இதேவேளை, வெறுப்பு பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட டான் பிரியசாந்த் கைது செய்யப்பட்டமைக்காக தௌஹீத் ஜமாஅத்தின் செயலாளரை கைதுசெய்யவேண்டும் என்ற தேவை கிடையாது. யார் குற்றிமிழைத்தாலும் அவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல் படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவிக்கையில்,
'கொலை அச்சுறுத்தல் விடுதல்', 'ஒரு இனத்தை அழிப்பதாக சூளுரைத்தல்', 'நாட்டில் இரத்த ஆறு ஓடவிடுவேன்' என்றவாறு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் வெறுப்பு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். இவர் பெறும்பான்மை சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர். இவரை மக்கள் ஏற்றுக்கொள்ளததால் தோல்வியடைந்தவர். ஆனால் இவர் முஸ்லிம் தமிழ் மக்கள் மீது வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தனது இலக்கை நோக்கி முன்னோக்கிச் செல்கிறார். இவரின் செயற்பாடுகள் நாட்டின் சட்டத்திற்கு முரணானதாக அமைந்திருக்கிறது. எனவே இவருக்கு எதிராக தண்டனை சட்டத்தின் கீழ் பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் பொலிஸார் ஜனாதிபதி அல்லது பிரதமரின் உத்தரவு வரும் வரை காத்துக்கொண்டிருக்கின்றனர். அல்லது அரசியல்வாதிகள் ஆழுத்தம் கொடுக்கும் வரை பொடுபோக்காக இருக்கின்றனர்.
சாதாரண மக்களின் திருட்டுச் சம்பவங்களுக்கும் சண்டைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதுபோல் பொலிஸார் சுயாதீனமாக இயங்கவேண்டும். இனவாத செயற்பாடுகளிலும் வெறுப்பு பிரச்சார வேலைகளில் ஈடுபடுவோருக்கும் சுயமாக இயங்கி நடவடிக்கையை மேற்கொள் வேண்டும். அப்போதுதான் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல முடியும்.
அத்துடன் டான் பிரியசாத் கைது செய்யப்பட்டமையினால் தௌஹீத் ஜமாஅத்தின் செயலாளர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவ்வாறு நடக்காவிடின் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்றும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கூறியிருக்கின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது.
டான் பிரசாத் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டமையினால் அவறுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்குமாறே நாம் பொலிஸாருக்கு அழுத்தம் பிரயோகித்தோம். அப்துர் ராசிக் சட்டத்தை மீறியிருப்பின் அவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். டான் பிரியசாத் கைதானமையால் அப்துர் ராசிக் கைது செய்யப்பட வேண்டும் என்ற கூற்று வேடிக்கையானது. சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றார்.