எம்.ஜே.எம்.சஜீத்-
அற்பசொற்ப இலாபங்களுக்காக எமது சமூகத்தை காட்டிக் கொடுக்க வேண்டாமென கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் தயா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர், கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் இணைத் தலைமையில் நேற்று (07) அம்பாறை கச்சேரியில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்:-
மாணிக்கமடு பிரதேசத்தில் திடீரென புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயத்தினை அறிந்ததும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது கண்டனத்தை தெரிவித்தேன். குறிப்பாக ஐக்கியமாகவும், இன உறவோடும் வாழும் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் இந்நிகழ்வுகள் அச்ச நிலையை தோற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டேன்.
இதன்போது அரசாங்க அதிபர் விசேட கூட்டம் ஒன்றினை கூட்டவுள்ளதாகவும் இதில் கலந்து கொள்ளுமாறும் தெரிவித்தார். இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களையும் அழைக்கவுள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தார். இக்கூட்டம் கடந்த 2ஆம் திகதி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கச்சேரி கூட்ட மண்டபத்தில்; நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பௌத்த குருமார், இறக்காமம், வரிப்பத்தான்சேனை பள்ளிவாசல் பிரதிநிதிகள், மாணிக்கமடு கோயில் பிரதிநிதிகள், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தமன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர், இறக்காமப் பிரதேச முக்கியஸ்தர்கள், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், சம்மாந்துறை அஸ்ஸ_றா சபைத் தலைவருமான அமீர், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர், இறக்காமப் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவர் எஸ்.ஐ. மன்சூர், இறக்காம பிரதேச செயலாளர் ஆகியோருடன் நானும் கலந்து கெண்டேன்.
இதன்போது பௌத்த குருமார்களின் தலைவர் உரையாற்றும் போது தீகவாபிய விகாரைக்கு செல்லும் வழியில் மாணிக்கமடு எனும் இடத்தில் சிறிய விகாரை ஒன்றினை அமைக்கவுள்ளதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் உரையாற்றுகையில்:-
சிறிய அளவிலான பௌத்த விகாரை மட்டும் அமைக்க பௌத்த மத குருமார்கள் வேண்டுகோள் விடுப்பதாகவும், இந்த விடயத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர் ஏற்கனவே உடன்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நான் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் உண்மையான உணர்வுகளை இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பௌத்த தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மத்தியில் சுமார் 45நிமிடங்கள் தெளிவுபடுத்தினேன்.
இதேவேளை கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற இறக்காமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இறக்காமப் பிரதேச முக்கியஸ்தர்கள், மாணிக்கமடு சிலை வைப்பு தொடர்பாக கேள்விகளைக் கேட்டவுடன் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் இந்த அரசாங்கம் அவங்க எந்த இடத்திலும் சிலை வைக்கலாம் யாரிடமும் அனுமதி பெறத்தேவையில்லை எனவும் வைக்கப்பட்ட சிலைக்கு எதிராக ராசா வந்தாலும் சிலை எடுபடாது என நியாயப்படுத்தி உரத்தும் கூறினார். இந்த செய்திகள் இணையதளங்களில் வெளிவந்தன.
இது தொடர்பாக அன்மையில் தொலைக்காட்சியில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவிடம் கேட்கப்பட்ட போது ஊடகங்களில்; வெளிவந்த செய்திகளை அவர் தெரிவித்துள்ளார். ஒரு போதும் இன வாதத்தை ஆதரிப்பவர்கள் அல்ல நாங்கள் அற்ப சொற்ப நலனுக்காக சமூகத்தை காட்டிக் கொடுக்கவும் மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
அம்பாறைக் கூட்டத்திலும், இறக்காமக் கூட்டத்திலும் புத்தர் சிலை வைப்பதனை நியாயப்படுத்தி விட்டு அரசியல் காள்ப்புணர்ச்சி என்ற போலிக்; காரணத்தை கூறி தனது செயற்பாட்டை நியாயப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் முற்படுகின்றார் எனவும் உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.