வடக்கு- கிழக்கு இணைப்பு முஸ்லிம்களின் அரசியல் பலத்தை உடைத்தெறிந்து அரசியல் அநாதையாக்கி விடும்..!

அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை கரையோர மாவட்டத்தை எதிர்க்கின்ற கோடீஸ்வரன் போன்றோர் தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்கும் வரை வடக்கு- கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் சாத்தியப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

"தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் 'முஸ்லிம்கள் கோரி நிற்கின்ற கரையோர மாவட்டத்தை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அம்மாவட்டத்தை தென்கிழக்கு அதிகார அலகாக உள்ளடக்கப்படுவதை நாம் வன்மையாக எதிர்ப்போம். இதற்கு ஆதரவாக செயற்படும் எமது எந்த அரசாயல்வாதிகளானாலும், புத்திஜீவிகளானாலும் அவர்களை நாம் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் பார்ப்போம். அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்ட தமிழ் மக்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர்' என்று சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

கரையோர மாவட்ட கோரிக்கையானது இன்று நேற்று முன்வைக்கப்பட்டு வரும் ஒரு கோரிக்கையல்ல. 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசு இலங்கையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கென அமைக்கப்ட்ட மொறகொட ஆணைக்குழுவின் விதைப்புரையே கல்முனை கரையோர மாவட்டமாகும். அரசியலில் குழந்தைகளாக இருப்பவர்களுக்கு இந்நீண்ட வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாதென்று கூறி தீர்வு கோருகின்ற தமிழர்கள் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் சிங்கள நிர்வாக மொழி நிர்வாகத்தின் கீழ் சேர்ந்திருக்க விரும்புவது ஆச்சர்யத்தை தருகின்றது. வவுனியாவில் சிங்கள அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டபோது அயற்கெதிராக குரல் கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக சிங்கள இனத்தவர் அரசாங்க அதிபராக வருவதை ஆதரிப்பதும் பெரும் பகைப்புலனாகும்.

1958ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற இலஙகை தமிழரசு கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மட்டக்களப்பிற்கு தெற்கே முஸ்லிம் மக்களுக்கு சுயாட்சி பிரதேசமொன்று உருவாக்கப்படுதல் வேண்டும் என்ற தீர்மானமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இத்தீர்மானத்தை மைய்யப்படுத்தியே தென்கிழக்கு அதிகார அலகு எனும் கோரிக்கையை அஷ்ரப் முன்வைத்தார். இதனை விளங்கிக்கொள்ள மறுக்கும் கோடீஸ்வரன் இதற்கெதிராக தமிழ் மக்களை ஒன்று திரட்டி போராடப்போவதாக அறிவித்துள்ளார்.

தந்தை செல்வாவின் அரசியற் கோட்பாட்டை இன்று ஒரு சிலர் மாத்திரமே முன்னெடுத்து வருகின்றனர். சம்பந்தன் ஐயா, மாவை சேனாதிராசா, சமந்திரன் போன்றோர் தமிழ்- முஸ்லிம் நல்லுறவை கட்டியெழுப்ப வேண்டும்- அதிகாரப்பகிர்வில் நீதி, நியாயம், சமத்துவம் பேணப்ட வேண்டுமென்ற நல்லெண்ணத்தைக்காட்டி வருகின்றனர்.

அதன் வெளிப்பாடாகவே இணைந்த வட-கிழக்கு சுயாட்சியில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்குவோம் என்று சம்பந்தன் ஐயா அறிவித்துள்ளார். அவரது நல்லெண்ணத்தை வரவேற்கும் அதே நேரம் நீடித்த சமாதான சகவாழ்வுக்கு முதலமைச்சர் பதவி தீர்வாகாது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

வடக்கும், கிழக்கும் மீண்டும் இணைக்கப்பட்டு அங்கு சுயாட்சி முறையிலான சமஷ்டிக் கட்டமைப்பை கொண்டு வரவேண்டுமென்ற கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்து வருகின்றது. இக்கோரிக்கையானது கிழக்கிலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலத்தை உடைத்தெறிந்து அரசியல் அநாதையாக்கும் விதமாக அமைந்து விடும். 

அம்பாறை மாவட்ட தமிழர்கள் அனுபவத்து வரும் அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், பாரபட்சங்கள், அநீதிகள், துன்ப துயரங்கள், வேதனைகள், இழப்புக்கள் எண்ணிலடங்காதவை என்று கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவற்றை கட்டவிழத்து விட்டவர்கள் சிங்களவர்களா முஸ்லிம்களா என்பதை குறித்துக்காட்ட அவர் முன்வரவில்லை. இங்குள்ள முஸ்லிம் மக்களை மிக மோசமாக சித்தரித்துக்ககாட்டுகின்ற பண்பு அம்பாறை மாவட்டத்தில் அநேக தமிழ் அரசியல்வாதிகளிடம் மிகவும் குடிகொண்டிருக்கின்றது. இவர்கள் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் போன்று சித்தரித்துக்ககாட்ட முற்பட்டு நிற்கின்றனர். முஸ்லிம்கள், தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாடியதாகவோ ஒடுக்கியதாகவோ எவரும் கூற முடியாது.

ஆயுதம் தாங்கிய தமிழ் குழுக்கள் ஆட்சி புரிந்த காலங்களில் வட-கிழக்கு முஸ்லிம்கள் அனுபவித்த அடக்குமுறுகள், ஒடுக்குமுறைகள் , பாரபட்சங்கள், அநீதிகள், துன்ப துயரங்கள், வேதனைகள், இழப்புக்கள் எண்ணிலடங்காதவை என்பதனை மறைத்து பேசுவது ஏன் என்று கேட்க விரும்புகிறேன்.

இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக இருந்தவன் நான். 72 உறுப்பினர்களில் 17 பேர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அங்கத்துவம் பெற்றிருந்தனர். கிழக்கில் 33 வீதமாக இருந்த முஸ்லிம்கள் வடக்கு- கிழக்கு இணைப்பு காரணமாக17 வீதமாக குறைக்கப்பட்டனர். இத்தகைய அநீதி கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு மீண்டுமொரு முறை ஏற்பட்டு விடக்கூடாது. 

வடக்கில் மாவை சேனாதிராசாவும், சுமந்திரனும் தமிழ்-முஸ்லிம் ஐக்கியம், புரிந்துணர்வு, சமத்துவம் பற்றி பேசுவது போல் கிழக்கிலுள்ள தமிழர் அரசியல்வாதிகள் நடந்துகொள்ள மறுப்பது ஏன்? கோடீஸ்வரனை போன்ற பிரதிநிதிகள் தமிழ் சமூகத்தில் இருக்கும் காலம் வரைக்கும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் சாத்தியப்படாது" என்று மஜீத் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -