நேற்றுமுன்தினம் இனவாதிகளால் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான குருநாகல், நிக்கவரட்டிய பள்ளிவாசலுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் நேற்று இரவு நேரில் விஜயம்செய்து சம்பவம் தொடர்பில் ஆராய்ந்தார்.
இதனையடுத்து குறித்த பள்ளிவாசல் நிர்வாகத்துடன் கலந்துரையாடலொன்றில் அவர் ஈடுபட்டதுடன் இதில் பள்ளிவாசலுக்கான பாதுகாப்பை வழங்குதல் தொடர்பாகவும்,இனி வரும்காலங்களில் இவ்வாறான நாசகார செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்தார்.
அத்துடன் குறித்த சம்பவம் தனக்கு மிகவும் கவலை அளிப்பதாக தெரிவித்த அவர் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசவுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் மூலம் நாட்டையும் நல்லாட்சியையும் சீர்குழைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த பாடம் விரைவில் புகட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பகுதியில் சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகவும் அவர்களது ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சில இனவாதிகளால் இவ்வாறான நாசகார செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மஸ்தான் எம்பியிடம் தெரிவித்தனர்.