மட்டக்களப்பு மங்களாராமைய விஹாராதிபதியினால், மட்டக்களப்பு கெவலியாமடு பகுதியில், கடுமையாக பயமுறுத்தலுக்கும், துவேஷ நிந்தனைக்கும் உள்ளாகிய கச்சைக்கொடி கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசனை அமைச்சு அலுவலகத்தில் நேரில் சந்தித்து முறையீடு செய்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, அப்பிராந்திய குடியேற்ற அதிகாரி அரியரத்தினம் சிவகுமார், அயல் வலய கிராமசேவகர் ஜதீஸ்குமார் சயந்தன், ஜமமு தேசிய அமைப்பாளர் எஸ். ராஜேந்திரன், அமைச்சு அதிகாரியும் ஜமமு நிறைவாக செயலாளருமான பிரியாணி குணரத்ன, மனித உரிமை மற்றும் அபிவிருத்தி நிலைய சட்ட உதவியாளர் டொமினிக் பிரேமநாத் ஆகியோர் உடனிருந்தனர்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது,
கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதனுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும்படி சட்ட ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்னாயக்கவுக்கு நான் அறிவித்துள்ளேன். அதேபோல் கிராம சேவகர்களின் கடமைக்கு பொறுப்பான உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கும், இது தொடர்பில் அறிவித்துள்ளேன். இந்நிலையில் பிரபல சட்டத்தரணியும், மனித உரிமையாளருமான இரத்தினவேலின் வழிகாட்டலில் கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன், மனித உரிமை ஆணைக்குழுவிலும் இன்று முறைப்பாடு செய்துள்ளார். இவருக்கு துணையாக மனித உரிமை மற்றும் அபிவிருத்தி நிலைய சட்ட உதவியாளர் டொமினிக் பிரேமநாத் செயற்பட்டுள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பிலும், நாட்டில் இன்று தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக எழுந்துள்ள பொதுவான பேரினவாத கருத்தோட்டம் தொடர்பிலும் இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் சந்திக்க உள்ளேன். அதேபோல் நேற்று மாலை சோபித தேரரின் பெயரில் இயங்கி வரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தை சார்ந்த சிங்கள முற்போக்கு சிவில் சமூக பிரதிநிதிகளுடனான முதல்கட்ட சந்திப்பு நடந்தது. இவ்வார இறுதியில் இந்த பெருகி வரும் இனவாதம் தொடர்பில் காத்திரமான நிலைபாட்டைவெளிப்படுத்த உள்ளதாக சமூக நீதிக்கான தேசிய இயக்க தலைவர் சரத் விஜெசூரிய என்னிடம் உறுதியளித்துள்ளார்.
நாட்டில் இனப்பிரச்சினையை ஏற்படுத்தி அதில் அரசியல் இலாபம் பெற இன்று பொது எதிரணி தயாராக இருக்கின்றது. பொது எதிரணி என கூறப்படும் பிரிவினரின் மிக முக்கியமான தலைவர், சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மங்களாராமைய விகாரைக்கு விஜயம் செய்து விஹாராதிபதியிடம் கலந்துரையாடியுள்ளார். இதன் பிறகே கடைசியாக நடைபெற்ற இந்த இனவாத கூச்சல் மட்டக்களப்பில் நடந்தேறியுள்ளது.
நேற்று செங்கலடி பன்குடாவெளியில் இந்த குறிப்பிட்ட மங்களாராமைய தேரர் முன்னெடுத்த அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிராக பொலிசாரினால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டது. இந்நிலையில், பொதுவாகவும், சமூக ஊடகங்களிலும் கருத்துகள் தெரிவிக்கும்போது, தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், ஏனையோரும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். பிரச்சனைகள் தொடர்பில் எவரும் மிக சுலபமாக கருத்துகளை ஊடகங்களில் கூறலாம். ஆனால், பின்விளைவுகள் ஏற்படும்போது அவற்றை எதிர்கொள்ள எவரும் பெரும்பாலும் ஸ்தலத்தில் இருப்பதில்லை. இதுவே இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டு வரும் தூரதிஷ்டவசமான வரலாறு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். எனவே பொறுப்புடன் செயற்படும் அதேவேளை, காத்திரமான மாற்று நடவடிக்கைகளையும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் என்ற முறையில் பொறுப்புடன் எடுத்து நிலைமைகளை நான் கையாண்டு வருவதாக நம்புகிறேன்.