அதிபர் தரம் -3 பரீட்சைப்பெறுபேறுகள் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பப்படுமா..?

முசலியூர். கே.சி.எம்.அஸ்ஹர்-
டந்த வருடம் நடைபெற்ற தரம் 111 அதிபர் சேவைப் போட்டிப்பரீட்சைக்கு ஏறத்தாழ 20000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 4079 பேர் சித்தியடைந்துள்ளதாக பரீட்சைத் திணைக்களம் கல்வியமைச்சிக்கு அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் கல்வியமைச்சில் நேர்முகப்பரீட்சை இடம்பெற்றது. இவர்களில் இருந்து 3800 பேர் மாத்திரம் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான நியமனக்கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இவர்களுக்கான பயிற்சிகளும் ஆரம்பமாக உள்ளன.

மஹிந்த யுகத்தில் தரம் 11, தரம் 111 அதிபர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு போட்டிப்பரீட்சை நடைபெற்று பின்னர் நியமனக்கடிதங்களும் அனுப்பப்பட்டிருந்தன. இவ்வேளை அக்கரைப்பற்று வலயத்தில் இருந்து தரம் 11 அதிபர் போட்டிப்பரீட்சைக்கு தோற்றிய ஒரு குழுவினர் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கருதி வழக்குத்தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து தரம்111 க்கு தோற்றி பாதிக்கப்பட்டோரும் வழக்கிட்டு நிவாரணத்தைப் பெற்றுக்கொண்டனர். 

இச்சம்பவம் அன்றைய கல்வி அமைச்சிற்குக் கிடைத்த தோல்வியும், பாடமுமாகும். 1000 ரூபாய் செலுத்தி 2015 ல் அதிபர் போட்டிப்பரீட்சைக்குத் தோற்றியோருக்கான பெறுபேறுகள் சட்டப்படி உத்தியோகபூர்வமாக அவர்களுக்கு அனுப்பப்படவில்லை. இது ஒரு அநீதியான செயற்பாடாகும். 

உத்தியோகபூர்வமாக பெறுபேறுகளைப் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பிய பின்னர். அவர்களில் இருந்து தகுதியானோரை நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பதே முறைமை. இங்கே ஒரு பரீட்சார்த்திக்கு தனது புள்ளிகளை அறியும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

இது நல்லாட்சி அரசில் ஏற்பட்டிருப்பது ஜீரணிக்க முடியாதுள்ளது. பரீட்சைப் பெறுபேறுகள் அனுப்பப்பட்டிருந்தால் பரீட்சார்த்திகள் பாடரீதியான அடைவுகளை அறிந்து கொண்டு அடைவுமட்டம் குறைந்த பாடங்களை எதிர்காலத்தில் முயற்சிமூலம் கூட்டிக்கொள்ளலாம். பரீட்சைப்பெறுபேறுகள் தமக்கு அறிவிக்கப் படாமையால் விரக்தியடைந்த பலர் இவ்வாறான போட்டிப்பரீட்சைகளை எழுதுவதிலிருந்து ஒதுங்கி உள்ளனர்.

பரீட்சை ஆணையாளருக்கு எதிராக ஒரு வழக்கை இட்டுத்தான் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளலாம் போல நிலைமை உள்ளது. பரீட்சைப்பெறுபேறுகள் அனுப்பப்படாமைக்கான மர்மங்கள் துலங்குமா? இவ்விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -