கிழக்கு மக்களின் மிகப் பெரும் அரசியல் சாபக்கேடாக கணிக்கப்படுகிறது!...

எஸ்.அஷ்ரப்கான்-

தேர்தலை இலக்கு வைத்து கூட்டங்களையும், மாநாடுகளையும் நடாத்தும் ‘தேசியத் தலைவர்களுக்கு’ தாங்கள் நினைக்கின்ற அரசியல் சுய இலாபத்தை ஈட்டிக் கொடுக்கும் ’பொன் முட்டை போடும் வாத்தாக’ கிழக்கு மாகாணமும், குறிப்பாக அம்பாறை மாவட்டமும் அமைந்திருக்கிறது. இது கிழக்கு மக்களின் மிகப் பெரும் அரசியல் சாபக்கேடாக கணிக்கப்படுகிறது என நாபீர் பௌண்டேசன் ஸ்தாபகத் தலைவரும் சமூக சேவையாளருமான யு.கே. நாபீர் இன்று (02) தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் வரவும் உள்ளுராட்சி தேர்தலும் தொடர்பாக அவர் விடுத்தள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அமைச்சர்களான ரவூப் ஹக்கீமும், றிஷாத் பதியூதீனும் அம்பாறையில் சூறாவளிப் பயணம் ஒன்றை மேற்கொண்டு போட்டி போட்டுக் கொண்டு நாடா வெட்டி திறப்பு விழாக்களையும்,மக்கள் சந்திப்புகளையும்,கட்சி புனரமைப்பு வேலைகளையும் நடாத்துகிறார்கள். போதாக் குறைக்கு தற்போது வீட்டுக்கு வீடு மரம் வேறு, என்றால் நாட்டில் தேர்தல் ஒன்று நெருங்கி வருகிறதென சாதாரண பாமரனும் அறிந்து கொள்ளக் கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. மக்களை மடையர்களாய் எண்ணும் ஏமாற்று அரசியல் மலிந்து விட்ட காலப்பகுதியில் அரசியல் ரீதியான படையெடுப்பிற்கு இசைவான ஒரு மாவட்டமாக அம்பாறை திகழ்ந்து கொண்டிருக்கிறது.

நிலவரம் இப்படியிருக்கையில், சத்தியத் தலைவர் என வர்ணிக்கப்படும் றிஷாத் பதியூதீன் அவர்களும் கிழக்கையும் அம்பாறையும் குறி வைத்து அரசியல் வேட்டையாடுவதில் மும்முரமாய் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் இருபத்தி நான்கு மணித்தியால கால அவகாசத்தில் விரட்டியடிக்கப் பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் இன்று வரை தீர்க்கமான நடவடிக்கைகளை செயற்படுத்த தவறியிருக்கும் றிஷாத் உட்சுவரை மெழுகாமல் புறச் சுவரை மெழுக முன் வந்திருப்பதன் அவசியம் பற்றி அலசினால் அது வெறும் அரசியல் அதிகாரங்களுக்காகவே என இலகுவில் இனம் கண்டு கொள்ள முடியும்.

சந்திரிக்கா அம்மையார் ஆட்சியில் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து கொப்பு விட்டு கொப்பு தாவி வன்னி புனர்வாழ்வு மீள் குடியேற்ற அமைச்சை பொறுப்பெடுத்த றிஷாத் அன்றிலிருந்து இன்று வரை அம்மக்களுக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவில்லை. மூன்று தசாப்த வடுக்களோடு அம்மக்கள் இன்னும் விடிவேயில்லாத துன்பியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அம்மக்களோடு மக்களாக கையில் ஒரு ‘சொப்பிங் பேக்குடன்’ அகதியாய் வந்த அமைச்சர் றிஷாத் அவர்களின் வாழ்வில் இன்று ஒளி வசந்தம் வீசுவது எப்படியென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சுய இலாப அரசியலுக்காய் அப்பாவி மக்களை அடகு வைக்கும் அரசியல் நாடகமே எங்குமே அரங்கேறிக் கொண்டிருப்பதை மக்கள் புரிந்து விட்டார்கள். அதனால் தான் அரசியல் செய்யும் திசைகளை மாற்றி மக்களை ஆசையூட்டி கபளீகரம் செய்து கொண்டிருப்பதை காண முடிகிறது.

அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் சேவையை உயிர் நாடியாய் நினைக்கும் என்னால் வன்னி மண்ணில் சென்று தேர்தலில் களமிறங்க முடியும். அல்ஹம்துலில்லாஹ், அதற்கான வல்லமை எனக்கு இருக்கிறது. இருப்பினும் காலா காலமாக பொய் மூட்டை கட்டிக் கொண்டு வருகிற அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படும் அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் உயர்விலும்,முன்னேற்றத்திலும் மிகுந்த கரிசனையோடு உழைக்க வேண்டிய தேவை எம்மைப் போன்றவர்களுக்கு இருக்கிறது. இன்ஷா அல்லாஹ், ஒற்றுமை எனும் பலத்துடன் எம் மக்களின் நிலையான அரசியல் அங்கீகாரத்திற்காய் என்றென்றும் பாடுபடுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -