இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள பசில் ராஜபக்சவின் இல்லத்தில், புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் இந்தச் சந்திப்பு நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இலங்கை இராணுவத்தில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர், பசில் ராஜபக்சவுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக அரசாங்கத்தின் உயர் மட்ட உறுப்பினர்கள் கண்டறிந்துள்ளனர்.
பசில் ராஜபக்சவுடன் அந்த அதிகாரி நீண்ட தொலைபேசி உரையாடல்களை மேற்கொள்வதும் கண்டறியப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்சவுடன் நெருக்கமான தொடர்பை வைத்துள்ள இராணுவ அதிகாரியே, இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகளுடனான சந்திப்புக்கு ஏற்பாடுகளை செய்திருப்பதாக அரசி்யல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை இராணுவத்தில் உள்ளவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை, இலங்கையின் இராணுவச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
