ஜோர்தானின் தலை நகர் அம்மானில் நடைபெற்ற வருடாந்த சந்தையில் இலங்கைத் தூதரகம் கலந்து கொண்டு இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஏற்றுமதிப் பொருட்களை ஊக்குவித்தது.
பல்வேறு நாடுகள் பங்கேற்ற இச்சந்தையில் இலங்கையின் உற்பத்திப் பொருட்களான சிலோன் டீ தேங்காய் எண்ணெய் வகைகள் ஆயுர்வேத மருந்துகள் இயற்கை அழகு சாதனப் பொருட்கள் நொரிட்டாக்கி பீங்கான் உற்பத்திப் பொருட்கள் முதலியன காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.
இலங்கையின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைக் கேள்வியை ஜோர்தானில் மேம்படுத்துவதற்காகவும் புதிய பொருட்களை இங்கு அறிமுகம் செய்வதற்காகவும் தூதுவரலாயம் எடுத்து வரும் பல்வேறு செயற்பாடுகளுள் இந்நிகழ்வும் ஒன்றாகும் .
ஜோர்தானுக்கும் இலங்கைக்குமிடையிலான வருடாந்த வர்த்தக நிலுவை சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.எமது நாட்டுக்கு சாதகமாக அமைந்துள்ள இந்நிலுவையில் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேயிலை ஏற்றுமதி மூலம் பெறப்படுகிறது . இவ்வாறான வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் நிலுவையை எமது நாட்டுக்கு மேலும் சாதகமாக உயர்த்த உதவும் .
இச்சந்தையில் அமைக்கப்பட்டிருந்த இலங்கையின் வர்த்தக நிலையத்திற்கு பல நூற்றுக்கணக்கான ஜோர்தானிய நுகர்வோரும் வர்த்தகர்களும் பிற நாட்டவர்களும் சமுகமளித்தனர்.
ஜோர்தான் நாட்டின் இளவரசியும் முன்னைய மன்னர் ஹுஸைனின் தங்கையுமான மேதகு பஸ்மா பின் தலால் அவர்கள் இலங்கை நிலையத்திற்கு வருகை தந்து இலங்கை உற்பத்திப் பொருட்களைப் பார்வையிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும் .
நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்-



