மலையக முஸ்லிம் கவுன்சிலின் முயற்சியால் பதுளை நகரில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள நோயாளர் நலன்புரி நிலையத்துக்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஐந்து இலட்சம் ரூபா நிதியினை இன்று கையளித்தது. ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இதற்கான காசோலையை அமைச்சின் காரியாலயத்தின் வைத்து இன்று புதன்கிழமை மலையக முஸ்லிம் கவுன்சில் உறுப்பினர்களிடம் கையளித்தார்.
பதுளை நகரில் புற்று நோய் வைத்தியசாலை அமையப்பெற்றுள்ளமையால் தூர பிரதேசங்களில் இருந்து அதிகளவு வெளிநோயாளர்கள் வருகைத் தருகின்றனர். அவர்களுக்கு தங்குமிட வசதிகள் இல்லாமைக் காரணமாக மலையக முஸ்லிம் கவுன்சில் நோயாளர் நலன்புரி நிலையமொன்றை தற்காலிகமாக ஆரம்பித்துள்ளது. இதனை மேலும் விரிவுபடுத்தி, நிரந்தர கட்டிடமொன்றை தாபிப்பதற்கு 20 மில்லியன் ரூபா நிதியினை திரட்டி வருகின்றது.
அத்துடன், ஸ்தீரமான ஜனாசா நலன்புரி சேவையை ஆரம்பிப்பதற்கும் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற மலையக முஸ்லிம் கவுன்சில், ஜனாசாக்களை கொண்டு செல்வதற்கு வாகனமொன்றினை கொள்வனவு செய்துள்ளதுடன் அச்சேவையை மேலும் விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை மலையக முஸ்லிம் கவுன்சில் உறுப்பினர்கள் இன்று அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்து தமது திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
இதற்கமைய, இத்திட்டத்துக்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக ஐந்து இலட்சம் ரூபாவினை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மலையக முஸ்லிம் கவுன்சில் உறுப்பினர்களிடம் கையளித்தார்.