கோயிலுக்கு புனித யாத்திரை சென்ற தம்பதி ரயில்வே பிளாட்பாரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். பெற்றோர் இறந்தது தெரியாத அவர்களின் 3 வயது சிறுவன் அவர்கள் தூங்குகிறார்கள் என்று நினைத்து அவர்களின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதக் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ஈரன்ன தல்வார் மற்றும் மஞ்சுளா ஆகியோர் 3 வயது மகன் தேவராஜூடன் முனிராபாத்தில் உள்ள ஹூளிகம்மா கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனம் முடித்து கொண்டு முனிராபாத் ரயில் நிலையத்துக்கு நள்ளிரவில் வந்துள்ளனர். அங்கு மகனுடன் படுத்து தூங்கியுள்ளனர். காலை வெகு நேரமாகியும் தல்வார் மற்றும் மஞ்சுளா கண்விழிக்கவே இல்லை.
ஆனால் 3 வயது சிறுவன் தேவராஜ் எழுந்துவிட்டான். பிறகு தனது தாய், தந்தையரை எழுப்பியுள்ளான். அவர்கள் எழுந்திருக்கவில்லை. தூங்குகிறார்கள் என்று நினைத்த சிறுவன் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஓடி விளையாடிக்கொண்டிருந்தான். பின்னர் மீண்டும் வந்து தனது தாய், தந்தையரை எழுப்பினான். ஆனால் அவர்கள் எழுந்திருக்காததால் அழுதபடியே அவர்கள் அருகில் அமர்ந்தான். இதை பார்த்த ரயில்வே பயணிகள் சிலர் அச்சிறுவனை அழைத்து விசாரித்தனர். தாங்கள் கதக்கில் இருந்து ஹூளியம்மா கோயிலுக்கு வந்ததாக அவன் கூறி அழுதான். அவன் அழுகையை யாராலும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
இந்நிலையில் தம்பதியர் இருவரும் இறந்துவிட்டதை உறுதி செய்த பயணிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுவனிடம் விசாரித்தனர். இது குறித்து ரயில்வே போலீஸ் எஸ்.பி. கூறுகையில், ‘சிறுவனை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க முயற்சி செய்வோம். அவர்கள் ஏற்காதபட்சத்தில் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்க இருக்கிறோம்’ என்றார்.