடகவியலாளர்களும் இதில் கைகோர்க்க முன்வர வேண்டும்' எனத் தெரிவித்தார்.