க.கிஷாந்தன்-
நுவரெலியா கலுகலை அபேபுர பகுதியில் 05.11.2016 அன்று சனிக்கிழமை, மண்மேடொன்று சரிந்து விழுந்தத்தில், அதில் புதையுண்ட ஐவர், மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நுவரெலியா கலுகலை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அபேபுர பகுதியில், புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில், பணியாட்கள் கடமையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
இதன்போது, அங்கிருந்த மண்மேடொன்று சரிந்து விழுந்தத்தில், ஐவர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றி மற்றையவர்கள், இயந்திரங்களின் உதவியுடன் மண்ணை அகற்றி, புதையுண்டிருந்த ஐவரையும் மீட்டு, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதில், ஒருவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால், அவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியரொருவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.