பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்! உதுமாலெப்பை


சலீம் றமீஸ்-

மது எதிர்கால சந்ததியிள் வளமான வாழ்வுக்கு பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்!

- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை

நமது எதிர்கால சந்ததிகளின் வளமான வாழ்வுக்கு பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டில் க.பொ.த.சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும்,கற்றுக் கொடுத்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் 'தடம் பதித்தோர்' மகிழ்ச்சி பெரு விழா பாடசாலையின் முன்னாள் அதிபரும், அறபா வித்தியாலயத்தின் அதிபருமான ஏ.எம்.அன்சார் தலைமையில் (27) நடைபெற்றது. இதில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அல்-அர்ஹம் வித்தியாலய மாணவர்கள் கடந்த க.பொ.த.சாதாரண பரீட்சையில் நூறு வீதம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று நம் எல்லோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அதனடிப்படையில் எமது பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.இப் பாடசாலை சுனாமி அனர்த்ததினால் முற்றாக பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இன்றி பல ஆண்டுகள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வலய மட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டத்திலும் பல சாதனைகளையும் வரலாறு படைத்ததுடன், பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது. இந்த அடைவுகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முன்னாள் அதிபர் அன்சார் மற்றும் ஆசிரியர் குலாம், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களையும் மக்கள் சார்பில் பாராட்டுகின்றேன். புதிய அதிபராக கடமை ஏற்றுள்ள ஏ.எம்.எம்.இத்ரீஸ் தொடர்ந்தும் இப் பாடசாலை நல்ல பெயருடன் திகழ்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.கல்விக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் கல்வியாளர்களின் பிள்ளைகளை இறைவன் சிறந்தவர்களாக உருவாக்கியுள்ளான். கல்வியாளர்கள் மரணித்த பின்பும் நன்மை பெறக் கூடிய வகையில் அவர்களின் அர்ப்பணிப்புக்கள் அமைந்து விடுகின்றன.

தேசிய காங்கிரஸ் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாவுக்கும், எனக்கும் அரசியல் அதிகாரம் கிடைத்த போதெல்லாம் எங்களால் முடிந்தளவு நமது பிராந்தியத்தில் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல் பட்டுள்ளோம்.அரசியல் மாற்றங்கள் எப்போதும் ஏற்படலாம். தேர்தலில் வெற்றி அடைபவர்கள் தோல்வி அடைவதும், தோல்வி அடைபவர்கள் வெற்றி அடைவதும் தான் நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.அரசியல் ரீதியில் நாங்கள் ஒரு போதும் பொறாமை கொள்வதில்லை. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு அமைச்சுப் பதவி கிடைத்ததும் அவருடைய நல்ல பணிகளுக்கு எங்களால் முடிந்தளவு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.

நமது பிரதேச பாடசாலைகள் அன்று வளத் தட்டுப்பாட்டுடனும்,ஆசிரியர் தட்டுப்பாட்டுடனும் இயங்கி வந்தன.தற்போது முடிந்தளவு இவைகளை நாம் நிறைவு செய்து கொடுத்திருக்கின்றோம். உலகில் வாழும் காலங்களில் எங்களால் முடிந்தளவு கல்விக்கும், மக்களுக்கும் பணி செய்ய வேண்டும். எமது ஊருக்கு அண்மையில் அமைந்துள்ள பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் 60 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ள நிலையில் நமது மாணவர்கள் தங்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் நீண்ட காலமாக கஷ்டப்படுகின்றனர்.போராட்டங்கள் நடாத்துகின்றனர். அண்மையில் கூட பொத்துவில் ஆத்திமுனை கவிவாணர் அப்துல் அஸீஸ் வித்தியாலயத்தில் குறைபாடாகவுள்ள ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பொது மக்கள்,மாணவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டங்கள் செய்ததுடன்,பாடசாலையினை பூட்டி உள்ளனர். இந்த விடயமாக கிழக்கு மாகாண சபைக்கும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சரினதும் விஷேட கவனத்திற்கு தெரிவித்துள்ளோம்.விரைவில் பொத்துவில் பிரதேசத்துக்கான ஆசிரியர்களை நியமிப்பதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் உறுதியளித்துள்ளார். நமது பிள்ளைகளின் கல்வி விடயத்தில் அநீதி இழைப்பவர்கள் இந்த உலகத்தில் அதற்கான அனுகூலங்களை பெறுவார்கள் எனவும் மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -