அபு அலா -
கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 19 மருந்தாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்குவதில் சில சிக்கல் நிலை தோன்றியுள்ளதால் அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் நேற்று புதன்கிழமை (09) வழங்க முடியாமல் போனதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முகம்மட் நஸீர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய அரசாங்கத்தினால் புதிதாக நியமிக்கப்பட்ட 480 மருந்தாளர்களில் 19 மருந்தாளர்கள் கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 56 மருந்தாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் 19 பேர் மாத்திரம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலைமையில், கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் கடந்த 10, 15 ஆண்டுகளாக கடமையாற்றி வருகின்ற வெளி மாகாணங்களைச் சேர்ந்த 17 மருந்தாளர்கள் தங்களின் சொந்த மாகாணங்களுக்கு செல்லவதற்கான இடமாற்றத்தையும் கோரியுள்ளனர். அவர்களையும் நாங்கள் விடுவிப்பு செய்யவேண்டிய தேவையும் உள்ளது.
இவ்வாறு செல்கின்றவர்களின் வெற்றிடத்திற்கே புதிதாக நியமிக்கப்படவுள்ள 19 பேரும் நியமிக்கப்படவுள்ளனர். இதில் 02 பேர் மாத்திரமே மேலதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் அதே மருந்தாளர்களுக்கான வெற்றிடங்கள் மீண்டும் காணப்படுகின்றதாகவும் கூறினார்.
இருந்த போதிலும் புதிதாக நியமிக்கப்படவுள்ள மருந்தாளர்களுக்கான நியமனக்கடிதங்களை நாளை வெள்ளிக்கிழமை (11) வழங்கி வைக்க தீர்மாணித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முகம்மட் நஸீர் தெரிவித்தார்.