முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கில் பாடசாலைகளில் உள்ளவெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நாளை 14 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது,
திறைசேரியில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு பிரதமரின் பணிப்புரைக்கமைய அவரின் ஆலோசகர் ஆர் பாஸ்கரலிங்கம் தலைமை தாங்கவுள்ளதுடன் இதன்போது கிழக்கு மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எட்டப்படவுள்ளன.
தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,கிழக்கு மாகாண கல்விமைச்சர் எஸ்,தண்டாயுதபானி ,தேசிய கல்வி அமைச்சின் செயலாளர்,திறைசேரியின் பணிப்பாளர் நாயகம்,தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்,ஆளுனரின் செயலாளர், தலைமைசெயலாளர்,மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இதனூடாக கிழக்கில் உள்ள 4703 அதிபர் மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கான பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி கிழக்கு முதலமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த்து கிழக்கில் உள்ளவெற்றிடங்கள் மற்றும் அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்த்தல் தொடர்பில் விரிவாக தெ ளிவுபடுத்தினார்.
இந்த சந்திப்பையடுத்து பட்டதாரிகள் தொடர்பில் ஒருவார காலத்திற்குள் சாதகமான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என உறுதியளித்திருந்த நிலையில் குறித்த காலக்கெடு நிறைடைவதற்குள் கிழக்கில் உள்ளவெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான தீர்மானமிக்க கூட்டமொன்றை நடத்துவதற்கு பிரதமர் பணிப்புரை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 14 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகர் ஆர் பாஸ்கரலிங்கம் மற்றும் கிழக்கு முதலமைச்சர் ஆகியோருக்கிடையில் தனிப்பட்ட கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளது.
இதன் போது கிழக்கில் ஏனைய அரச திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கும் பட்டதாரிகளை உள்வாங்குவது தொடர்பில் இதன் போது கிழக்கு முதலமைச்சர் பிரதமரின் ஆலோசகரை வலியுறுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரச நியமனங்கள் மற்றும் அரச தொழில் வாய்ப்புக்களுக்கான நிதி திறைசேரியினாலேயே வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த கலந்துரையாடல் கிழக்கு மாகாண வரலாற்றில் முக்கிய மைல்கல்லாய் அமையும் என கருதப்படுகின்றது.