பின் தங்கிய கிராமமான குடிவில் பிரதேச மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் மாணவர்கள் தங்கள் உயர் கல்விக்காக அண்மைய கிராமங்களுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதுடன் இதற்காக நாளாந்த செலவினங்களையும் பெற்றோர்கள் எதிர் நோக்குகின்றனர். அதிகாலை 5.3௦க்கு செல்லும் பஸ்ஸினை தவறவிடும் பட்சத்தில் அன்றைய நாளின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் இம்மாணவர்களுக்கு இல்லாமல் ஆகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு மாணவர்கள் இதன் காரணமாக தங்கள் கல்வி நடவடிக்கைகளை இடை நடுவில் கைவிட வேண்டிய நிலைமைகளும் இதன் மூலம் உருவாகின.
இது தொடர்பாக குடிவில் பிரதேச மக்கள் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியியலாளர் மன்சூர் அவர்களிடம் குறிப்பிட்டதனைத் தொடர்ந்து
கடந்த 03/11/2016 அன்று நடைபெற்ற இறக்கமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொறியியலாளர் மன்சூர் இவ்விடயம் தொடர்பில் வலயக்கல்விப் பணிப்பாளர் சஹ்துல் நஜீம் அவர்களிடம் வினவியபோது இவ்விடயம் தொடர்பில் சகல முயற்சிகளையும் செய்து இம்மாணவர்களின் நன்மைக்காக குடிவில் அல் ஹிறா வித்தியலயத்தினை தரம் ஒன்பதிற்கு தரமுயர்த்த நடவடிக்கை மேற்கொள்வதாக வலயக் கல்விப் பணிப்பாளர் சஹ்துல் நஜீம் குறிப்பிட்டார்.
குடிவில் அல் ஹிறா வித்தியாலயம் தரமுயர்த்தப்படுவதன் மூலம் குடிவில் பிரதேச கல்வியில் ஒரு திருப்பம் தோற்றுவிக்கப் படும் என்பதே உண்மை.